Explained: தீபாவளிக்குள் Gen Z-க்கு 3 திட்டங்கள், தனிச் சலுகைகள்!! PSU வங்கிகளின் மாஸ்டர் பிளான்
PSU Banks: புதிய திட்டத்தின் கீழ், சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் கடன் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று நிதித் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய பொதுத்துறை வங்கிகள் இலக்கு கொண்டுள்ளன.
PSU Banks: இன்றைய இளைய சமுதாயம்தான் நாளைய இந்தியாவை உருவாக்கப்போகிறது. ஆகையால், அவர்களின் தேவைகளை அறிந்து சேவைகளை வழங்க அனைத்து துறைகளும் முயன்று வருகின்றன. இதில் வங்கித் துறையும் விதிவிலக்கல்ல. பொதுத்துறை வங்கிகள், சேமிப்புக் கணக்குகள் முதல் கடன்கள் வரை பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி 'ஜென் இசட்' (Gen Z) தலைமுறையினரைக் கவர முயற்சி செய்து வருகின்றன.
பொதுத்துறை வங்கிகளின் புதிய உத்தி
பொதுத்துறை வங்கிகள் தற்போது இளைஞர்களை வாடிக்கையாளர்களாக ஈர்ப்பதற்கான புதிய உத்தியொன்றை உருவாக்கி வருகின்றன. வெறும் சேமிப்புக் கணக்குகளைத் தொடங்குவதுடன் மட்டும் உறவைச் சுருக்கிக்கொள்ளாமல், முதலீடுகள், காப்பீடு மற்றும் கடன்கள் போன்ற இளைஞர்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சேவைகளை வழங்குவதன் மூலம் அவர்களுடன் நீண்டகாலத் தொடர்பை ஏற்படுத்த இந்த வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
இதையொட்டி, தீபாவளிக்கு முன்னதாக இளைஞர்களுக்காக மூன்று புதிய நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கிகள் தயாராகி வருகின்றன.
இந்தத் திட்டங்கள் பின்வரும் 4 முக்கிய பிரிவுகள் தொடர்பான அம்சங்களைக் கொண்டிருக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன:
- சேமிப்பு,
- முதலீடு,
- காப்பீடு மற்றும்
- கடன்
ஒவ்வொரு பொதுத்துறை வங்கியும் தங்களுக்கு ஏற்ற கூடுதல் சலுகைகளை இதில் இணைத்துக்கொள்ளலாம். மேலும், வங்கிச் சேவைகள் மற்றும் நிதி வாய்ப்புகள் குறித்த தகவல்களை இளைஞர்கள் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளும் வகையில் ஒரு டிஜிட்டல் தளமும் உருவாக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம்
முன்னதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகள் இளைஞர்களுடன் நீண்டகால உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார், அதைத் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வங்கிச் சேவைகளை எளிதில் சென்றடையும் வகையில் மாற்றுவதும், தனிநபர்களை முறையான நிதி அமைப்பின் ஒரு பகுதியாக மாற ஊக்குவிப்பதுமே இதன் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் கடன் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று நிதித் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய பொதுத்துறை வங்கிகள் இலக்கு கொண்டுள்ளன. இந்தத் திட்டங்களின் அடிப்படை அம்சங்கள் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும். அதே வேளையில், ஒவ்வொரு வங்கியும் கூடுதல் சலுகைகளை வழங்கக்கூடும்.
இளைஞர்களுக்கு கட்டண விலக்குகள் மற்றும் பிற சலுகைகள்
- இளைஞர்களை வங்கிக் கணக்குகளைத் தொடங்க ஊக்குவிக்க, கட்டண விலக்குகள் மற்றும் பிற சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்ன.
- இலவச டிமேட் (Demat) கணக்குகள் மற்றும் நிதித் திட்டமிடல் குறித்த ஆலோசனைகள் இதில் அடங்கலாம் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இருப்பினும், இந்தச் சலுகைகளுக்கான இறுதி விதிமுறைகள், நிபந்தனைகள் அல்லது தகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கடன் மதிப்பீடு, நிதி விழிப்புணர்வு
இளைஞர்களுடன் நீண்டகால உறவை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு நிதியமைச்சர் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், நல்ல கடன் மதிப்பீட்டைப் பராமரிப்பதன் (Credit Score) முக்கியத்துவம் மற்றும் சரியான நேரத்தில் கடன் தவணைகளைச் செலுத்துவதன் அவசியம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வங்கிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த முயற்சி, இளைஞர்கள் தங்கள் நிதியைச் சிறப்பாக நிர்வகிக்கவும், எதிர்கால நிதித் தேவைகளுக்குத் தயாராகவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை
புதிய முன்னெடுப்பின் கீழ், 16 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு வங்கி முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குச் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய இந்த ஒரு மாத கால பிரச்சாரம், இளைஞர்களை முறையான வங்கிச் செயல்பாட்டுச் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய வங்கிகள் சங்கம் (IBA) இந்தப் பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கிறது.
பொதுத்துறை வங்கிகள் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்த காரணம் என்ன?
டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்தும் இளம் வாடிக்கையாளர்கள், வங்கித் துறைக்கு மிக முக்கியமானவர்களாக மாறியுள்ளனர். இவர்களது தேவைகள் பாரம்பரிய வங்கிச் சேவைகளைத் தாண்டி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், சேமிப்பு, முதலீடுகள், காப்பீடு மற்றும் தொழில் முயற்சிகளுக்கான கடன் வசதிகள் என விரிந்துள்ளன.
இந்த முன்னெடுப்பின் மூலம், பொதுத்துறை வங்கிகள் இளம் வாடிக்கையாளர்களுடன் ஆரம்பத்திலேயே ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள முயல்கின்றன. இதன் மூலம், அவர்கள் கல்வியை முடிக்கும்போதும், பணியைத் தொடங்கும்போதும் அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்கும்போதும், தொடர்ந்து இந்த வங்கிகளின் சேவைகளையே பயன்படுத்துவதை உறுதி செய்ய முடியும்.
நிதி ரீதியாக வாழ்வின் முக்கிய காலகட்டத்திலேயே இளைஞர்களுடன் நம்பிக்கையின் அடிப்படையில் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது, அவர்களது நீண்ட நாள் நிதி பயணத்தில் உடன் பயணிக்க உதவும் என வங்கிகள் நம்புகின்றன.