TN Pensioners Alert: தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பணிகளைத் துரிதப்படுத்தவும் கருவூலம் மற்றும் கணக்குத் துறை முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ஓய்வூதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் நடைமுறையில் ஏற்பட்டு வந்த முரண்பாடுகளைக் களையும் நோக்கில், இனி நேரடி மனுக்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், முழுமையாக ஆன்லைன் வழியே மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருவூல இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சில துறைகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வருவதற்கு முன்பாகவே, நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட ஓய்வூதியக் கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்படுவதாகவும், இதனால் ஓய்வூதிய முன்மொழிவுகளைச் செயல்படுத்துவதில் தேவையற்ற குளறுபடிகளும் முரண்பாடுகளும் ஏற்படுவதாகவும் தமிழ்நாடு தலைமை கணக்காயர் கருவூலத்துறையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதனைத் தொடர்ந்து, ஓய்வூதியப் பணிகளைச் சீரமைக்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
OPPAS தளம் மட்டுமே கட்டாயம்: ஓய்வூதிய முன்மொழிவுகள் காலதாமதமின்றி ஒரே சீரான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, வரும் நவம்பர் 2026 முதல் அனைத்து அசல் ஓய்வூதிய முன்மொழிவுகளும் இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நேரடி மனுக்கள் நிராகரிப்பு: நவம்பர் 2026 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ நேரடியாக தபாலிலோ அல்லது நேரில் கொண்டுவரப்படும் எந்தவொரு ஓய்வூதிய மனுவும் தலைமை கணக்காயர் அலுவலகத்தால் எவ்வித பரிசீலனையும் இன்றி உடனடியாக திருப்பி அனுப்பப்படும்.
திருத்தப்பட்ட மனுக்களுக்கும் ஆன்லைன் முறை: ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் திருத்தங்கள் கோரும் திருத்தப்பட்ட ஓய்வூதிய முன்மொழிவுகளும் தேவையான அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் OPPAS தளம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகளை எவ்வித விலகலும் இன்றி தங்களின் கீழ் இயங்கும் அனைத்து வரைவு மற்றும் வழங்கும் அலுவலர்களும் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மண்டல இணை இயக்குநர்கள், சம்பளக் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் ஓய்வூதியதாரர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்கள் எவ்வித தேவையற்ற தாமதமும் இன்றி விரைவாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.