சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2027 ஐபிஎல் தொடருக்காக அணியை கட்டமைக்க தொடங்கி உள்ளது. அதன் முதல்படியாக புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளனர்.
18 ஆண்டுகளாக அப்பதவியில் இருந்த ஸ்டீபன் பிளேமிங்கை நீக்கிவிட்டு தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானை நியமித்துள்ளனர். இதையடுத்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் வீரர்கள் தேர்வில் மாற்றங்களை கொண்டு வருவதற்கான பணிகளில் அவர் ஈருட உள்ளாராம்.
சமீபத்திய ஐபிஎல் சீசன்களில் சில அணிகள் அதிரடி பேட்டிங் மூலம் பெரிய ஸ்கோர்களை பதிவு செய்து வருவது சிஎஸ்கேவின் கவனத்தை ஈடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் பவர் பிளே ஓவர்களிலேயே ரன் குவிப்பை அதிகரிக்கும் வகையில் புதிய பேட்டிங் வரிசையை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணியின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் தேர்விலும் ஜாகீர் கான் முக்கிய பங்காற்ற உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக டிரேடிங் மூலம் அணியின் பலவீனமான பகுதிகளை வலுப்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் இளம் வீரர்களையும் இணைத்து அணியை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வருவது குறித்தும் சிஎஸ்கே தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் குஜராத் டைட்டனஸ், டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகளில் உள்ள சில வீரர்களையும் டிரேடிங் மூலம் பெறுவது குறித்து பரிசீலனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் அணியின் வீரர்கள் தேர்வு மற்றும் நீக்கம் போன்ற விவகாரங்களில் போதுமான சுதந்திரம் வழங்கபட வேண்டும் என ஜாகீர் கான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அணியை தனது திட்டத்திற்கு ஏற்ப கட்டமைக்க நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்பாகவே டிரேடிங் நடவடிக்கைகளை தொடங்க சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வர முடியாத பட்சத்தில், ஏற்கனவே அணியில் உள்ள சிவம் துபே உள்ளிட்ட வீரர்களை வைத்து அணியின் அடுத்தக்கட்ட திட்டத்தை செயல்படுத்தவும் சிஎஸ்கே பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.