ஜப்பானின் Aichi-Nagoya நகரங்களில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டிகள் ரசிகளின் கவனத்தை பெரும் அளவு ஈர்த்துள்ளது. குறிப்பாக இந்தாண்டு வழங்கப்பட்டு வரும் ஆசிய விளையாட்டு பதக்கங்கள் குறித்து பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. அதாவது பதக்கம் ஏன் உடைந்து ஒட்டவைத்தது போல இருக்கிறது? இந்த வடிவமைப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது. இந்த வடிவமைப்புக்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் உள்ளது. அது குறித்து இங்கே பார்க்க இருக்கிறோம்.
2026 ஆசிய விளையாட்டு போட்டியின் முழகமாக Imagine One Asia என்ற கருத்தே உள்ளது. ஒரே ஆசியாவாக இருந்த நிலையில், காலப்போக்கில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் தனித்துவமான அடையாளங்களால் தனித்தனி நாடாக பிரிந்தது. தனித்தனி நாடாக இருந்தாலும் நாம் ஒரே கண்டத்தை சேர்ந்தவர்கள்தான் என விளையாட்டின் மூலம் அந்த வேறுபாடுகளை மீண்டும் ஒன்றிணைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
இந்த கருத்தையே பதக்கத்தின் வடிவமைப்பிலும் கொண்டு வந்துள்ளனர். பல துண்டுகளாக பிரிந்தவை மீண்டும் ஒன்றாக இணைவது போன்ற தோற்றம், விளையாட்டு மூலம் ஆசிய மக்கள் ஒன்றிணைவதை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பதக்கத்தை ஜப்பானை சேர்ந்த வடிவமைப்பாளர் Daisuke Shiba உருவாக்கி உள்ளார். பதக்கத்தின் இறுதி வடிவத்தை உருவாக்குவதற்கு முன்பு, Ceramic எனப்படும் பீங்கான் வட்ட வடிவங்களை பலமுறை உடைத்து, அவை இயற்கையாக உருவாக்கும் வடிவங்களை ஆய்வு செய்துள்ளார். இதன் மூலம் கிடைத்த உடைந்த துண்டுகளின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு பதக்கத்தின் தனித்துவமான வடிவம் உருவாக்கப்பட்டது.
இதில் விளையாட்டு வீரர்களின் பயணத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது. ஒரு வீரர் பதக்கம் வெல்வதற்கு முன்பு பல ஆண்டுகள் பயிற்சி, தோல்விகள், சவால்கள் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை எதிர்கொள்கிறார். அந்த பயணத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவமும் இறுதியில் ஒரு சாதனையாக ஒன்றிணைகிறது. இதையும் மனதில் வைத்தே இப்பதக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கப் பதக்கம் சுமார் 265 கிராம் எடை கொண்டது. ஆனால் அது முழுவதும் தங்கத்தால் ஆனது அல்ல. தூய வெள்ளியின் மீது குறைந்தது 1 கிராம் தங்கம் பூசப்பட்டு தங்க பதக்கம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி பதக்கம் சுமார் 264 கிராம் எடை கொண்டது மற்றும் தூய வெள்ளியால் தயாரிக்கப்பட்டுள்ளது. வெண்கலப் பதக்கம் சுமார் 222 கிராம் எடை கொண்டது. இதில் 95 சதவீதம் செம்பும், 5 சதவீதம் துத்தநாகமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மூன்று பதக்கங்களுமே 80 மி.மீ. விட்டமும் 5 மி.மீ. தடிமனும் கொண்டவை.
இந்த பதக்கங்களின் தயாரிப்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. Aichi-Nagoya 2026 Recycled Medal Project மூலம், போட்டியில் பங்கேற்கும் உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்த சிறிய மின்னணு சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட உலோகத்தின் ஒரு பகுதி பதக்கங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பதக்கத்தின் வடிவமைப்பு வீரர்களின் சாதனையை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஒரு பதக்கம் உருவாகும் பின்னணியில் இருக்கும் முயற்சி மற்றும் பயணத்தையும் நினைவுபடுத்துகிறது. உடைந்த பீங்கான் துண்டுகள் தனித்தனியாக பார்க்கும்போது முழுமையற்றதாக தோன்றினாலும், அவை ஒன்றாக இணைந்தபோது ஒரு அழகான வடிவத்தை உருவாக்குகின்றன. அதுபோலவே, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்களது தனித்துவமான அடையாளங்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றிணைகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த பதக்கம், அவர்களின் பல ஆண்டுகால உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்களை பயன்படுத்தியிருப்பது எதிர்கால தலைமுறைகளுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
பதக்கத்துடன் வழங்கப்படும் Ribbon-லும் Aichi பகுதியின் அடையாளம் இடம்பெற்றுள்ளது. Aichi மாகாணத்தின் அதிகாரப்பூர்வ மலரான Kakitsubata (Japanese iris) மலரின் வடிவத்தை அடிப்படையாக கொண்டு Ribbon வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பதக்கத்தை வைக்க வழங்கப்படும் பெட்டி Aichi பகுதியில் வளர்க்கப்படும் Japanese Cypress (Hinoki) மரத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. பெட்டியின் எட்டுபக்க வடிவத்திற்கும் Aichi மற்றும் Nagoya வரலாற்றுடன் தொடர்புடைய எட்டு என்ற அடையாளத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் Aichi - Nagoya 2026 ஆசிய விளையாட்டு போட்டியின் பதக்கம் வெறும் வெற்றி மற்றும் சாதனையின் அடையாளமாக மட்டும் இல்லாமல் ஆசியாவின் ஒற்றுமை, வீரர்களின் கடின உழைப்பு, மறுசுழற்சி மற்றும் ஜப்பானின் உள்ளூர் கலாச்சாரம் ஆகியவற்றையும் ஒரே வடிவில் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.