IPL 2027 Mini-Auction Explained: ஐபிஎல் 2027 மினி ஏலம்.. தக்கவைப்பு, விடுவிப்பு மற்றும் டிரேட் விதிகள் என்ன?
வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாக, அணிகளின் வீரகள் தக்கவைப்பு, விடுவிப்பு, டிரேட் விதிமுறைகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2027 ஆம் ஆண்டிற்கான மினி ஏலம் இம்முறை மீண்டும் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. வரும் டிசம்பர் 16 ஆம் தேதி கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் நட்சத்திர விடுதியில் இந்த பிரம்மாண்ட ஏலம் நடைபெற உள்ளது. 2028 ஆம் ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், நடப்பு சுழற்சியின் கடைசி மினி ஏலமாக இது அமைகிறது. இதற்கு முன்பாக, அனைத்து 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்து கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் இறுதி பட்டியலை நாளை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் போட்டி காரணமாக நவம்பர் 15 ஆம் தேதி இருந்த காலக்கெடு இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏலத்திற்கு முன்பாக அணிகளின் பலத்தையும், கையிருப்பு தொகையையும் மாற்றியமைக்கும் தக்கவைப்பு, விடுவிப்பு மற்றும் டிரேட் விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
Retention என்றால் என்ன?
Retention என்பது ஒரு அணி ஏற்கனவே ஒப்பந்தத்தில் வைத்திருக்கும் வீரரை அடுத்த சீசனுக்கும் தன்னிடமே தக்கவைத்து கொள்வதாகும். அதாவது, அந்த வீரரை ஏலத்திற்கு அனுப்பாமல் அணியிலேயே தொடரச் செய்வதாகும்.
இவ்வாறு தக்கவைக்கப்படும் வீரருக்கான ஒப்பந்தத் தொகை, அந்த அணியின் மொத்த ஏலப் பணத்தில் இருந்து கணக்கிடப்படும். இதனால் ஏலத்தின்போது செலவிடுவதற்கு கிடைக்கும் தொகை குறையும். ஆனால், முக்கியமான வீரர்களை மற்ற அணிகள் ஏலத்தில் வாங்கிவிட முடியாது என்பதால், அணியின் முக்கிய வீரர்களை பாதுகாக்க Retention உதவுகிறது.
இந்த மினி ஏலத்தில் வீரர்களை தக்கவைத்து கொள்வதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கை வரம்பு கிடையாது. இருப்பினும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரர்களை கொண்டிருக்க வேண்டும். இதில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 8ஐ தாண்டக்கூடாது.
வீரர்களை விடுவிப்பது
வீரர்களை விடுவிப்பது என்பது ஒரு அணி தனது ஒப்பந்தத்தில் உள்ள வீரரை விடுவித்து, அவரை மீண்டும் ஏலப் பட்டியலுக்கு அனுப்புவதாகும். இதன் மூலம் அந்த வீரருக்காக ஒதுக்கப்பட்டிருந்த முழு ஒப்பந்த தொகையும் அணியின் ஏலப் பணத்திற்குத் திரும்பக் கிடைக்கும். அதேபோல், அணியில் ஒரு வீரருக்கான இடமும் காலியாகும்.
உதாரணமாக, ஒரு அணி ரூ.10 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ள வீரரை விடுவித்தால், அந்த ரூ.10 கோடியும் அணியின் ஏலப் பணத்தில் மீண்டும் சேர்க்கப்படும். அந்த வீரர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்கும்போது, எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முடியும். ஆனால், இந்த மினி ஏலத்தில் Right to Match (RTM) கார்டு கிடையாது. எனவே, ஒரு வீரரை விடுவித்துவிட்டு மீண்டும் குறைந்த தொகைக்கு வாங்கிவிடலாம் என்று எந்த அணியும் உறுதியாக கூற முடியாது. மற்ற அணிகள் அதிக தொகைக்கு ஏலம் கேட்டால், அந்த வீரரை இழக்க நேரிடலாம்.
டிரேட் என்றால் என்ன?
டிரேட் என்பது ஒரு அணியில் உள்ள வீரரை மற்றொரு அணிக்கு மாற்றுவதாகும். இது பணப் பரிமாற்றம் மூலமாகவோ அல்லது ஒரு வீரருக்கு பதிலாக மற்றொரு வீரரை மாற்றுவதன் மூலமாகவோ நடைபெறும். இதற்கு வீரரை வழங்கும் அணி, வீரரை பெறும் அணி மற்றும் சம்பந்தப்பட்ட வீரர் ஆகிய மூவரின் ஒப்புதலும் அவசியம். மேலும், பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக குழுவின் அனுமதியும் பெறப்பட வேண்டும்.
இந்த பரிமாற்றத்தில் வீரருக்கான ஒப்பந்தத் தொகையும் முக்கியமானது. வீரரை பெறும் அணி அவரது ஒப்பந்தத் தொகையை ஏற்றுக்கொள்ள வேண்டும். வீரரை வழங்கும் அணிக்கு அந்த தொகை ஏலப் பணத்தில் இருந்து விடுவிக்கப்படும். இரு அணிகளும் ஒப்புக்கொண்டால், வீரரின் ஒப்பந்தத் தொகையை மாற்றியமைக்கவும் முடியும்.
