Mumbai Indians: ஐபிஎல் 2027 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக, சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிரடி காட்டி வரும் டெல்லி விக்கெட் கீப்பர் பேட்டர் தேஜஸ்வி தஹியாவை ஏலத்தில் எடுக்க மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டுள்ளது.
1/5
மும்பை இந்தியன்ஸ் குறி வைக்கும் இளம் ஓபனர்! யார் இந்த தேஜஸ்வி தஹியா?
2020ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற முடியாமல் தடுமாறி வருகிறது மும்பை இந்தியன்ஸ். இந்நிலையில், 2027 சீசனுக்கான அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ரோஹித் சர்மாவுக்கு மாற்றாக எதிர்காலத்தில் தொடக்க வீரராக களமிறக்கக்கூடிய 24 வயது விக்கெட் கீப்பர் பேட்டர் தேஜஸ்வி தஹியாவை வாங்க மும்பை அணி ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2/5
சையத் முஷ்டாக் அலி தொடரில் மிரட்டல் ஆட்டம்!
டெல்லியை சேர்ந்த தேஜஸ்வி தஹியா, தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அதிரடியாக விளையாடி கவனம் ஈர்த்து வருகிறார். முதல் போட்டியில் 24 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த அவர், தொடர்ந்து 20, 51, 18, 95 என ரன்களைக் குவித்துள்ளார். குறிப்பாக, அதிவேகமாக ரன்கள் சேர்க்கும் திறன் அவருக்குக் கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.
3/5
ரோகித்துக்கு மாற்றாக தேஜஸ்வி தஹியா
ரோகித் சர்மா இன்னும் சில சீசன்களில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளதால், அவருக்கு பிறகு தொடக்க வீரராக களமிறக்க ஒரு மாற்று வீரரை தேட வேண்டிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. அதேசமயம், டாப் ஆர்டரில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்டரும் அணிக்கு தேவைப்படுகிறார். இந்த இரண்டு தேவைகளையும் தேஜஸ்வி தஹியா பூர்த்தி செய்யக்கூடும் என்பதால், அவரை ஏலத்தில் எடுக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
4/5
ரூ.32.60 கோடி கையிருப்பு!
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.32.60 கோடி கையிருப்புடன் செல்கிறது. இந்த தொகையை கொண்டு 7 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 9 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தஹியாவை வாங்க மற்ற அணிகளும் ஆர்வம் காட்டலாம் என்பதால், அவருக்கான ஏல தொகை ரூ.10 கோடியை தாண்டவும் வாய்ப்புள்ளது.
5/5
பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டும்
ஹர்திக் பாண்டியாவை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸுக்கு டிரேடிங் செய்த மும்பை இந்தியன்ஸ், அவருக்கு பதிலாக அதே தொகைக்கு அர்ஷ்தீப் சிங்கை அணியில் இணைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தீபக் சஹார், அல்லா ஹாசன்பர், கேசவ் மகாராஜ், மயங்க் மார்கண்டே, ராபின் மின்ஸ், மஹிபால் லாம்லோர், டிரெண்ட் போல்ட் உள்ளிட்ட வீரர்களை அணி விடுவித்துள்ளது. இதனால், பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோருடன் இணைந்து செயல்பட தரமான சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் ஒருவரையும் ஏலத்தில் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் நீடிக்கும் நிலையில், 2027 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கட்டமைப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.