UP Elections 2027: தேர்தல் கூட்டணியில் விரிசலா? "நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல" -வெடித்த காங்கிரஸ் எம்.பி!
Uttar Pradesh Election News: உத்தரப் பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் மத்தியில் சமாஜ்வாதி கட்சி ஐந்து தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத், கூட்டணி தர்மம் மீறப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸுடன் ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
Uttar Pradesh Election News: உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் டெல்லியில் நடைபெற்று வரும் சூழலில், சமாஜ்வாதி கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைத் தன்னிச்சையாக வெளியிட்டிருப்பது எதிர்க்கட்சிக் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக சமாஜ்வாதி கட்சி தரப்பில் கூறப்பட்ட நிலையில், "நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல" என காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். அதே சமயம் கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை என்றும், பேச்சுவார்த்தைகள் சுமுகமாகத் தொடர்வதாகவும் இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் கூறி வருகின்றனர்.
"நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல" - இம்ரான் மசூத் ஆவேசம்
சமாஜ்வாதி கட்சியின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் எம்.பி-யும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் செயல் தலைவருமான இம்ரான் மசூத் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஒருபுறம் வேட்பாளர்களை அறிவிப்பது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது என அவர் சாடியுள்ளார்.
26 தொகுதிகள் வழங்குவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்திருப்பது குறித்துப் பேசிய அவர், "நாங்கள் உங்களிடம் தொகுதிகளைக் கேட்கவே இல்லையே, நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சொந்த மாவட்டமான சஹாரன்பூரில் உள்ள பெஹத் மற்றும் சஹாரன்பூர் தொகுதிகளில் காங்கிரஸ் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்த நிலையில், அங்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்திருப்பது மசூத்தின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. பாஜகவை எதிர்த்துப் போட்டியிடப் போகிறீர்களா அல்லது எங்களை எதிர்த்துப் போட்டியிடப் போகிறீர்களா என்பதை சமாஜ்வாதி கட்சி முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், இது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - அகிலேஷ் யாதவ் பேரணி.. புல்டோசர் மோதி 12 வயது சிறுவன் பலி!
பேச்சுவார்த்தை நடக்கும்போதே வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கடந்த திங்கட்கிழமை டெல்லியில் தொடங்கிய தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, மாநிலத்தின் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் முதற்கட்டமாக 26 தொகுதிகளை காங்கிரஸுக்கு வழங்க சமாஜ்வாதி கட்சி முன்வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், வெற்றி வாய்ப்புள்ள 26 தொகுதிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும், பரஸ்பர புரிதலுடன் பேச்சுவார்த்தை முன்னேறும் என்றும் பதிவிட்டிருந்தார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே பெஹத், சஹாரன்பூர், கைரானா, அம்ரோஹா மற்றும் லலித்பூர் ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. ராம்ப்பூர் காஸ், மதுரா, வாரணாசி கன்டோன்மென்ட், கோரக்பூர் நகரம் உள்ளிட்ட 26 தொகுதிகள் அடங்கிய பட்டியல் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உள்ளறைப் பேச்சுவார்த்தை விவரங்களை சமாஜ்வாதி தலைவர்கள் ஊடகங்களுக்குக் கசியவிட்டதாகவும் இம்ரான் மசூத் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டணியில் விரிசல் இல்லை - மூத்த தலைவர்கள் விளக்கம்
இம்ரான் மசூத்தின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் சூழலைத் தணிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது குறித்துப் பேசிய உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜேந்திர பால் கௌதம், "26 தொகுதிகள் என்ற எந்தவொரு ஃபார்முலாவும் இறுதி செய்யப்படவில்லை என்றும், 403 தொகுதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளார். பேச்சுவார்த்தை முடியும் வரை இரு கட்சித் தலைவர்களும் பொறுப்புடன் கருத்து தெரிவிக்க வேண்டும்" எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மறுபுறம், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சிவபால் யாதவ், "கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை என்றும், கூட்டணி உறுதியாகத் தொடரும் என்றும் நம்பிக்கை" தெரிவித்துள்ளார். அதேநேரம் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதாகவும், சமாஜ்வாதி கட்சி வழங்கும் தொகுதிகளைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும் சமாஜ்வாதி எம்.பி. எஸ்.பி. சிங் படேல் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
26 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் விவரம்
சமாஜ்வாதி கட்சி காங்கிரஸுக்கு முதற்கட்டமாக ஒதுக்கியதாகக் கூறப்படும் 26 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்.
- ராம்ப்பூர் காஸ் (Rampur Khas)
- ஃபரேந்தா (Pharenda)
- மதுரா (Mathura)
- கேராகர் (Kheragarh)
- ஜெகதீஷ்பூர் (Jagdishpur)
- கித்வாய் நகர் (Kidwai Nagar)
- பாக்பத் (Baghpat)
- மோடிநகர் (Modinagar)
- ஹாபூர் (Hapur)
- ஜேவார் (Jewar)
- சியானா (Syana)
- குர்ஜா (Khurja)
- கைர் (Khair)
- இக்லாஸ் (Iglas)
- மான்ட் (Mant)
- ஆக்ரா வடக்கு (Agra North)
- ஃபதேபூர் சிக்ரி (Fatehpur Sikri)
- பில்கிராம்-மல்லவான் (Bilgram-Mallanwan)
- கோவிந்த் நகர் (Govind Nagar)
- நான்பாரா (Nanpara)
- கோரக்பூர் நகரம் (Gorakhpur Urban)
- கஜானி (Khajani)
- பட்ரௌனா (Padrauna)
- ஃபாசில்நகர் (Fazilnagar)
- பிந்த்ரா (Pindra)
- வாரணாசி கன்டோன்மென்ட் (Varanasi Cantt)