பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained
சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் ராஜீவ் - சோனியா காதல் குறித்து ராகுல் காந்தி பேசியதை பாஜக விமர்சித்த நிலையில், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சிவன் - பார்வதி சிற்பங்களை பகிர்ந்து பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதன் முழு அரசியல் பின்னணி இதோ
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான ராகுல் காந்தி பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளை கடுமையாக சாடுவதும், விமர்சிப்பதும் புதிதல்ல. இருப்பினும் அர்த்தநாரீஸ்வரர் புகைப்படத்தை பகிர்ந்து பாஜக - ஆர்எஸ்எஸ் அமைப்புகளை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியின் இன்றைய சமூக வலைதளப் பதிவின் பின்னணி என்ன?, அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் மூலம் அவர் விளக்க விரும்புவது என்ன?, இந்த விவகாரத்தின் அரசியல் பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி.. Explained!
சோனியா - ராஜீவ் குறித்த எழுந்த சர்ச்சை
சோனியா காந்தியின் Belonging: A Journey Of Love என்ற சுயசரிதை புத்தகம் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், தகவல்களை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.
அதேநேரத்தில் பல்வேறு தரப்பினர் வரவேற்கவும் செய்தனர். சோனியா காந்தியின் புத்தகம் விற்பனையிலும் அசத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன.
இந்தச் சூழலில், கடந்த வாரம் இந்த புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தி மற்றும் தாயார் சோனியா காந்தி இடையேயான அன்பு, நெருக்கம் குறித்து பகிர்ந்திருந்தார்.
உணவு சாப்பிடும்போது தனது தந்தையின் மடியில் தாய் அமர்ந்திருப்பார் என்றும் சிறுவயதில் இதை சாதாரணமான விஷயமாக நினைத்ததாகவும் அவர் கூறியிருந்தார். நண்பர்களின் வீடுகளில் பெற்றோர் இவ்வாறு நடந்துகொள்ளாததைப் பார்த்து ஆச்சரியப்பட்டதாகவும் பகிர்ந்திருந்தார்.
இந்தப் பேச்சுக்கு அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சனம் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் ராகுலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன. அதேசமயம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவது தவறல்ல என்றும், உறவுகளில் சமத்துவம் முக்கியம் என்றும் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசியது.
ராகுல் விமர்சித்த முக்கிய பாஜக தலைவர்கள்
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா: மன்னிக்கவும் மேடம் (சோனியா), உங்களின் சிறப்பான நாளில் கூட, உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல் அவரால் (ராகுலால்) இருக்க முடியவில்லை. இந்த நாட்டுக்கு இது ஏற்கெனவே தெரிந்துவிட்டது. நீங்களும் இப்போது புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். இந்த பிராடக்டை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தினாலும் பலனில்லை.
உத்தர பிரதேச பாஜக தலைவர்: தாயாருக்கு அளிக்க வேண்டிய மரியாதை பற்றிய புரிதல் இல்லை. பெண்களின் கண்ணியம் குறித்த அக்கறை இல்லை. தாய்நாட்டின் மரியாதை குறித்தும் கவலை இல்லை.
ராகுல் காந்தியின் பதிவுகள் உணர்த்துவது என்ன?
- இந்தச் சூழலில்தான் ராகுல் காந்தியின் நவம்பர் 17 மற்றும் இன்றைய X பதிவுகளை புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய பதிவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை கடுமையாக விமர்சித்தார். இந்தியாவின் ஆன்மீக மற்றும் மத மரபுகளைப் புரிந்துகொள்ளாதவர்கள் என அவர்களை சாடினார்.
- இதுகுறித்து அவரது பதிவில், "குறுகிய மனப்பான்மை, பேராசை, சாதியவாதம், ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள்" என தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
- கடந்த நவம்பர் 17ஆம் தேதி அவரது பதிவில், "பாஜக - ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் இதயங்களில் பயம், கோபம், வெறுப்பு ஆகியன அன்பை உணர்வதில் இருந்தும், வெளிப்படுத்துவதில் இருந்தும் அவர்களை தடுக்கும் ஒரு வலையை பின்னியுள்ளன.
- ஒரு உண்மையான இந்துவாக, அவர்களை இந்த வலையில் இருந்து விடுவிப்பது என் கடமையாகும். அப்போதுதான் அவர்களும் தங்கள் வாழ்வில் அன்பின் மூச்சடைக்க வைக்கும் அழகையும் ஆனந்தத்தையும், உடன் இருப்பவர்களையும் உணரத் தொடங்குவார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.
- நவம்பர் 17ஆம் தேதி பதிவில் சிவபெருமானின் மடியில் பார்வதி அமர்ந்திருக்கும் சிற்பத்தை ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார். அதேபோல், இன்றைய பதிவில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அர்த்தநாரீஸ்வரர் உருவம் ஏன்?
- சிவனுள் இணைந்த பார்வதி ஒரே உருவில் இணைந்திருக்கும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம், ஆண் மற்றும் பெண் சக்திகளின் இணைவு, சமநிலை ஆகயவற்றைக் குறிக்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம், இந்திய ஆன்மீக மரபுகளின் ஆழத்தை அரசியல் விமர்சனத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார்.
- இந்திய ஆன்மீக மரபுகளில் அன்பு, சமத்துவம், ஒன்றிணைவு போன்ற கருத்துகள் முக்கிய இடம்பெறுகின்றன. அர்த்தநாரீஸ்வரர் வடிவம் என்பது ஆண், பெண் என்ற இரு சக்திகளும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்த்தும் தத்துவமாகக் கருதப்படுகிறது.
- இந்த பின்னணியில்தான், ராகுல் காந்தி இந்தியாவின் மத மற்றும் ஆன்மீக மரபுகளை ஆழமாக புரிந்துகொள்ளும்போது, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் சிந்தனைகள் அதற்கு எதிராக இருப்பதாகக் கூறி உள்ளார். மதத்தைப் பற்றிப் பேசுவது மட்டுமின்றி அந்த மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை அரசியல் அமைப்புகள் எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்பதையும் அவர் கேள்விக்குட்படுத்தி உள்ளார்.
- சிவன் - பார்வதி சிற்பத்தின் மூலம் ராஜீவ், சோனியாவின் மடியில் அமர்ந்து உணவருந்துவார் என்பதை கேலிக்குள்ளாக்கியது சாடும் வகையில், இந்து தெய்வங்களின் சிற்பங்களை ஒப்பிட்டு இதில் கேலி செய்ய எதுவுமே இல்லை என்பதை ராகுல் காந்தி விளக்கி உள்ளார்.
அரசியல் விமர்சனம் மட்டும்தானா...?
ராகுல் காந்தியின் இந்த பதிவுகளை வெறும் பாஜக - ஆர்எஸ்எஸ் மீதான அரசியல் விமர்சனமாக மட்டும் பார்க்க முடியாது. இந்து மத மரபுகளின் அடிப்படையில் அன்பு, சமத்துவம், ஆண் - பெண் இணைவு போன்ற கருத்துகலை அரசியல் விவாதத்திற்குள் கொண்டுவரும் முயற்சியாகவும் நாம் பார்க்க முடிகிறது.
ராஜீவ் - சோனியா குறித்த ராகுல் காந்தியின் பேச்சைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களு்ககு மத்தியில், இந்து ஆன்மீக மரபுகளை முன்வைத்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகள், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான கருத்தியல் மோதலுக்கு மேலும் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்திருக்கிறது.
மேலும் படிக்க | முகமது சிராஜ் நீக்கம்... 'இஸ்லாமியர்' என்பதால் இடமில்லையா...? உண்மை இதோ Explained