SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained: இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.120-ஐ எட்டுமா? விலை உயர்வுக்கான பின்னணியும் காரணங்களும்!

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, மேற்கு ஆசிய மோதல்கள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வு அழுத்தத்தை சந்திக்கும் நிலையில், லிட்டர் ரூ.120-ஐ எட்டுமா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Oct 10, 2026, 09:27 AM IST | Updated: Oct 10, 2026, 09:34 AM IST
Join

இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 107.77 ஆக உள்ளது. அதுவே டீசல் விலை ரூ. 99.55 ஆக உள்ளது. இது பொதுமக்களின் பட்ஜெட்டை பெரிதும் பாதிக்கிறது. அதேசமயம், இன்னும் எவ்வளவு உயருமோ என்ற அச்சமும் உள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் விலை ரூ. 120-ஐ எட்டுமா? இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணங்கள் என்ன? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

பெட்ரோல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பது பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள், எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பான நிச்சயமற்ற சூழல் ஆகியவை சர்வதேச சந்தையில் விலையை பாதிக்கின்றன.

இந்தியாவில் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் சராசரி விலை ஒரு பீபாய்க்கு 118 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. இதற்கு மேற்கு ஆசிய மோதல்கள் மற்றும் எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுகின்றன.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்துக்கும் அதிகமான அளவை இறுக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. எனவே, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும்போது இந்தியாவின் இறக்குமதி செலவும் அதிகரிக்கிறது. இதன் தாக்கம் எண்ணெய்  நிறுவனங்களின் செலவுகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் வெளிப்படலாம்.

நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை உயர்த்தியது ஏன்?

நயாரா எனர்ஜி நிறுவனம் சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விலையை ரூ. 3-ம் உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலை அதிகரித்ததால், விற்பனையில் ஏற்படும் இழப்பை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.

டெல்லியில் நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் விலை உயர்வுக்குப் பிறகு லிட்டருக்கு ரூ.107.12 ஆக இருந்தது. அதே நேரத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பெட்ரோல் விலை ரூ.102.12 ஆக இருந்தது. மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நயாரா நிறுவனத்தின் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.119.54 வரை உயர்ந்திருந்தது. இதன் மூலம், சில நகரங்களில் தனியார் நிறுவனங்களின் பெட்ரோல் விலை ஏற்கெனவே ரூ.120-ஐ நெருங்கியிருப்பது தெரிகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் விலையை உயர்த்துமா?

இந்தியாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெடோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும்பகுதியை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் சர்வதேச எண்ணெய் விலை மாற்றங்களுக்கு ஏற்ப உடனடியாக விலையை மாற்றாக்ம்ல் இருந்தால், அதிகரிக்கும் செலவுகளை தாங்களே ஏற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ICRA மதிப்பீட்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ரூ.8-ம், டீசல் விற்பனையில் ரூ.9-ம் இழப்பு ஏற்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக LPG விற்பனையில் நிறுவனங்களின் மொத்த தினசரி இழப்பு சுமார் ரூ.530 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், நிறுவனங்களின் இழப்பு அதிகரிப்பது மட்டும் பெட்ரோல் விலை உடனடியாக உயர்த்தப்படும் என்பதற்கான உறுதியான அறிகுறி அல்ல. சர்வதேச எண்ணெய் விலை, நிறுவனங்களின் நிதிநிலை, அரசின் கொள்கைகள் மற்றும் பிற செலவுகள் ஆகியவை அடுத்தகட்ட முடிவுகளில் தாக்கம் செலுத்தும்.

இந்தியாவில் பெட்ரோல் விலை எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

பெட்ரோல் விலை என்பது கச்சா எண்ணெய் விலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. கச்சா எண்ணெய் கொள்முதல் செலவு, சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துச் செலவுகள், எண்ணெய் நிறுவனங்களின் விற்பனைச் செலவுகள், மத்திய அரசின் கலால் வரி மற்றும் மாநில அரசுகளின் VAT போன்ற வரிகளிக்கும் பெட்ரோல் விலையில் பங்கு உண்டு.

மேலும், கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ரூபாயின் மதிப்பு குறைந்தால், அதே அளவு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரிக்கக்கூடும். மாநிலங்களுக்கு இடையே வரி விகிதங்கள் மற்றும் பிற செலவுகள் வேறுபடுவதால் பெட்ரோல் விலையும் மாறுபடுகிறது. இதனால்தான் டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஒரே விலையில் பெட்ரோல் விற்கப்படுவதில்லை.

பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 120-ஐ எட்டுமா?

பெட்ரோல் விலை ரூ. 120-ஐ எட்டுமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. சில தனியார் நிறுவனங்களின் விற்பனை நிலையங்களில் இந்த விலை அளவை நெருங்கியிருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் நீடிப்பது, எண்ணெய் விநியோகத்தில் தடைகள் ஏற்படுவது, ரூபாயின் மதிப்பு குறைவது மற்றும் நிறுவனங்களின் செலவுகள் அதிகரிப்பது போன்ற காரணிகள் பெட்ரோல் விலை உயர்வுக்கான அழுத்தத்தை அதிகரிக்கலாம்.

மறுபுறம், சர்வதேச எண்ணெய் விலை குறைந்தால் அல்லது விநியோகம் சீரானால் விலை உயர்வுக்கான அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. மேலும், எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றும் முடிவு, வரி மாற்றங்கள் மற்றும் அரசின் கொள்கைகளும் இறுதி விலையைத் தீர்மானிக்கும்.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, மேற்கு ஆசிய மோதல்கள், எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை இழப்புகள் மற்றும் ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகள் இந்தியாவில் பெட்ரோல் விலையைப் பாதிக்கின்றன. நயாரா நிறுவனம் விலையை உயர்த்தியிருப்பது சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால், மற்ற நிறுவனங்களும் எப்போது விலையை உயர்த்தும் அல்லது பெட்ரோல் லிட்டர் ரூ.120-ஐ எட்டுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. அடுத்தகட்ட விலை மாற்றம் சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் இந்தியாவின் விலை நிர்ணய முடிவுகளைப் பொறுத்தே அமையும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES