SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

IPL Latest News: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் பொறுப்பு கிடைக்காத அதிருப்தியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியேற விரும்புவதாகவும், அவரை வாங்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written By R Balaji
Published: Oct 11, 2026, 02:56 PM IST | Updated: Oct 11, 2026, 03:00 PM IST
Join

ஐபிஎல் அணிகளில் கேப்டன்சி மற்றும் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுகள் இப்போதே சூடுபிடிக்க தொடங்க உள்ளன. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலக் வர்மா உள்ளிட்ட இளம் வீரர்கள் கேப்டன் பொறுப்பை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2027 ஐபிஎல் சீசனில் ரியான் பராக்கிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2028 சீசனுக்கான மெகா ஏலத்துக்கு பிறகு அணியின் நீண்ட கால கேப்டனை தேர்வு செய்யவும் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், கேப்டன் பதவி கிடைக்காத அதிருப்தியில் ஜெய்ஸ்வால் அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

கேப்டன் பதவி கேட்ட ஜெய்ஸ்வால்? நிர்வாகம் மறுத்ததாக தகவல்

ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திடம் கேப்டன் பொறுப்பு குறித்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசியதாகவும், அவரது கோரிக்கையை நிர்வாகம் ஏற்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து வேறு அணிக்கு மாறுவதற்கான டிரேடிங் வாய்ப்பை அவர் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜெய்ஸ்வால் கேப்டன் பதவி கேட்டது அல்லது அணியிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்தது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகிவில்லை.

ஜெய்ஸ்வாலுக்கு கேப்டன் பொறுப்பு வழங்காதது ஏன்?

ஜெய்ஸ்வாலுக்கு போதிய கேப்டன்சி அனுபவம் இல்லை என்பதுடன், களத்தில் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அவரிடம் அணி தலைமையை ஒப்படைக்க ராஜஸ்தான் நிர்வாகம் தயங்குவதாக கூறப்படுகிறது.

ஜெய்ஸ்வாலை வாங்க மும்பை இந்தியன்ஸ் ஆர்வமா?

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை அணியில் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோகித் சர்மாவுக்கு பிறகு அணியின் தொடக்க வரிசையில் வலுவான இந்திய வீரரை தேர்வு செய்வது மும்பை அணிக்கு முக்கியமானதாக இருக்கலாம்.

முன்னதாக, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து அபிஷேக் சர்மாவை வாங்க மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், திலக் வர்மாவை பரிமாற்றத்தில் வழங்குவது தொடர்பான பேச்சுகளும் சிக்கலாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜெய்ஸ்வாலை பெறுவதற்காக சூர்யகுமார் யாதவை விடுவிப்பது உள்ளிட்ட மாற்று வாய்ப்புகளை மும்பை இந்தியன்ஸ் பரிசீலிக்கலாம் என்று கூறப்படுகிறது. தீபக் சஹார் அல்லது ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவரையும் பரிமாற்றத்தில் சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இத்தகைய வீரர் பரிமாற்றங்கள் குறித்து இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஜெய்ஸ்வாலை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸும் போட்டி?

தரமான தொடக்க வீரரை தேடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஜெய்ஸ்வாலை வாங்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளும் அவரை இலக்காக கொள்ளுமா என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தே அமையும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை, ஜெய்ஸ்வால் போன்ற இந்திய தொடக்க வீரரை விடுவிப்பது எளிதான முடிவாக இருக்காது. அவருக்கு பதிலாக திலக் வர்மா போன்ற வீரரை பெறுவதில் நிர்வாகம் ஆர்வம் காட்டலாம். ஜெய்ஸ்வால் அணியிலிருந்து வெளியேறுவதில் உறுதியாக இருந்தால் மட்டுமே மாற்று வீரர்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடையலாம்.

2028 மெகா ஏலத்துக்கு முன் ராஜஸ்தான் அணியில் பெரிய மாற்றமா?

ஐபிஎல் 2028 மெகா ஏலத்துக்கு முன்னதாக அணியின் வீரர் பட்டியலில் பெரிய மாற்றங்களை செய்ய ராஜஸ்தான் ராயல்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏலத்தில் புதிய வீரர்களை தேர்வு செய்து அணியை மறுசீரமைப்பது நிர்வாகத்தின் நோக்கமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஜெய்ஸ்வால் அணியை விட்டு வெளியேறுவது, மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவது, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்படுவது உள்ளிட்ட தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஐபிஎல் 2027 வீரர்கள் பரிமாற்றம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்போதுதான் இந்த விவகாரத்தில் தெளிவு கிடைக்கும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES