இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார். இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்று ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடைசியாக 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற நிலையில், அதன்பிறகு 2015, 2019, 2023 என மூன்று உலகக் கோப்பைகளை வெல்லவில்லை.
2023ல் ரோகித் சர்மா தலைமையில் இறுதி போட்டி வரை சென்ற நிலையில், நூலிழையில் இந்திய அணி கோப்பையை தவறவிட்டது. இதனால் 2027 உலகக் கோப்பையை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற இலக்குடன் ரோகித் சர்மா உள்ளார். அதற்காகவே தற்போது உழைத்து வருகிறார். அதனால் உலகக் கோப்பை முடிந்த பின்னரே அவர் முழுமையாக ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் சர்மா ஓய்வு பிறகு அவரது இடத்தை பிடிக்க யாஷஸ்வி ஜெய்ஷ்வால், வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரோகித் சர்மாவின் இடத்திற்கு பிசிசிஐ தற்போதே ஒரு வீரரை தேர்வு செய்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும் அவரது இடத்தில் ஒரு பார்ட் டைம் பவுலரை விளையாட வைக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாம்.
இது தொடர்பாக ஆலோசித்த பிசிசிஐ, ரோகித் சர்மாவின் இடத்திற்கு அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூரியவன்சியை இறுதி செய்திருக்கிறதாம். இருவருமே பார்ட் டைம்மாக பந்து வீசுவதால் இவர்களை தேர்வு செய்திருக்கிறதாம். இவர்களுக்கு அடுத்த விஜய் ஹசாரே டிராபியில் பந்து வீச வாய்ப்பளிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் யார் சிறப்பாக விளையாடுகிறாரோ அவரை ரோகித் சர்மா இடத்தில் விளையாட வைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மாவிற்கு பிறகு அவரது இடத்தில் ஜெய்ஸ்வால் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதேசமயம் அவர் இல்லாத சமயத்தில் அவரே ரோகித் இடத்தில் விளையாடி வந்தார். இதனால் அவர்தான் அவரது இடத்தில் பிற்காலத்தில் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் பிசிசிஐ-யின் முடிவு வேறாக உள்ளது.
காரணம், இந்திய அணி டெண்டுல்கர், சேவாக் உள்ளிட்டோர் இருந்தபோது அவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசி சில நேரங்களில் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி கொடுப்பார்கள். ஆனால் அவர்களின் காலத்திற்கு பிறகு அப்படி ரோகித் சர்மா, தவான் போன்றவர்கள் செயல்படவில்லை. தற்போது வரை அப்படி டாப் ஆர்டரில் இருப்பவர்கள் பேட்டிங் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பந்து வீச்சாளர்கள் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான், ஓப்பனர்கள் பந்து வீச வேண்டும் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.