SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தோனி தேர்வு செய்த கேப்டன்.. ஜாகீர் கான் சொன்ன முக்கிய தகவல்

ஐபிஎல் 2027 தொடரிலும் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வதை உறுதிப்படுத்திய ஜாகீர் கான், தோனியின் தலைமைத்துவ அனுபவத்துடன் ருதுராஜின் தனித்துவமான பாணியை இணைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Nov 21, 2026, 10:45 IST | Updated: Nov 21, 2026, 10:49 IST
Join

ஐபிஎல் 2027 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து செயல்படுவார் என்பதை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் உறுதிப்படுத்தி உள்ளார். முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி அடையாளர் காட்டிய கேப்டனான ருதுராஜ் மீது அணி நிர்வாகம் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். தோனிக்கு பிறகு அணியை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையே 2026 நவம்பர் 17 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். தொடர்ந்து சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக அவர் செயல்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தோனி ஓய்வு அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “Lead the way., Rutu! என்று பதிவிட்டது. இதன் மூலம் 2027 ஐபிஎல் தொடரிலும் ருதுராக் கேப்டனாக தொடர்வது உறுதியானது.

ருதுராஜுக்கு தோனி கொடுத்த வாய்ப்பு

இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான், தோனியின் தலைமைத்துவ அனுபவத்தையும் ருதுராஜின் தனித்துவமான அணுகுமுறையையும் இணைத்து அணியை வழிநடத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ருதுராஜ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், கிரிக்கெட் போட்டிகளை அவர் அணுகும் விதம் மற்றும் அவரது தலைமைத்துவ பாணி ஆகியவற்றை புரிந்துகொள்வதே தனது முதல் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தோனி பல ஆண்டுகளாக அணியில் உருவாக்கியுள்ள தலைமைத்துவ முறையையும் ருதுராஜின் சிந்தனைகளையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியின் அடையாளமும் தனித்துவமும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், கேப்டனுக்கு ஏற்ற வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ருதுராஜ் தனது திட்டங்களை செயல்படுவத்துவதுடன், தனது தனிப்பட்ட பாணியையும் அணியில் வெளிப்படுத்த முடியும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜாகீர் கான், அவர் விளையாட்டை நன்கு புரிந்துக்கொண்டு செயல்படும் வீரர் என்று பாராட்டியுள்ளார். ஒரு போட்டியை எவ்வாறு திட்டமிட்டு அணுக வேண்டும் என்பதற்காக ருதுராஜ் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலவிடுகிறார். அவருடைய சிந்தனைகளையும் பயிற்சியாளர்கள் மற்றும் அணியின் அனுபவங்களையும் இணைத்து சரியான முடிவுகளை எடுப்பது குறித்துப் பேசி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு கேப்டனுக்கு பல்வேறு கோணங்களில் சிந்திக்கும் திறன் அவசியம். அதேசமயம், போட்டியின் சூழலுக்கு ஏற்ப உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவெடுக்கும் சுதந்திரமும் இருக்க வேண்டும். ருதுராஜ் தனது முடிவுகள் மீது நம்பிக்கை வைத்து செயல்படுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதே எங்களது நோக்கம் என்று அவர் கூறியுள்ளார்.

மைதானத்தில் கேப்டன்தான் முழுப் பொறுப்பையும் ஏற்று செயல்பட வேண்டும். தொழில்நுட்பம், புள்ளிவிவரங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் பயிற்சியாளர் குழு தேவையான ஆதரவை வழங்கும். ஆனால், போட்டியின் போக்கை உணர்ந்து தனது உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவெடுக்கும் சுதந்திரம் கேப்டனுக்கு இருக்க வேண்டும் என்றும் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சியில் சிஎஸ்கே!

ருதுராஜ் கெய்க்வாட் 2024ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த அணியை வழிநடத்திய நான்காவது கேப்டன் என்ற பெருமையையும் பெற்றார்.

இதுவரை அவர் 33 ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இதில் 14 போட்டிகளில் வெற்றியும், 19 போட்டிகளில் தோல்வியும் கிடைத்துள்ளன. இதன் மூலம் அவரது வெற்றி சதவீதம் 42.42 ஆக உள்ளது.

2024ஆம் ஆண்டு தனது முதல் சீசனில் 14 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர், 7 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்தார். அந்த சீசனில் நெட் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி ஐந்தாவது இடத்தை பிடித்தது.

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் 5 போட்டிகளுக்கு மட்டுமே ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியதால், மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதையடுத்து 2026ஆம் ஆண்டு முழுநேர கேப்டனாக திரும்பிய ருதுராஜுக்கு அந்த சீசன் ஏமாற்றமாக அமைந்தது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது.

இருப்பினும், ருதுராஜ் மீது நம்பிக்கை வைத்துள்ள சிஎஸ்கே நிர்வாகம், 2027 ஐபிஎல் தொடரிலும் அவரையே கேப்டனாக தொடர செய்ய முடிவு செய்துள்ளது. தோனியின் வழிகாட்டுதல், ஜாகீர் கானின் பயிற்சி மற்றும் ருதுராஜின் தலைமைத்துவம் ஆகியவை இணைந்து அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடித்தருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES