புதுச்சேரி டாப் நியூஸ்: புயல் அலையால் ஏற்பட்ட பரபரப்பு முதல் தனுஷ் பட கொண்டாட்ட சர்ச்சை வரை!
Puducherry News in Tamil: புதுச்சேரியில் இன்று (Nov 20, 2026) நடந்த முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ₹10 கோடி நிலுவைத் தொகை யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? புயல் அலையில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்ட பரபரப்பு முதல் தனுஷ் 'ஓம்' பட கொண்டாட்ட சர்ச்சை வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலின் இன்றைய டாப் செய்திகளின் முழுமையான அலசல்.
Puducherry News (20 November 2026): புதுச்சேரி அரசு ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 63% ஆக உயர்த்தப்பட்டு ₹10 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கிடையே அக்வான் புயல் சீற்றத்தால் கடலில் சிக்கிய இரு சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் காரைக்கால் குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் கிட்டிப்புல் விளையாடி மகிழ்ந்தது, புதுச்சேரியில் ₹3 லட்சம் ஆன்லைன் மோசடி, தனுஷ் பட வெளியீட்டுக் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்துப் பாதிப்பு, இஎஸ்ஐ குறைதீர்வுக் கூட்டம் மற்றும் ஜிப்மர் 15-வது பட்டமளிப்பு விழா குறித்த விரிவாக பார்ப்போம்.
புதுச்சேரி ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசைத் தொடர்ந்து புதுச்சேரி நிர்வாகமும் அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதுவரை அடிப்படை ஓய்வூதியத்தில் 60 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, தற்போது 63 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைக்கு வருவதால், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான நான்கு மாத நிலுவைத் தொகையாக சுமார் ₹10 கோடி வரை ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள சுமார் 25,000 ஓய்வூதியர்கள் நேரடியாகப் பலன் அடைவார்கள்.
இந்த அகவிலைப்படி உயர்வின் காரணமாக, அடிப்படை ஓய்வூதியமாக ₹15,000 பெறுபவர்களுக்கு மாதந்தோறும் கூடுதலாக ₹450-ம், நான்கு மாத நிலுவைத் தொகையாக ₹1,800-ம் கிடைக்கும். அதேபோல் ₹20,000 அடிப்படை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மாதம் ₹600 கூடுதலாகவும், நிலுவைத் தொகையாக ₹2,400-ம் கிடைக்கும். ₹30,000 பெறுபவர்களுக்கு மாதம் ₹900 வீதம் நிலுவைத் தொகையாக ₹3,600-ம், ₹40,000 பெறுபவர்களுக்கு மாதம் ₹1,200 வீதம் நிலுவைத் தொகையாக ₹4,800 வரையும் பலன் கிடைக்கும். வங்கிகள் மற்றும் கருவூலங்கள் மூலம் இந்தத் தொகை தானாகக் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றாலும், ஓய்வூதியர்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை உரிய நேரத்தில் சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும் என புதுச்சேரி நிதித்துறை தெரிவித்துள்ளது.
தலைமைச் செயலகம் எதிரே கடலில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' புயல், ஆந்திர மாநிலம் நரசாபுரத்துக்கும் ஒடிசா மாநிலம் புரிக்கும் இடையே நவம்பர் 20-ம் தேதி கரையைக் கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாகப் புதுச்சேரி கடற்பகுதியில் நவம்பர் 19-ம் தேதி கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டதுடன், வழக்கத்தை விட சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பின.
இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது நண்பருடன் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்த அவர்கள், மதுபோதையில் கடற்கரைக்குச் சென்று தலைமைச் செயலகம் எதிரே கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்ட மற்ற சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த கடலோரக் காவல் படையினர் மற்றும் லைப் கார்டு ஊழியர்கள் கடலில் இறங்கி இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
மீட்கும்போது அலைச் சீற்றத்தால் தடுமாறிய செந்தில் பாறையில் மோதி காயமடைந்த நிலையில், அவர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துரிதமாகச் செயல்பட்டு இரு உயிர்களைக் காப்பாற்றிய கடலோரக் காவல் படை மற்றும் லைப் கார்டு ஊழியர்களைக் காவல் ஆய்வாளர் தியாகராஜன் பாராட்டினார்.
காரைக்கால் குழந்தைகள் தின விழாவில் மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த அமைச்சர்
புதுச்சேரி காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் குழந்தைகள் தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுச்சேரி வேளாண்மை, விவசாயிகள் நலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளையும் பாராட்டுகளையும் வழங்கினார்.
