ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்கள் பட்டியலை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பல்வேறு வீரர்களை மாற்றுவது தொடர்பாக மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த சிஎஸ்கே, தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முக்கியமான டிரேடிங் ஒப்பந்தத்தை முடித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேகப்பந்து வீச்சாளர்களான கலீல் அகமது, நேதன் எல்லிஸ் ஆகியோர் ஹைதராபாத் அணிக்கு சென்றுள்ளனர். அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை சென்னை அணி பெற்றுள்ளது.
இந்த மாற்றம் சிஎஸ்கே ரசிகர்கள்மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய நேதன் எல்லிஸை அணியில் இருந்து விடுவித்தது ஏன் என்ற விவாதம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், எல்லிஸ் தானாகவே சிஎஸ்கே அணியில் இருந்து வெளியே விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேதன் எல்லிஸ், இங்கிலாந்தில் நடைபெறும் தி ஹன்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் அவரை அணுகி, தங்களது ஐபிஎல் அணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஹைதராபாத் அணியில் இணைந்தால், 2028 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அவருக்கு கணிசமான தொகையை வழங்கி தக்கவைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் பேசிய எல்லிஸ், தன்னை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேடிங் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அவரது விருப்பத்தை ஏற்றுக்கொண்ட சிஎஸ்கே, எல்லிஸை ஹைதராபாத் அணிக்கு அனுப்பி, அதற்கு மாற்றாக லியாம் லிவிங்ஸ்டனை அணியில் இணைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎஸ்கே நிர்வாகம் இந்த டிரேடிங்கில் எடுத்த முடிவு தற்போது ரசிகர்களிடையே விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அணியின் டெத் ஓவர் பந்துவீச்சுக்கு முக்கியமான வீரராக இருந்த எல்லிஸை வெளியே அனுப்பிய பிறகு, அவருக்கு இணையான திறமையுடைய பந்துவீச்சாளரை அணியில் சேர்க்காதது குறையாக பார்க்கப்படுகிறது.
எல்லிஸை பயன்படுத்தி டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் இருந்து அக்சர் படேல் போன்ற இந்திய ஆல்ரவுண்டரை பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதேபோல், எல்லிஸுக்கு மாற்றாக இளம் வேகப்பந்து வீச்சாளர் இசான் மலிங்கா போன்ற வீரரை வங்கியிருக்கலாம் என்றும் ரசிகள் விவாதித்து வருகின்றனர். ஆனால், தற்போது சிஎஸ்ஏ அணியில் டெத் ஓவர்களில் நம்பகமாக செயல்படக்கூடிய பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அந்த இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த பந்துவீச்சு குறையை சரிசெய்யும் நோக்கில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை வாங்குவதற்கு சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷமி அணியில் இணைந்தால், வேகப்பந்து வீச்சு பிரிவில் அனுபவம் கிடைப்பதுடன், முக்கியமான ஓவர்களில் அணிக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அணியின் இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை வலுப்படுத்தவும் சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் இருந்து அக்சர் படேலை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்சர் படேலை பெறுவதற்கு, சிவம் துபே அல்லது டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோரில் ஒருவரை மாற்றாக வழங்குவது குறித்து சிஎஸ்கே ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியில் சுழற்பந்து வீச்சு பிரிவை மேலும் வலுப்படுத்தும் வகையில், நூர் அகமதுவை டிரேடிங் செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு மாற்றாக டெல்லி அணியின் அசுதோஷ் சர்மா அல்லது ஷமிர் ரிஸ்வி ஆகியோரில் ஒருவரை வாங்குவது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தால், அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பிரிவுகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சிஎஸ்கே மற்றொரு முக்கியமான டிரேடிங் பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா ஆகியோரை வாங்குவது குறித்து சிஎஸ்கே ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு மாற்றாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை வழங்கினால், சாய் கிஷோர் மற்றும் ரபாடா ஆகியோரை அணியிலிருந்து விடுவிக்க தயாராக இருப்பதாக குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒப்பந்தம் தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகம் தனது இறுதி முடிவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
மொத்தத்தில், சிஎஸ்கே அணியின் தற்போதைய டிரேடிங் நடவடிக்கைகள் பேட்டிங், வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என பல்வேறு பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஆனால், நேதன் எல்லிஸ் வெளியேறியதால் ஏற்பட்டுள்ள டெத் ஓவர் பந்துவீச்சு குறையை சென்னை அணி எவ்வாறு சரிசெய்யும் என்பதே ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.