ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுள்ள மெகா டிரேடிங் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த பரிமாற்றத்தை தொடர்ந்து பிசிசிஐ-யின் ஐபிஎல் டிரேடிங் விதிமுறைகள் என்னென்ன? ஒரு வீரர் சம்மதம் இல்லாமல் அவரை வேறு அணிக்கு மாற்ற முடியுமா? மேலும், நடக்கும் பரிமாற்றத்தின் மூலம் வீரர்களுக்கும் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பது குறீத்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
ஆம், நிச்சயமாக டிரேடிங் முடிவை வீரர்களால் நிராகரிக்க முடியும். பிசிசிஐயின் விதிமுறைகளின்படி, ஒரு டிரேடிங் முழுமையடைய சம்பந்தப்பட்ட வீரரின் எழுத்துப்பூர்வ சம்மதம் கட்டாயம் ஆகும்.
ஒரு வீரரை வாங்க விரும்பும் அணி, முதலில் பிசிசிஐயிடம் விருப்ப கடிதத்தை சமர்பிக்க வேண்டும். இதையடுத்து, அந்த வீரரை விடுவிக்க சம்மதமா என்பதை தெரிவிக்க, தற்போதைய அணிக்கு 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். அணி நிர்வாகம் சம்மதித்த பிறகு, சம்பந்தப்பட்ட வீரரிடம் அணுகி பிசிசிஐயின் சம்மதப் படிவத்தில் கையெழுத்து பெற வேண்டும். ஒருவேளை, அந்த வீரர் சம்மதிக்கவில்லை என்றால், அணிகள் நினைத்தாலும் அந்த பரிமாற்றத்தை செய்ய முடியாது.
டிரேடிங் முறையில் ஒரு வீரரின் ஆண்டு ஊதியம் உயர்த்தப்பட்டால், அதில் அந்த வீரருக்கு குறிப்பிட்ட பங்கு கிடைக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதாவது ஒரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உயர்த்தும் கூடுதல் தொகையில் வீரருக்கு எத்தனை சதவீதம் வழங்கப்படும் என்பது பிசிசிஐ சம்மதப் படிவத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். புதிய அணியுடன் இணையும்போது தனது பழைய ஊதியத்துடன் இந்த கூடுதல் பங்கு தொகையையும் சேர்த்து புதிய ஓப்பந்தத்தில் வீரர் கையெழுத்திடுவார்.
உதாரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவின் ஆண்டு ஊதியம் ரூ. 16.35 கோடியாக இருந்தது. தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியதன் மூலம் அவரது ஊதியம் ரூ. 18 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 1.65 கோடி கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளின்படி இந்த கூடுதல் தொகையில் ஹர்திக்கிற்குரிய பங்கு வழங்கப்படும்.
ஐபிஎல் விதிகளின்படி, ஒரு வீரரை டிரேடிங் மூலம் வாங்கும் அணிதான், அந்த வீரர் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதியுடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் பட்சத்தில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அந்த வீரருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் வாங்கும் அணிக்கு முழு உரிமை உண்டு.
காயத்திலிருந்து மீண்டு வருபவர்கள் அல்லது நீண்ட காலமாகப் போட்டிகளில் விளையாடாத வீரர்களின் விஷயத்தில் இந்த விதி மிகவும் முக்கியமானது. ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு சுமார் 5 மாதங்களுக்கும் மேலாக பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் ஓய்விலும் பயிற்சியிலும் இருந்து வருகிறார். எனவே, அடுத்த சீசனுக்கு முன்பாக அவரது உடற்தகுதியை பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ந்து கண்காணிக்கும். இருப்பினும், எல்லா டிரேடிங்கிற்கும் மருத்துவப் பரிசோதனை கட்டாயமில்லை; அது வாங்கும் அணியின் விருப்பத்தைப் பொறுத்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் டிரேடிங்கில் இடம்பெறுவது இது இரண்டாவது முறையாகும். 2015ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமான ஹர்திக், 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
இதையடுத்து 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று, அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். 2023ல் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். பின்னர், 2024 சீசனுக்கு முன்பாக குஜராத் அணியிலிருந்து 'ஆல்-கேஷ்' டிரேடிங் மூலம் மும்பை அணிக்கு திரும்பி கேப்டனானார். தற்போது மூன்று சீசன்களுக்கு பிறகு, அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியாவின் வெளியேற்றம் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவரது இரண்டாவது இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், "ஒரு இளம் வீரராக மும்பை அணியில் இணைந்து, சர்வதேச அளவில் சிறந்த ஆல்-ரவுண்டராக ஹர்திக் வளர்ந்ததை நாங்கள் பார்த்துள்ளோம். பின்னர் கேப்டனாகவும் அவரை வரவேற்றோம். அணியின் வெற்றிக்காக அவர் அளித்த பங்களிப்பு மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு நன்றி. பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான அவரது புதிய பயணம் சிறக்க வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா வெளியேறியுள்ள நிலையில், ஐபிஎல் 2027 தொடருக்கான புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. மறுபுறம், ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவம் கொண்ட ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை பஞ்சாப் கிங்ஸ் அணி தன்வசப்படுத்தியுள்ளது.