U19 ஆசிய கோப்பை 2026 இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை போராடி தோற்கடித்த இந்திய இளம் ஹீரோ மோகித் உல்வா குறித்து அறிய இங்கு விரிவாக காணலாம்.
U19 ஆசிய கோப்பை 2026 இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 26 பந்துகளில் 49 ரன்கள் குவித்து இந்தியாவின் 9வது கோப்பை வெற்றிக்கு வித்திட்ட 18 வயது வேகப்பந்துவீச்சாளர் மோகித் உல்வா யார்? அவரது கிரிக்கெட் பயணம் குறித்த முழு விவரம் இதோ
1/5
U19 ஆசிய கோப்பை பைனல்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி குறித்துதான் தற்போது கிரிக்கெட் உலகம் முழுக்க பேச்சு. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை 2026 பைனல் நீண்ட நாளுக்கு பின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தை கொடுத்திருக்கிறது. இவை அனைத்திற்கும் காரணம் 18 வயது வேகப்பந்துவீச்சாளர் மோகித் உல்வாதான்.
2/5
மோகித் உல்வாவின் மிரட்டலான பார்ட்னர்ஷிப்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 252 ரன்களை எடுத்து 8 விக்கெட்டை இழந்திருந்த சூழலில், 8வது பேட்டராக உள்ளே வந்தார் மோகித் உல்வா. அவர் களமிறங்கிய போது இந்திய அணி வெற்றிக்கு 84 ரன்கள் தேவைப்பட்டது. 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு மனல் சௌகான் உடன் சேர்ந்து 57 ரன்களையும், 10வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு சி. வெங்கடா உடன் 29 ரன்களையும் சேர்த்து இந்திய அணி 9வது முறையாக கோப்பையை அடிக்க வழிவகுத்தார், மோகித் உல்வா.
3/5
யார் இந்த மோகித் உல்வா?
மோகித் உல்வா 26 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் 49 ரன்களை சேர்த்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவர் குஜராத் ஜாம் நகரைச் சேர்ந்தவர் ஆவார். கிரிக்கெட் பங்களா அகாடமியில் மகேந்திரசிங் சௌகான் என்ற பயிற்சியாளர்தான் இவரை கண்டறிந்துள்ளார். ஜடேஜாவை அதே பயிற்சியாளர்தான் மோகித்தையும் கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4/5
மோகித் உல்வாவின் சிறப்பான ஆட்டங்கள்
இவர் சிறப்பாக பேட்டிங் செய்தது ஒருபுறம் என்றாலும் இவர் பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஆவார். U19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இவர்தான் புதிய பந்தில் பந்துவீசினார். இந்த தொடரில் 3 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். கடந்த செப்டம்பரில் ராஜ்கோட்டில் நடந்த ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான முதல் யூத் டெஸ்டில் இவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியும், அரைசதம் அடித்தும் கவனம் ஈர்த்திருந்தார். அந்த போட்டியில் லக்ஷயா ராய்சந்தானி இரட்டை சதம் அடித்திருந்தார். அவருடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை மோகித் அமைத்தார். அப்போதுதான் அரைசதத்தையும் பதிவு செய்திருந்தார். (புகைப்படம்: மோகித் உல்வாவின் தந்தை மகேஷ் உல்வா)
5/5
மோகித் உல்வா கிரிக்கெட்டுக்கு வந்த கதை
ஆரம்பத்தில் படிப்பில் இருந்து தப்பிக்கவே கிரிக்கெட் பக்கம் வந்ததாக தெரிவிக்கும் மோகித் உல்வா, அவரது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே கிரிக்கெட் அகாடமியில் இணைந்துள்ளார். ஆரம்பத்தில் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடி, அதன்பின் கிரிக்கெட் மீது ஈர்ப்பு ஏற்படவே அவர் அகாடமியிலேயே சேர்ந்தாராம். ஆரம்பத்தில் ஆப் ஸ்பின்னராக இருந்த மோகித் உல்வா, பயிற்சியாளரின் பேச்சை கேட்டுதான் வேகப்பந்துவீச்சாளராக மாறியிருக்கிறார். அவர் ஒல்லியாக இருப்பதால் வேகப்பந்துவீச்சை முயற்சிக்கும்படி பயிற்சியாளர் கூறியதாக மோகித் முன்னர் தெரிவித்துள்ளார். மோகித் உல்வாவுக்கு பிடித்த வீரர் பாட் கம்மின்ஸ்.