சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நீடிப்பாரா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. தோனிக்கு பிற்கு அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட ருதுராஜ் அதனை எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செய்யவில்லை. இதனால் கேப்டன் பதவில் மாற்றம் தேவை என ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் ருதுராஜுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாக தற்போதைய வீரர்களுடன் சிஎஸ்கே விளையாட உள்ள கடைசி சீசன் என்பதால், 2027-ல் கேப்டனை மாற்றுவது சரியான முடிவாக இருக்காது என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
ருதுராஜின் தலைமையில் சிஎஸ்கேவின் செயல்பாடு குறித்து பார்க்கும்போது, அவர் இதுவரை 33 போட்டிகளில் அணியை வழிநடத்தி உள்ளார். இதில் 14 போட்டிகளில் வெற்றியும், 19 போட்டிகளில் தோல்வியும் பதிவாகி உள்ளன. மேலும், 2026 சீசனில் அவரது தனிப்பட்ட பேட்டிங் செயல்பாடும் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அந்த சீசனில் 337 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் 123.44 ஸ்ட்ரைக் ரேட்டுடன் தொடரை முடித்தார்.
இதற்கு மாறாக, சிஎஸ்கே அணியில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். 2026 சீசனில் 477 ரன்கள் குவித்த அவர், இரண்டு சதங்களையும் பதிவு செய்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 165.62 ஆக இருந்தது. இதனால் ருதுராஜுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.
சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் கேப்டன்சி அனுபவமும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய அவர், 2022 ஆம் ஆண்டு அந்த அணியை இறுதி போட்டி வரை அழைத்து சென்றிருந்தார். இதனால் அவரது தலைமை அனுபவத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே நிர்வாகம் முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழலில் ருதுராஜுக்கு உடனடியாக மாற்றாக மற்றொரு கேப்டனை நியமிக்கும் முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுக்குமா என்பது தெளிவாகவில்லை. அடுத்த மெகா ஏலத்திற்கு முன்பாக அணியின் தற்போதைய கட்டமைப்புடன் விளையாடும் வாய்ப்பை கருத்தில் கொண்டு, ருதுராஜுக்கு மேலும் ஒரு சீசன் வழங்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
மேலும், சிஎஸ்கே அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ள நிலையில், ஒரே நேரத்தில் கேப்டன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்வதை நிர்வாகம் விரும்பாது என தெரிகிறது. எனவே, 2027 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து வழிநடத்துவாரா என்பது அடுத்தக்கட்டத்தில் தெரியவரும்.