இதன் நன்மை என்னவென்றால், ஏலத்திற்கு செல்வதற்கு முன்பே ஒரு அணிக்கு தேவையான வீரரை உறுதியாக பெற முடியும். இதனால் ஏலத்தில் மற்ற அணிகளுடன் போட்டியிட்டு அதிக தொகை செலவிட வேண்டிய அவசியம் குறையும்.
சமீபத்திய டிரேட்.. ரிஷப் பண்ட் முதல் ஹர்திக் பாண்டியா வரை!
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்பாகவே பல முக்கிய வீரர்கள் அணிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ரிஷப் பந்த் – குல்தீப் யாதவ்: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து ரிஷப் பந்த் ரூ.15 கோடி ஒப்பந்த தொகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அதேபோல், குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடி ஒப்பந்தத் தொகையில் லக்னோ அணிக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பந்தின் ஒப்பந்தத் தொகை இந்தப் பரிமாற்றத்தின் மூலம் குறைந்துள்ளது.
ஹர்திக் பாண்டியா – அர்ஷ்தீப் சிங்: நவம்பர் 11ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றது. இதன்படி, ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையில் பஞ்சாப் அணிக்கும், அர்ஷ்தீப் சிங் தனது ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையுடன் மும்பை அணிக்கும் மாறியுள்ளனர்.
சிஎஸ்கே – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: இரு அணிகளுக்கும் இடையே நான்கு வீரர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, லியாம் லிவிங்ஸ்டன் ரூ.6 கோடி ஒப்பந்தத் தொகையிலும், ஜேக் எட்வர்ட்ஸ் ரூ.3 கோடி ஒப்பந்தத் தொகையிலும் சிஎஸ்கே அணிக்கு மாறியுள்ளனர். அதேபோல், கலீல் அகமது ரூ.4.8 கோடி மற்றும் நாதன் எல்லிஸ் ரூ.2 கோடி ஒப்பந்தத் தொகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு மாறியுள்ளனர்.
இதுதவிர, டெல்லி அணியிலிருந்து சன்ரைசர்ஸ் அணிக்கு டி.நடராஜன் ரூ.5 கோடி ஒப்பந்த தொகையில் மாறியுள்ளார். முன்னதாக அவரது ஒப்பந்தத் தொகை ரூ.10.75 கோடியாக இருந்தது. அதே பரிமாற்றத்தில் ஜீஷன் அன்சாரி ரூ.40 லட்சம் ஒப்பந்த தொகையில் டெல்லி அணிக்குச் சென்றுள்ளார்.
IPL 2027 ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு பணம்?
ஐபிஎல் ஏலத்தில் அணிகள் செலவிடுவதற்கான தொகை Auction Purse என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், Auction Purse மற்றும் Salary Cap இரண்டும் ஒன்றல்ல. 2025-27 வீரர்கள் விதிமுறைகளின்படி, ஒவ்வொரு அணிக்குமான மொத்த Salary Cap 2025ல் ரூ.146 கோடியாகவும், 2026-ல் ரூ.151 கோடியாகவும், 2027-ல் ரூ.157 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்தத் தொகையில் Auction Purse, வீரர்களுக்கான கூடுதல் செயல்திறன் ஊதியம் (Incremental Performance Pay) மற்றும் போட்டிக் கட்டணம் (Match Fees) ஆகியவை அடங்கும். ஒரு போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும், இம்பாக்ட் பிளேயர் உட்பட, ரூ.7.5 லட்சம் போட்டிக் கட்டணமாக வழங்கப்படுகிறது.
2027 சீசனுக்கான Auction Purse ரூ.130 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2026 சீசனைக் காட்டிலும் ரூ.5 கோடி அதிகமாகும்.
ஏலத்தில் ஒரு வீரரை எப்படி வாங்குவார்கள்?
ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் அடிப்படை விலை (Base Price) நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இதுவே அந்த வீரருக்கான ஏலத்தின் தொடக்கத் தொகையாகும்.
ஏலத்தின்போது அணிகள் குறிப்பிட்ட தொகை இடைவெளிகளில் தங்களது ஏலத் தொகையை உயர்த்தும். மற்ற அணிகள் ஏலம் கேட்பதை நிறுத்திய பிறகு, அதிக தொகை கேட்ட அணிக்கு அந்த வீரர் சொந்தமாவார். அந்த இறுதி ஏலத் தொகை சம்பந்தப்பட்ட அணியின் Auction Purse-ல் இருந்து கழிக்கப்படும்.
உதாரணமாக, ஒரு அணியிடம் ரூ.30 கோடி ஏலப் பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த அணி ரூ.10 கோடிக்கு ஒரு வீரரை வாங்கினால், மீதமுள்ள ரூ.20 கோடியை மற்ற வீரர்களை வாங்குவதற்கு பயன்படுத்தலாம். நிர்ணயிக்கப்பட்ட செலவு வரம்பை எந்த அணியும் மீற முடியாது.