ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்காக அணிகளை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக டி நடராஜனை டிரேடிங் முறையில் வாங்குவதற்கு சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டிருந்தது. ஆனால், நாடராஜனை அணியில் இருந்து விடுவிக்க முடியாது என்று அப்போது டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.
தற்போது நிலைமை மாறியுள்ளதாக தெரிகிறது. டி நடராஜனை டிரேடிங் மூலம் விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் முன்வந்திருப்பதாகவும், இதற்காக சிஎஸ்கே அணியிடம் இருந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎஸ்கே அணியில் ஏற்கனவே அன்ஷுல் கம்போஜ், முகேஷ் செளத்ரி உள்ளிட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் அடுத்த சீசனுக்கான அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர குர்ஜாப்னீத் சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோரும் அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அனுப்பினால், அதற்கு பதிலாக டி நடராஜனை சிஎஸ்கேவுக்கு வழங்க அந்த அணி நிர்வாகம் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி நடராஜனுக்கு தற்போது 35 வயதாகிறது. அவரது வயது மற்றும் சமீபத்திய செயல்பாடுகளை கருத்தில் கொண்டு, நீண்ட கால அணித் திட்டத்தில் இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க டெல்லி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே நடராஜனை டிரேடிங் செய்து, அவருக்கு மாற்றாக இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை அணிக்குள் கொண்டு வர டெல்லி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், சிஎஸ்கே அணியும் அடுத்த சீசனில் வலுவான கம்பேக் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. எதிர்கால அணிக்கட்டமைப்பை கருத்தில் கொண்டு சில வீரர்களை விடுவித்து, புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதற்கான திட்டங்களியும் சிஎஸ்கே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக குர்ஜாப்னீத் சிங் அல்லது கலீல் அகமது ஆகியோரில் ஒருவரை டிரேடிங் மூலம் விடுவிப்பது சிஎஸ்கேவுக்கு பெரிய பிரச்சனையாக இருக்காது என்றே தெரிகிறது. இதனால், டெல்லியின் நிபந்தனைக்கு சிஎஸ்கே நிர்வாகம் சம்மதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2026 ஐபிஎல்லில் டி நடராஜனின் செயல்பாடு எதிர்பாத்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. மொத்தம் 10 போட்டிகளில் விளையாடிய அவர், 11.48 என்ற எகானமியில் 5 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் மற்ற 9 போட்டிகளில் அவரால் 2 விக்கெட்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
டி நடராஜனை சிஎஸ்கே வாங்க ஆர்வம் காட்டுவதற்கு சேப்பாகம் மைதானமும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் டிஎன்பிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி உள்ள நடராஜன் 7.85 என்ற எகானமியில் 13 விக்கெட்களை எடுத்துள்ளார்.
சென்னை மைதானத்தின் தன்மை மற்றும் அங்கு விளையாடிய அனுபவம் குறிப்பாக டெத் ஓவர்களில் அவருக்கு சாதகமாக அமையலாம் என சிஎஸ்கே நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது.இதனால் அடுத்த சீசனில் நடராஜனின் அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ள சென்னை அணி விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.