WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!
WhatsApp Web மூலம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதற்கும், பயனர்களின் கணக்குகளை தவறாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இன்றைய நாட்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஆட்களே இருக்க மாட்டார்கள். தகவலை பரிமாற்றுவதற்கு முக்கிய தளமாக வாட்ஸ் அப் மாறி உள்ளது. மொபைல் போன்கள் மட்டுமின்றி, கணினியிலும் WhatsApp Web வசதி மூலம் பயனர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், WhatsApp Web-ஐ பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
WhatsApp Web மூலம் தகவல்கள் திருடப்படுமா?
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு WhatsApp Web-ல் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கும் அமர்வுகளை சில சூழல்களில் தவறாக பயன்படுத்தி, பயனர்களின் வாட்ஸ் அப் கணக்குகளுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழையக்கூடும் என கண்டறிந்துள்ளது.
இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை படிப்பது, அவர்களது பெயரில் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்புவது, தொடர்பு எண்கள் மற்றும் குழு உரையாடல்களை பார்ப்பது போன்ற செயல்களில் சைபர் குற்றவாளிகள் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவல்களை பயன்படுத்தி மோசடி, போலி இணைப்புகள் மூலம் தகவல் திருட்டு மற்றும் சமூக பொறியியல் தாக்குதல்களையும் நடத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
WhatsApp Web பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை
அலுவலக கணினிகள், பொது இடங்களில் உள்ள கணினிகள், சைபர் மையங்கள், ஹோட்டல்களில் உள்ள கணினிகள் மற்றும் பிறர் எளிதில் அணுகக்கூடிய சாதனங்களில் WhatsApp Web பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், WhatsApp Webஐ எப்போதும் லாக்-இன்லேயே வைத்திருக்க கூடாது என்றும், ஒவ்வொரு முறையும் பயன்படுத்தி முடித்த பிறகு கணக்கிலிருந்து முறையாக லாக் அவுட் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரவுசர் டேப்பை மட்டும் மூடுவது WhatsApp Web அமர்வை முடிவுக்குக் கொண்டுவராது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
தவிர்க்க முடியாத சூழலில் WhatsApp Web பயன்படுத்த வேண்டியிருந்தால், நம்பகமான கணினிகளில் மட்டும் Incognito அல்லது Private Browsing முறையை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் மோசடியில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் மற்றவர்களுக்குச் செல்வது, நீங்கள் எதிர்பார்க்காத பதில்கள் உங்கள் தொடர்புகளிடமிருந்து வருவது போன்ற வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாகக் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கணினியின் Operating System, பிரவுசர் மற்றும் பாதுகாப்பு மென்பொருட்களை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். சந்தேகத்திற்குரிய டவுன்லோடுகள், அடையாளம் தெரியாத ஃபைல்கள், கிராக் செய்யப்பட்ட மென்பொருட்கள் மற்றும் நம்பகமற்ற செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அலுவலகம் மற்றும் முக்கியமான தகவல்கள் கையாளப்படும் இடங்களில் உள்ள கணினிகளில் WhatsApp Web பயன்படுத்துவதை நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, WhatsApp Web பயன்படுத்துவோர் ஒவ்வொரு முறையும் லாக் அவுட் செய்வதுடன், தங்களது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் டிஜிட்டல் அடையாளத்தை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.