ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தவர் சஞ்சு சாம்சன். சிஎஸ்கே அணியில் இணைந்த முதல் சீசனிலேயே தனது பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்த அவர், 14 போட்டிகளில் 477 ரன்களை குவித்தார். 34.07 என்ற பேட்டிங் சராசரியுடன் 165.62 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியதால், அடுத்தடுத்த சீசன்களிலும் சாம்சன் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்ப்பு உருவானது.
ஆனால், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் சிஎஸ்கே மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான எதிர்காலம் குறித்து புதிய கேள்விகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக, ஐபிஎல் 2027 சீசனுக்கான கேப்டன்சி தொடர்பான விவகாரம் அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கே அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் கடந்த மூன்று சீசன்களாக அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த சீசனில் ருதுராஜின் பேட்டிங்கும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவரது ஸ்ட்ரைக் ரேட் 123 என்ற அளவிதான் இருந்தது.
இந்த சூழலில், 2027 சீசனில் தனக்கு கேப்டன் வாய்ப்பு வழங்க வேண்டும் என சஞ்சு சாம்சன் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் சிஎஸ்கே நிர்வாகத்தின் அடுத்தக்கட்ட திட்டம் வேறுவிதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பிறகு 19 வயதான ஆயுஷ் மாத்ரேவை அணியின் அடுத்த கேப்டனாக உருவாக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இளம் வயதிலேயே அவரை அணியில் வளர்த்து, நீண்ட காலத்திற்கு கேப்டன்சி பொறுப்பை வழங்க வேண்டும் என்பதே நிர்வாகத்தின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கேப்டன்சி தொடர்பாக சஞ்சு சாம்சன் முன்வைத்துள்ள விருப்பம் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், 2027 ஐபிஎல் சீசனுக்காக சிஎஸ்கே ஒரு ஒபனரை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பவர் பிளே ஓவரில் அதிரடியாக விளையாடக்கூடிய வெளிநாட்டு பேட்டரை அணிக்குள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை ஏலத்தில் வாங்க சிஎஸ்கே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அவருக்காக சுமார் ரூ. 25 கோடி வரை செலவு செய்யவும் அணி நிர்வாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில சீசன்களில் சிஎஸ்கே அணியின் சேஸிங்கில் பெரிய ஸ்கோர்களை எட்டுவதில் சிரமம் இருந்ததாக கூறப்படும் நிலையில், பவர் பிளேவில் அதிரடியாக ரன்களை குவிக்கும் வீரர் தேவைப்படுவதாக நிர்வாகம் கருதுகிறதாம்.
ஹேரி ப்ரூக்கை சிஎஸ்கே வாங்கினால், அவரையும் ஆயுஷ் மாத்ரேவையும் தொடக்க வீரர்களாக களமிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 27 வயதாகும் ஹேரி ப்ரூக்கை அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியின் நிரந்தர ஓபனராக பயன்படுத்த முடியும் என சிஎஸ்கே நிர்வாகம் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில், ருதுராஜ் கெய்க்வாட்டை ஒன்டவுன் வரிசையில் களமிறக்க திட்டமிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் ஏற்பட்டால், அணியின் பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாகும்.
சஞ்சு சாம்சன் 2026 சீசனில் 477 ரன்களை குவித்திருந்தாலும், அதன்பின் அவரிடம் இருந்து ஒரு சீரான ஆட்டம் வெளிப்படவில்லை. தற்போது வரை இந்திய அணியில் ரன்களை குவிக்க தவறுகிறார். இதுவே சிஎஸ்கே அவரை நிராகரிக்க முக்கிய காரணமாக இருக்கும் என தெரிகிறது.
சஞ்சு சாம்சனை டிரேட் அல்லது ஏலத்திற்கு அனுப்பிவிட்டு ஹேரி ப்ரூக்கை வாங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சன் மட்டுமின்றி, ருதுராஜ் கெய்க்வாட்டின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது. 2027 சீசனில் கேப்டன் பதவி வழங்கப்படவில்லை என்றால், ருதுராஜும் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங் மூலம் அணிக்குள் கொண்டு வர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் கேப்டன்சி மற்றும் பேட்டிங் வரிசை தொடர்பாக மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
எனினும், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்களின் எதிர்காலம் தொடர்பாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.