Trichy Thaimaman Gold Ring Scheme 2026: திருச்சியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது. அப்டேட்
திருச்சியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த மருத்துவமனைகளில் தங்க மோதிரம் விநியோகிக்கப்படுகிறது என்ற பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
1/7
மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு அரசால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" முதற்கட்டமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார்.
2/7
தொடக்க விழாவில் பங்கேற்பு
இத்திட்டத்தின் தொடர்ச்சியாகத் திருச்சியில் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவர் கிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் மற்றும் திருவெறும்பூர் எம்எல்ஏ நாவல்பட்டு விஜி ஆகியோர் கலந்துகொண்டு தாய்மார்களின் குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கினர்.
3/7
மருத்துவக் குழுவினர் மூலம் தங்க மோதிரம்
1 கிராம் 22 காரட் தங்க மோதிரம்: 22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கக்கூடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் 1 கிராம் எடையுள்ள 22 காரட் (916 ஹால்மார்க்) தங்க மோதிரம் வழங்கப்படும். ஏற்கனவே பிறந்த குழந்தைகளுக்கு விநியோகம்: 22.06.2026 முதல் 27.09.2026 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்து தற்போது வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் தற்போதைய இருப்பிடத்திற்கே சென்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் மூலம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
4/7
மருத்துவமனையிலேயே மோதிரம் வழங்கப்படும்
28.09.2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவம் முடிந்து வீடு திரும்புவதற்கு முன்பாகவே மருத்துவமனையிலேயே மோதிரம் வழங்கப்படும்.
5/7
சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்
குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைச் சார்ந்த குடியிருப்பாளர் என்பதற்கான ஆவணங்களாகக் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, இருப்பிடச் சான்றிதழ், தொழிலாளர் நலவாரிய அட்டை அல்லது இந்திய அஞ்சலகக் கணக்கு அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
6/7
குழந்தைகளின் எண்ணிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 86 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல் 27.09.2026 வரை பிறந்த மொத்தக் குழந்தைகளின் எண்ணிக்கை 3,341 ஆகும். இவர்களில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 1,205 குழந்தைகள், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை – 854 குழந்தைகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை – 726 குழந்தைகள், துறையூர் அரசு மருத்துவமனை – 556 குழந்தைகள் என அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.
7/7
திருச்சியில் நடைபெற்ற தொடக்க விழா
திருச்சியில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 67 குழந்தைகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 50 குழந்தைகள், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் 50 குழந்தைகள் மற்றும் துறையூர் அரசு மருத்துவமனையில் 50 குழந்தைகள் என முதற்கட்டமாக மொத்தம் 217 குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுத் திட்டம் சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது.