தமிழகத்தில் இரண்டாம் கட்ட சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், தங்களது விண்ணப்ப விவரங்களை சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சிறப்பு அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, நவம்பர் 20 முதல் 22ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் உள்ள தவறுகளை சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்கலாம். அதேபோல், பணிச்சான்றிதழை பதிவேற்றுவதிலும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊராட்சி ஒன்றியம், அரசு, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்காக இந்த சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. முதல் தாள், இரண்டாம் தாள் என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள இத்தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 19ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும்போது ஆசிரியர்கள் சில விவரங்களில் தவறுகள் செய்வதால், பின்னர் ஹால் டிக்கெட் மற்றும் தகுதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, பெயர் மற்றும் தலைப்பெழுத்தில் உள்ள பிழைகள், பிறந்த தேதி, பாலினம், சாதிச் சான்றிதழ், புகைப்படம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களில் தவறுகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில், விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை மீண்டும் சரிபார்த்து திருத்திக்கொள்ள நவம்பர் 20 முதல் 22ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
குறிப்பிட்ட தேதிகளுக்குள் திருத்தங்களை மேற்கொள்ளாதவர்கள், தேர்வு முடிந்த பிறகு பெயர் அல்லது பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை மாற்றக் கோரினால் அந்தக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு TET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் பணிச்சான்றிதழைப் பதிவேற்றும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தொடக்க கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அக்டோபர் 26, 2026ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்பட்ட புதிய வடிவிலான பணிச்சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
புதிய படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை மாற்றாமல் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய அலுவலர்களிடம் சான்றொப்பம் பெற்று பதிவேற்ற வேண்டும். ஏற்கெனவே கடந்த ஜூலை 2026 தேர்வுக்குப் பயன்படுத்தப்பட்ட பழைய பணிச்சான்றிதழைப் பதிவேற்றுவது அல்லது புதிய படிவத்தில் உள்ள விவரங்களை மாற்றி சமர்ப்பிப்பது ஆகியவை அனுமதிக்கப்படாது.
இந்த விதிமுறைகளை மீறி பழைய படிவத்தையோ, திருத்தப்பட்ட புதிய படிவத்தையோ பதிவேற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பணிச்சான்றிதழ் தொடர்பான விதிமுறைகள் மற்றும் விண்ணப்பத் திருத்தத்திற்கான கால அவகாசம் குறித்து அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த அறிவிப்பை மாவட்டக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் ஒட்டிவைக்கவும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.