2027 ஐபிஎல் சீசனுக்கான டிரேட் பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அடுத்த சீசனுக்கான அணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவி கிடைக்காத அதிருப்தியில் திலக் வர்மா இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை டிரேடிங் மூலம் அணிக்குள் கொண்டுவர ஆர்சிபி நிர்வாகம் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜத் படிதருக்கு அடுத்தபடியாக திலக் வர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என்ற திட்டத்துடன் அவரை அணிக்கு அழைக்க ஆர்சிபி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக தேவ்தத் படிக்கல்லை மாற்று வீரராக கொடுக்கவும் ஆர்சிபி தயாராக இருந்தது.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் படிக்கல்லுடன் க்ருணால் பாண்டியாவையும் சேர்த்து கொடுத்தால் மட்டுமே திலக் வர்மாவை டிரேடிங்கில் விட முடியும் என மும்பை அணி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது ஆர்சிபி அணிக்கு ஏற்புடையதாக இல்லாததால், திலக் வர்மா தொடர்பான பேச்சுவார்த்தையை அப்படியே கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, தேவ்தத் படிக்கல்லை அணிக்குள் கொண்டுவர சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக கார்த்திக் சர்மாவை மாற்று வீரராக வழங்குவதுடன், கூடுதலாக ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளரையும் தர தயாராக இருப்பதாக சிஎஸ்கே தரப்பில் இருந்து ஆர்சிபியிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த ஆஃபரையும் ஆர்சிபி ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக செயல்படக்கூடிய இளம் வீரர் தேவை என்பதில் ஆர்சிபி நிர்வாகம் தெளிவாக இருப்பதாக தெரிகிறது. அந்த வகையில், கார்த்திக் சர்மா தங்களது தேவைக்கு பொருத்தமான வீரர் இல்லை என ஆர்சிபி தரப்பு தெரிவித்ததாக தகவல் கூறுகிறது.
கார்த்திக் சர்மாவை பொறுத்தவரை, சிஎஸ்கே நிர்வாகம் அவரை எதிர்கால பினிஷிங் வீரராக உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. தோனிக்கு பிறகு அணியில் அந்த இடத்தை நிரப்பக்கூடிய வீரர் தேவைப்படுவதால், கார்த்திக் சர்மாவுக்கு பவர் ஹிட்டிங் மற்றும் பினிஷிங் திறனை மேம்படுத்துவதற்கான தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியின் போது கார்த்திக் சர்மா தொடர்ச்சியாக அதிரடி ஷாட்களை விளையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அவரையே டிரேடிங் பேச்சுவார்த்தையின் மூலம் சிஎஸ்கே வேறு அணிக்கு கடத்த முயற்சிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், சேப்பாக்கம் மைதானத்தின் சூழலுக்கு ஏற்றவாறு ஆட்டத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய பேட்டர் தேவை என்பதால், தேவ்தத் படிக்கல்லை அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஐபிஎல் 2027 டிரேடிங்கில் அக்சர் படேலை அணிக்குள் கொண்டுவருவதற்கும் சிஎஸ்கே தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருக்கும் அக்சர் படேல், அணியின் கேப்டன்சி தொடர்பான சூழ்நிலையால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ரிஷப் பந்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்த டெல்லி அணி அவரை கேப்டனாக நியமிக்கும் ஆர்வத்தில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதனை பயன்படுத்தி அக்சர் படேலை வாங்க சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு ஒரு தரமான வீரரை தேடி வரும் சிஎஸ்கே அணி, அக்சர் படேல் அந்த இடத்திற்கு சரியான மாற்றாக இருப்பார் என கருதுவதாக தெரிகிறது. அக்சர் படேலை டிரேடிங் மூலம் வாங்குவதற்காக உர்வில் படேல் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வழங்கவும் சிஎஸ்கே தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டிரேடிங் ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் அக்சர் படேலை குறிவைத்து சிஎஸ்கே நகர்ந்து வரும் நிலையில், மறுபுறம் தேவ்தத் படிக்கல்லை அணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்வது, ஐபிஎல் 2027 டிரேடிங்கில் சிஎஸ்கே தீவிரமாக செயல்பட்டு வருவதை காட்டுகிறது.