MI-ல் அர்ஷ்தீப்; PBKS-ல் ஹர்திக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு... யாருக்கு அதிக லாபம்?
Hardik - Arshdeep Trade: ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் டிரேட் ஐபிஎல் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாறியுள்ளனர். இதன்மூலம், எந்த அணிக்கு அதிக லாபம் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Hardik Pandya - Arshdeep Singh IPL Trade: ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் டிரேட் ஐபிஎல் நிர்வாகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாறியுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றிலேயே மிக சிறப்பு வாய்ந்த டிரேடாக இது பார்க்கப்படுகிறது. 2025 மெகா ஏலத்தில் ரூ.16.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தற்போது ரூ.18 கோடி உடன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்றுள்ளார்.
அதேநேரத்தில், 2025 மெகா ஏலத்தில் ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் எடுக்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் தற்போது அதே ரூ.18 கோடியுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவருமே இந்திய அணியில் முக்கிய வீரர்கள் என்பதால் இவர்களின் டிரேட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா 2015ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். 2015, 2017, 2019, 2020 என நான்கு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்ற ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியா முக்கிய வீரரா திகழந்தார் . தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அவரை விடுவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக்கியது. 2022இல் குஜராத்திற்கு கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக், 2023இல் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். தொடர்ச்சியாக இரண்டு இறுதிப்போட்டிகளுக்கு அணியை அழைத்துச் சென்ற ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி All-in Cash டிரேட் மூலம் பெற்றுக்கொண்டது.
2024 ஐபிஎல் சீசனில் அவரை கேப்டனாக்கியது. கடந்த மூன்று சீசன்களாக மும்பை அணி பின்னடைவையே சந்தித்தது. 2020இல் கோப்பையை வென்ற பின்னர் கடந்த 6 சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் ஒருமுறை கூட இறுதிப்போட்டிக்கு தகுதிபெறவில்லை. கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை டிரேட் செய்துள்ளது. இதனால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவார்.
ஹர்திக் பாண்டியா 162 ஐபிஎல் போட்டிகளில் 2,955 ரன்களையும், 82 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங்
ஐபிஎல் தொடரில் அர்ஷ்தீப் சிங் 2019இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமானார். இவர் 96 போட்டிகளில் 111 விக்கெட்டை எடுத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு பௌலர் அதிக விக்கெட்டை வீழ்த்திய பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
புதிய பந்திலும், பழைய பந்திலும் பந்துவீசக்கூடியவர். 2025 சீசனில் 21 விக்கெட்டுகள், 2024 சீசனில் 14 விக்கெட்டுகள் என தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்திய அணிக்கு டி20ஐ போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இவர்தான்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்ன பிளஸ்?
- ஹர்திக் பாண்டியா சென்றதால் மும்பை அணிக்கு பெரிய நஷ்டம் ஏதுமில்லை. மிடில் ஆர்டரில் சூர்யகுமார், திலக் வர்மா, நமன் திர், ரூதர்போர்ட், வில் ஜாக்ஸ், சான்ட்னர் என மிரட்டலான பேட்டிங் வரிசை உள்ளது. இதில் இரண்டு பந்துவீச்சு ஆப்ஷனும் வந்துவிடும்.
- அர்ஷ்தீப் சிங் பவர்பிளேவில் 2 ஓவர்களை வீசக்கூடியவர். இதனால் டிரென்ட் போல்ட் தேவையில்லை. தீபக் சஹாரும் கழட்டிவிடப்படலாம். அர்ஷ்தீப் சிங் நியூ பாலில் மட்டுமின்றி பும்ரா உடன் இணைந்து டெத் ஓவர்களையும் பார்த்துக்கொள்வார்.
- அர்ஷ்தீப் சிங் வந்திருப்பதால் மும்பை அணிக்கு நல்ல பேலன்ஸ் கிடைத்திருக்கிறது. எனினும் அடுத்த சீசனில் மெகா ஏலம் வரும் என்பதால் அர்ஷ்தீப் சிங்கை மும்பை தக்கவைக்குமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.
- மும்பை அணிக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார், இதனால் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற ரோஹித் - சூர்யகுமார் - பும்ரா - அர்ஷ்தீப் ஆகியோர் மீண்டும் இணைவதால் மும்பைக்கு 6வது கோப்பைக்கான பாதையில் வெளிச்சம் தென்பட்டுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு என்ன பிளஸ்?
- 2025 மெகா ஏலத்திற்கு பின்னர், அதாவது பாண்டிங் வருகைக்கு பின் பஞ்சாப் பெரியளவில் பலமடைந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஸியிலும் கவனம் ஈர்த்தார். 2025இல் இறுதிப்போட்டி வரை வந்த பஞ்சாப், 2026 சீசனில் 5வது இடத்தில் நிறைவு செய்து ஜஸ்ட் மிஸ்ஸில் பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்டது.
- இருப்பினும், டாப் ஆர்டர் முதல் எக்கச்சக்க அதிரடி வீரர்களை வைத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கூடுதல் பலத்தையே சேர்க்கிறார்.
- சூர்யான்ஷ் ஷெக்டே, மார்கோ யான்சன், அஸ்மத்துலா ஓமர்ஸாய், கூப்பர் கானொலி, மிட்ச் ஓவன், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டாய்னிஸ் என ஆல்-ரவுண்டர்களால் பஞ்சாப் நிரம்பியிருக்கும் வேளையில் இன்னொரு வேகப்பந்துவீச்சு பாஸ்ட் பௌலராக ஹர்திக் பாண்டியாவும் வந்திருப்பது அந்த அணிக்கு எக்கச்சக்க பந்துவீச்சு ஆப்ஷனை கொடுக்கிறது.
- யாஷ் தாக்கூர், வைஷாக் விஜயகுமார், ஹர்னூர் பிரர் என இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும் இருப்பதால் அர்ஷ்தீப் சிங் சென்றது பஞ்சாப் அணிக்கும் பெரிய பாதகமில்லை. இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு யான்சன் இருக்கிறார்.
- பஞ்சாப் அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்வார். இருப்பினும் 2028 மெகா ஏலத்தில் பஞ்சாப் ஷ்ரேயாஸ், ஹர்திக் இருவரையும் தக்கவைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
ஹர்திக் - அர்ஷ்தீப் டிரேடால் இரு அணிகளுக்குமே சாதகங்கள் அதிகம். அதேநேரத்தில் இரு அணிகளுக்கும் பெரியளவில் பாதகம் இல்லை. மெகா ஏலம் தக்கவைப்பை தவிர இரு அணிகளுக்குமே இது நல்ல டிரேட்தான்.