சமீப சில நாட்களாக, இந்திய அளவில் இருக்கும் Layoff பிரச்சனை, தலைத்தூக்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்னதாக Oracle நிறுவனத்தின் 2500க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாலை 6 மணியளவில் ஒரு மின்னஞ்சல் மூலம் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது, ஒரு 5 நிமிட கூகுள் மீட் மூலமாக 80 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இணையதளத்தில் இருக்கும் Reddit பக்கத்தில் பலரும் தங்களுடைய மனக்குமுறல்களை அல்லது ஏதேனும் தகவல்களை பகிர்வது வழக்கம். அப்படி, சமீபத்தில் ஒரு பதிவு வைரலாகி இருக்கிறாது. அமெரிக்காவை சேர்ந்த வங்கி ஒன்று, தன்னுடைய 80 பணி ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. இது குறித்து அந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் Reddit தளத்தில் r/IndianWorkplace எனும் பிரிவின் கீழ் இந்த பதிவினை வெஇயிட்டிருக்கிறார். அதில், கஸ்டமர் சர்வீஸ் பிரிவில் இருந்த குழுவினர், ஒரு வீடியோ கால் மூலமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர், அந்த மீட்டிங் வெறும் 5 நிமிடம் மட்டுமே நடந்ததாக தெரிவித்திருக்கிறார்.
சம்பவம் நடந்த நாளன்று, தாங்கள் 6.30 PM ஷிஃப்டில் வேலை பார்த்ததாக கூறியிருக்கிறார். மேலும், அந்த நாளில் தங்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க சொன்னதாகவும் கூறியிருக்கிறார். இரவு 9.30 மணியளவில் அனைவரையும் ஒரு கூகுள் மீட்டில் இணைய கூறியிருக்கின்றனர். அதில், இவர்களின் மேலதிகாரிகள் இணைந்துள்ளனர்.
அந்த மீட்டிங்கில் இணைந்த அனைவருக்கும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கிட்டத்தட்ட 80 பேர் அந்த வீடியோ காலின் வாயிலாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றனர். இதனால், 80 குடும்பங்கள் பாதிப்படையும் என்று அந்த ஊழியர் தன் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
இதை படித்தவர்கள், இந்த நிறுவனத்திற்காக தன்னுடைய நேரம், உழைப்பு என அனைத்தையும் கொடுத்தவர்களை, அவமதிக்கும் வகையில் இப்படி 5 நிமிட கூகுள் மீட் வீடியோ காலிலா பணிநீக்கம் செய்வது? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்த பணி நீக்கத்திற்கான காரணம் என்ன என்பதை நிறுவனம் தெரிவித்ததாகவும் அந்த ஊழியர் தெரிவித்துள்ளார். அதாவது, அந்த நிறுவனத்தின் லாபக்குறைவு மற்றும் செயல்திறன் குறைவாக இருந்ததுதான் இந்த முடிவிற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதற்கு ஒட்டுமொத்த டீம்-யையும் அதற்காக தூக்க வேண்டும் என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவை பொறுத்தவரை, எந்த தனியார் நிறுவனத்தையெல்லாம் நம்பகத்தன்மையுடையது என்றும், வேலை பாதுகாப்பு இருக்கும் என்று கருதினோமோ, அந்த நிறுவனம் எல்லாம் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இன்ஃபோசிஸ், Oracle, கூகுள் என்று எண்ணிலடங்கா நிறுவனங்கள் இந்த பணி நீக்கம் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
ஊழியரின் இந்த பதிவின் கீழ், பல பேர் தங்களின் பணி நிரந்தரம் மற்றும் வேலை பறிபோய்விடுமோ என்கிற அச்சம் குறித்து பேசி வருகின்றனர். இவர்களின் பயத்திற்கு முழுமுதற் காரணமாக இருப்பது, எந்த நிறுவனமுமே, பணி நீக்கம் குறித்து எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென பணி நீக்கம் செய்வதுதான். பல வீடுகளில், ஒருவரின் சம்பளத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு, அந்த குடும்பம் இயங்கிக்கொண்டிருக்கும். அப்படி இயங்கி கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென ஒரு நாள் அந்த வேலை பறிபோய் விட்டால், அடுத்து வேலை கிடைக்கும் வரை அந்த குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை கொடுப்பது யார்? என்கிற கேள்வி இருக்கிறது.