IPL 2027: டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜேக்கப் பெத்தேல் விடுவிக்கப்பட்டது ஏன்? Explained
ஐபிஎல்லில் மூன்று முக்கிய வீரர்களான டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரை அவர்களது அணி விடுவித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இவர்களை விடுவிக்கும் முடிவை அந்தந்த அணிகள் எடுத்ததன் காரணம் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க விரரான டிராவிஸ் ஜெட், டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக மினி ஏலத்தின்போது அணிகள் தங்களின் முக்கிய வீரர்களை வைத்துக்கொண்டு தேவையில்லாத வீரர்களை விடுவிப்பார்கள். ஆனால், இந்த மூன்று வீரர்களின் விஷயத்திலும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன.
டிராவிஸ் ஹெட்: சர்வதேச போட்டிகளுக்கு முன்னுரிமை
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான தொடக்க வீரராக திகழ்ந்தவர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட். கடந்த சில ஆண்டுகளாக அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அதிரடியான தொடக்கத்தை வழங்கி வந்தார். பவர் பிளே ஓவர்களில் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதில் அவரது ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது. அவருக்கு ரூ. 14 கோடியை ஊதியமாக எஸ்ஆர்ஹெச் அணி வழங்கி வந்தது.
இருப்பினும், 2027 ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என டிராவிஸ் ஹெட் முடிவு செய்துள்ளார். இதனால் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன் இந்த சீசனுக்கான ஏலத்திலும் பதிவு செய்யப்போவதில்லை.
இதற்கான முக்கிய காரணம் ஆஸ்திரேலிய அணியின் அடுத்தடுத்த சர்வதேச கிரிக்கெட் தொடர்கள்தான். நியூசிலாந்துக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர், இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபி, இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் என ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் காத்திருக்கின்றன. தற்போது ஆஸ்திரேலியா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு குறைவாக உள்ளது. அதனால் வரும் டெஸ்ட் போட்டிகள் அனைத்து அவர்களுக்கு முக்கியமானவை என்பதால் அதில் முழு கவனம் செலுத்த டிராவிஸ் ஹெட் விரும்புகிறார். மேலும், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கும் தயாராக வேண்டும் என்பதால், ஹெட் அடுத்தாண்டு ஐபிஎல்லை தவிர்த்துள்ளார்.
அதேசமயம், குடும்பத்திற்கும் நேரம் ஒதுக்குவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஹெட் தெரிவித்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியுடனான தனது பயணம் சிறப்பானதாக இருந்ததாகவும், அணியின் நிர்வாகம், பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்: பணிச்சுமை மேலாண்மை காரணமா?
டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விலையாடி வந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கு ஐபிஎல் 2027 தொடரில் இருந்து விலகி உள்ளார். கடந்த சீசனுக்கு முன்னதாக ரூ. 11.75 கோடிக்கு அவர் டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ஆனால், கடந்த சீசனிலேயே ஆஸ்திரேலியே கிரிக்கெட் வாரியத்தின் பணிச்சுமை மேலாண்மை கொள்கை காரணமாக அவர் முதல் பாதி போட்டிகளில் விளையாடவில்லை. தற்போது 2027ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியமான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் அடுத்தடுத்து இருப்பதால், ஸ்டார்க்கின் ஐபிஎல் பங்கேற்பு கேள்விக்குறியானது.
குறிப்பாக, நியூசிலாந்து, இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு முக்கியமானவையாக உள்ளன. இதனுடன் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான பயற்சிகளும் இருப்பதால், ஸ்டார்க் தனது பணிச்சுமையை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ஐபிஎல் 2027 தொடரில் பங்கேற்க முடியாது என்பதை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் பிசிசிஐக்கும் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்டார்க்கை அந்த அணி விடுவித்துள்ளது. அவரது விலகல் குறித்து டெல்லி கேபிடல்ஸ் வெளியிட்ட அறிக்கையிலும், ஆஸ்திரேலிய அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஜேக்கப் பெத்தேல்: காயத்தால் ஏற்பட்ட பின்னடைவு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இருந்து ஜேக்கப் பெத்தேல் விடுவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் இளம் ஆல்-ரவுண்டரான பெத்தேல், கடந்த ஜூலை மாதம் முதல் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார். அவருக்கு ஏற்கெனவே முழங்கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், காயம் மீண்டும் ஏற்பட்டதால் மற்றொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதனால் அவர் எப்போது மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்று தெரியவில்லை. ஐபிஎல் 2027 தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் முழுமையாக குணமடைந்து அணிக்குத் திரும்புவாரா என்பதையும் உறுதியாகக் கூற முடியவில்லை. இதன் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆர்சிபி கிரிக்கெட் இயக்குநர் மோ பாபட், பெத்தேலை விடுவிப்பது மிகவும் கடினமான முடிவு என்றும், அவரது திறமை மற்றும் அணிக்கான பங்களிப்பை தாங்கள் மிகவும் மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், காயம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் அவர் களத்திற்கு திரும்பும் காலம் குறித்து போதிய தெளிவு இல்லை என்றும் விளக்கியுள்ளார்.
அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவரும் பெத்தேலின் திறமையை பாராட்டியதுடன், அவர் விரைவில் முழு உடற்தகுதியுடன் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
மாற்று வீரர்கள் யார்?
ஐபிஎல் 2027 மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் மூன்று வீரர்களும் இடம்பெற மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு பதிலாக தங்களது அணியின் தேவைகளை பூர்த்தி செய்யும் மாற்று வீரர்களை தேர்வு செய்வதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கவனம் செலுத்த உள்ளன.