ஆசிய விளையாட்டில் இந்தியா - ஜப்பான் இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், ஜப்பான் அணியை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ஒருவர் தற்போது கவனம் பெற்றுள்ளார். பீகாரில் பிறந்து, IIT Kanpur-ல் படித்து, ஜப்பானில் பணியாற்றிய இவர், இன்று அந்த நாட்டின் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். அப்படி இந்தியாவில் இருந்து ஜப்பான் வரை இவரது கிரிக்கெட் பயணம் எப்படி அமைந்தது? யார் இந்த அபிஷேக் ஆனந்த்? என்பதை இந்த Explainer-ல் தெரிந்துக்கொள்வோம்.
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் ஆனந்த். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர், படிப்பிலும் கவனம் செலுத்தினார். இதன் பலனாக நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான IIT Kanpur-ல் Chemistry பிரிவில் BS-MS படிப்பில் சேர்ந்தார்.
IIT Kanpur-ல் படித்த காலத்திலும் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தை அபிஷேக் கைவிடவில்லை. அங்கு கிரிக்கெட் அணியில் விளையாடியதுடன், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இதனால் படிப்புடன் சேர்த்து கிரிக்கெட்டிலும் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.
IIT Kanpur-ல் படிப்பை முடித்த பிறகு 2022-ம் ஆண்டு Campus placement மூலம் Accenture நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து பணிக்காக ஜப்பான் சென்ற அபிஷேக், டோக்கியோவில் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார்.
புதிய நாடு, புதிய வேலை என வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டாலும், அபிஷேக் கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தை மட்டும் விட்டுவிடவில்லை. ஜப்பானிலும் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்புகளை தேட தொடங்கினார்.
டோக்கியோவில் உள்ள Tokyo Falcons Cricket Club அணியில் இணைந்து அபிஷேக் விளையாட தொடங்கினார். அலுவலக பணிக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் கிரிக்கெட் பயிற்சி மற்றும் போட்டிகளில் கவனம் செலுத்தினார்.
கிளப் அளவிலான போட்டிகளில் தொடர்ந்து விளையாடியதன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய அபிஷேக்கிற்கு, ஜப்பான் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஜப்பானில் தொடர்ந்து மூன்று அணிகள் வசித்ததும், அந்நாட்டின் கிரிக்கெட் விதிகளின்படி தேசிய அணிக்கான தகுதியை பெறுவதில் முக்கிய பங்கு வகித்தது.
2025-ம் ஆண்டு மே மாதம் Cook Islands அணிக்கு எதிரான போட்டியில் ஜப்பான் அணிக்காக தனது T20I அறிமுகத்தை அபிஷேக் ஆனந்த் செய்தார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து, ஜப்பானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரராக மாறினார். அதன்பிறகு ஜப்பான் அணிக்காக தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வரும் அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் பங்களித்து வருகிறார். இதுவரை ஜப்பான் அணிக்காக 18 T20I போட்டிகளில் விளையாடி உள்ள அபிஷேக், 275 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 55 ரன்களாகும். மேலும், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார்.
இந்தியா - ஜப்பான் இடையிலான தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று செப்டம்பர் 22 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஜப்பான் அணியில் துருதிஷ்டவசமாக அபிஷேக் ஆனந்த் பெயர் இல்லை. ஜப்பானிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட 15 பேர் கொண்ட அணியில் அபிஷேக்கின் பெயர் இடம்பெறவில்லை.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் விளையாடுவதை நம்மால் கண்டு ரசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பீகாரில் தொடங்கிய அவரது கிரிக்கெட் பயணம், IIT Kanpur, ஜப்பானில் வேலை, கிளப் கிரிக்கெட் என பல்வேறு கட்டங்களை கடந்து இன்று சர்வதேச கிரிக்கெட் வரை வந்துள்ளது.
இந்தியாவில் பிறந்ததாலும், தற்போது ஜப்பான் நாட்டின் கிரிக்கெட் அணியில் இருப்பதாலும், தான் இரு அணிகளுக்கும் ஆதரவு அளிப்பதாக அபிஷேக் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், 15 பேர் கொண்ட அணியிலும், களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியிலும் தான் இடம்பெறவில்லை என்றாலும், ஜப்பான் அணியுடன் இருப்பேன். இந்தியாவை சேர்ந்தவர் என்பதாலும், ஜப்பான் தனது தாய்நாடு என்பதாலும் இரு நாடுகளையும் ஆதரிக்கிறேன். இரு அணிகள் மோதும் இப்போட்டிக்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்தும் அபிஷேக் ஆனந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். வைபவ் சூர்யவன்ஷிக்கு உலக அளவில் ரசிகரள் இருக்கிறார். அவரது அதிரடியான பானி, அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் வேறு ஒரு நிலைக்கு சென்றுவிட்டது. உலகம் முழுவதும் அவர் குறித்து தெரிந்துக்கொள்ளவும், அவரை சந்திக்கவும் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். ஜப்பான் அணியை சேர்ந்த வீரர்களும் வைபவ் சூர்யவன்ஷியின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என அவர் கூறினார்.
அபிஷேக்கின் இந்தப் பயணம், தொழில் வாழ்க்கையுடன் தனக்குப் பிடித்த துறையிலும் தொடர்ந்து பயணிக்க முடியும் என்பதை காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், கிரிக்கெட் மீதான ஆர்வத்தை அவர் கைவிடவில்லை. ஜப்பானில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கிளப் கிரிக்கெட்டில் தொடங்கிய தனது பயணத்தை, இன்று அந்த நாட்டின் தேசிய அணி வரை கொண்டு சென்றுள்ளார். இந்தியாவில் தொடங்கிய அவரது கிரிக்கெட் ஆர்வம், ஜப்பானில் சர்வதேச கிரிக்கெட் வீரராக மாறியிருப்பதுதான் அபிஷேக் ஆனந்தின் பயணத்தின் தனிச்சிறப்பாக உள்ளது.