கேரளம் மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் 17 வயதான சிறுமி ஒருவர் ஆன்லைனில் வாங்கிய அழகுசாதன கிரீமை அதிகளவில் பயன்படுத்தியதில் கடுமையான சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளதாக PTI முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட அழகுசாதன கிரீம் ஆகும். இதை பயன்படுத்தியதை தொடர்ந்தே அந்த கேரள சிறுமி நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிக்கு அடிக்கடி ரத்த அழுத்தம் திடீரென குறைந்து, மயக்கம் போட்டு விழுவது வாடிக்கையாகி உள்ளது. அதேபோல், கடந்த ஓராண்டாக அந்த கிரீமை தொடர்ச்சியாக பயன்படுத்தியதன் விளைவாக கால்கள் வீக்கம் அடைந்துள்ளன.
கால்கள் வீக்கமடைந்துள்ளதால் அவரால் நடக்கவோ, படிக்கட்டுகளில் ஏறவோ முடியவில்லை. இதனால், அவர் மலப்புரம் Aster MIMMS Mother மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அந்த கிரீம் குறித்து மருத்துவர்கள் அந்த சிறுமியிடம் விசாரித்துள்ளனர். சருமத்தின் கரும்புள்ளிகள், பருக்கள், தோலின் நிறமாற்றம் ஆகியவற்றை போக்குவதற்கு இன்ஸ்டாகிராம் பிரபலங்களால் விளம்பரப்படுத்தப்பட்ட வீடியோக்களை பார்த்து அந்த கிரீமை ஆர்டர் செய்து வாங்கியதாக அந்த சிறுமி மருத்துவரிடம் கூறினார்.
அந்த கிரீமின் விற்பனையாளர்கள் இன்ஸ்டாகிராமில் கொடுத்த வாட்ஸ்அப் நம்பரை தொடர்புகொண்டு, அந்த கிரீமை ஆர்டர் செய்துள்ளார். ஆரம்பத்தில் தனது சருமத்தில் அதில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக நிறைய பாட்டில்களை வாங்கி உள்ளார்.
சிறுமி பயன்படுத்திய அழகுசாதன கிரீம்தான் அவரது நோய்க்கு பிரச்னை என்பதை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் சிறுநீரக மருத்துவர் எஸ். கௌரி PTI ஊடகத்திடம் பேசுகையில், அந்த சிறுமியின் ரத்தத்திலும், உடலிலும் உயிருக்கு ஆபத்தான பாதரசம் அதிகளவில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
பாதரசம் சிறுநீரகங்களின் வடிகட்டும் அலகுகளைக் கடுமையாகச் சேதப்படுத்தும் என மருத்துவர் தெரிவித்துள்ளார். membranous nephropathy என்ற தீவிரமான சிறுநீரக நோயால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்த மருத்துவர், இது சிகிச்சையளிக்கப்படாமல் அலட்சியப்படுத்தினால் மேலும் சிக்கலை ஏற்படுத்துக்கூடிய நோயாகும் என்றும் தெரிவித்தார்.
கிரீமில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சுமார் 12,500 ppm அளவு பாதரசம் அதில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற பாதரசம் கொண்ட பொருளை பயன்படுத்தியதால்தான் சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பயனளிக்கிறது என நம்பி, சருமத்தை பளபளக்க வைக்க வேண்டும் என்பதற்காக விளம்பர மோகத்தில் விவரம் அறியாமல் அழகுசாதன கிரீம்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளார். சரும பிரச்னை கொண்டவர்கள் சருமத்திற்கான மருத்துவரை ஆலோசித்து அதற்கேற்ப சிகிச்சை பெற்று, மருத்துவர் பரிந்துரைக்கும் கிரீமை பயன்படுத்தவும்.
தனது உடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அந்த கிரீமை தயாரிப்பவர்களிடம் சிறுமி தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் நேர்மறையான எந்த பதிலும் அவர்களிடம் இருந்து வரவில்லை என சிறுமி ஊடகங்களிடம் கூறியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் நிறுவனத்தின் மேலதிகாரிகளிடம் இதுகுறித்து தகவலளிப்பதாக கூறியதாகவும், ஆனால் நாளாக நாளாக அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை என சிறுமி தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த கிரீமை தயாரித்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க சிறுமியின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். இருப்பினும் அந்த சிறுமி பயன்படுத்திய கிரீமின் பெயரை பெற்றோர்கள் பொதுவெளியில் அறிவிக்கவில்லை. ஏனெனில் அந்த பொருளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சிறுநீரக நோய் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதே காரணமாகும்.
அதேநேரத்தில் கேரள அரசும் பாதரசம் அதிகளவில் உள்ள கிரீம்களின் விற்பனையை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது, அதேநேரத்தில் போலி அழகுசாதனப் பொருள்கள் குறித்தும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.