IPL 2027: மீண்டும் அணி மாறும் முகமது ஷமி.. LSG போடும் பலே கணக்கு! அதிரடி ஆல்ரவுண்டரை தூக்க திட்டம்!
ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்கள் பரிமாற்றம் நடந்து வரும் நிலையில், தற்போது மற்றொரு முக்கிய டிரேட் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
2027 ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் வீரர்கள் பரிமாற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே டிரேட் பேச்சுவார்த்தை நடத்து ரிஷப் பண்ட் மற்றும் குல்தீப் யாதவ்வை மாற்றிக்கொண்டனர். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் வீரர்களை பரிமாற்றம் செய்துக்கொண்டது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் டீலை முடித்து ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங்கை மாற்றிக்கொண்டது.
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே டிரேட் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை வாங்கிக்கொள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த டிரேடிங் ஒப்பந்தத்தில் ஷமி, சாம் கரன் மட்டுமின்றி மேலும் சில வீரர்களும் இடம்பெற உள்ளதாக கிரிக்பஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதிக்கட்ட ஆவணப் பணிகள் மட்டுமே நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மட்டும் அமையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அடங்கிய டிரேடிங் ஒப்பந்தத்தில் லக்னோ அணியின் சுழற்பந்து வீச்சாளர் எம். சித்தார்த்தும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகமது ஷமி கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து ரூ.10 கோடிக்கு நேரடி டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாறினார். அந்த அணிக்காக விளையாடிய தனது முதல் சீசனில் 13 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும், லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
இந்த டிரேடிங் ஒப்பந்தம் உறுதியானால், ஐபிஎல் தொடரில் ஷமி விளையாடும் ஏழாவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் இருக்கும். மேலும், தொடர்ந்து மூன்றாவது சீசனில் அவர் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடும் சூழல் உருவாகும்.
மறுபுறம், சாம் கரன் கடந்த சீசனுக்கு முன்னதாக நடைபெற்ற முக்கிய டிரேடிங்கில் ராஜஸ்தான் அணிக்கு வந்தார். அந்த ஒப்பந்தத்தின்படி, ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் அணிக்கு வந்தனர்.
ஆனால், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என சாம் கரன் தெரிவித்தார். அதேநேரத்தில், ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய சில வாரங்களிலேயே இங்கிலாந்து அணிக்காக விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், அவரது அர்ப்பணிப்பு குறித்து ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
மேலும், ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து, வீரர்களுக்கான ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.