விழாவில் நேரு, நேதாஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வேடமணிந்து வந்த குழந்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். விழா வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விளையாட்டுப் பொருட்களையும், மாணவர்களின் செயல்பாடுகளையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டிருந்த கிட்டிப்புல் விளையாட்டில் அமைச்சரும் இறங்கி விளையாடினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து பட்டம் விட்டபடி மகிழ்ந்த அமைச்சரின் இந்தச் செயல், அங்கிருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் ஒரே நாளில் பெண் உட்பட 11 பேரிடம் ₹3 லட்சம் ஆன்லைன் மோசடி
புதுச்சேரியில் நவம்பர் 18-ம் தேதி ஒரே நாளில் பெண் ஒருவர் உட்பட 11 பேரிடம் சுமார் ₹3 லட்சத்திற்கும் மேல் ஆன்லைன் மோசடி நடைபெற்றுள்ளது. திருபுவனையைச் சேர்ந்த ஆண் ஒருவர் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஆன்லைனில் தேடியபோது, வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதற்காகப் பணம் கட்ட வேண்டும் எனக் கூறியதை நம்பி ₹17,000 செலுத்தி வேலையும் செய்து முடித்துள்ளார். ஆனால் லாபம் எதுவும் வராத நிலையில், தொடர்பு கொண்ட நபரும் முறையாகப் பதிலளிக்காமல் ஏமாற்றியது தெரியவந்தது.
இதேபோல் நேதாஜி நகரைச் சேர்ந்த ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை ஜம்தி என அறிமுகப்படுத்திக் கொண்டு தவறுதலாக ₹1,05,000 அனுப்பிவிட்டதாகக் கூறி திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதை நம்பி அவர் பணத்தை அனுப்பிய பிறகு பார்த்தபோது, தனது கணக்கில் எந்தப் பணமும் வரவில்லை என்பது தெரிந்தது.
மேலும் லாஸ்பேட்டையைச் சேர்ந்தவரிடம் ₹20,000, அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்தவரிடம் ₹960, அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவரிடம் ₹5,430, கனகசெட்டிகுளத்தைச் சேர்ந்தவரிடம் ₹5,900, நைனார் மண்டபத்தைச் சேர்ந்தவரிடம் ₹18,000, வேல்ராம்பேட்டையைச் சேர்ந்தவரிடம் ₹2,000, மூலக்குளத்தைச் சேர்ந்தவரிடம் ₹800, சோலை நகரைச் சேர்ந்த பெண்ணிடம் ₹3,500 மற்றும் வாதானூரைச் சேர்ந்தவரிடம் ₹4,000 எனப் பல்வேறு இடங்களில் மோசடிகள் நடந்துள்ளன. இது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனுஷ் பட வெளியீட்டுக் கொண்டாட்டத்தில் பட்டாசு: போக்குவரத்து பாதிப்பால் அதிருப்தி
நடிகர் தனுஷ் நடிப்பில், மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி நாடு முழுவதும் வெளியானது. புதுச்சேரியில் மட்டும் 10 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் மாநிலத் தலைவர் சதீஷ் தலைமையில் ரசிகர்கள் திரையரங்கு முன்பு உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தனுஷின் பேனருக்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் அபிஷேகம் செய்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பவுடர் தூவியவுடன் தனுஷின் முகம் வெளிப்படும் வகையில் வித்தியாசமான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருந்த பேனர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஆனால் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ரசிகர்கள் சாலையில் பட்டாசுகளை வெடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடிகர் தனுஷ் அரசியலில் ஈடுபடப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், பொதுமக்கள் செல்லும் சாலையில் பட்டாசு வெடித்து இடையூறு ஏற்படுத்தியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கொண்டாட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்ததுடன், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் இஎஸ்ஐ அலுவலகங்களில் நவம்பர் 27 குறைதீர்வுக் கூட்டம்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழக (ESI) அலுவலகங்களில் வரும் நவம்பர் 27-ம் தேதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்துப் புதுச்சேரி இஎஸ்ஐ மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 27-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காந்திநகர் கிளை அலுவலகத்திலும், காரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தொழிலாளர்கள், பயனாளிகள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டு இஎஸ்ஐ (ESI) மற்றும் இபிஎஃப் (EPF) தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம் என்றும், அவற்றைப் பரிசீலித்து உடனடியாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் 15-வது பட்டமளிப்பு விழா: நவம்பர் 21-ல் மத்திய அமைச்சர் பங்கேற்பு
புதுச்சேரி ஜிப்மரின் 15-வது பட்டமளிப்பு விழா நவம்பர் 21-ம் தேதி அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குகிறார். இந்த விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் என். ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வகணபதி, வைத்தியலிங்கம், அரசு கொறடா ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜிப்மர் தலைவர் சித்ரா சர்க்கார் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், இயக்குநர் வீர்சிங் நேகி நிறுவன அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார். மொத்தம் 816 மாணவர்களுக்குப் பட்டங்களும், 88 பேருக்குப் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன. மத்திய அமைச்சர் வருகையை முன்னிட்டு ஜிப்மர் வளாகம் மற்றும் அப்துல் கலாம் கலையரங்கப் பகுதிகளை அழகுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க - Puducherry News ஜிப்மர் போராட்டம், தெருநாய் தொல்லை, புயல் எச்சரிக்கை முழு விவரம்