குல்தீப் யாதவ் இலங்கைக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அறிமுக வீரர் சரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குல்தீப் யாதவ்வை நீக்கயதன் காரணம் என்ன? அவரை நிர்வாகம் ஓரங்கட்டுகிறதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் தொடங்கிய நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்பட்ட ஒரு மாற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் டெஸ்டில் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக 33 வயதான சரன்ஷ் ஜெயினுக்கு டெஸ்ட் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் அணியில் இருந்து நீக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், உண்மையான காரணம் அணித் தேர்வு அல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது. குல்தீப் முழுமையாக குணமடையாத காரணமாக 2வது டெஸ்டுக்கான பிளேயிங் லெவனில் இடம்பெற முடியவில்லை. இதனால், குல்தீப் இல்லாத நிலையில் இந்திய அணி ஏன் சரன்ஷ் ஜெயினை தேர்வு செய்தது என்பதும் முக்கிய விவாதமாகியுள்ளது.
முதல் டெஸ்டில் குல்தீப்பின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், அவரது இடம் குறித்து கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால், கொழும்பு டெஸ்டில் அவர் இடம்பெறாததற்கு இது மட்டுமே முழுமையான காரணம் கிடையாது. குல்தீப் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. இதன் காரணமாகவே அவர் 2வது டெஸ்டுக்கான பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பிசிசிஐயும் குல்தீப் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்தப் போட்டிக்கான தேர்வில் அவர் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், இந்திய அணியின் ஸ்பினை பலப்படுத்த சரன்ஷ் ஜெயினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 33 வயதில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் அவர், உள்ளூர் முதல் தர போட்டிகளில் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடக்கூடியவராக சரன்ஷ் பார்க்கப்படுகிறார். இதனால் குல்தீப்பின் இடத்தை நிரப்புவதுடன், அணியின் பேட்டிங் பலத்தையும் அதிகரிக்கும் வகையில் அவரது தேர்வு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சரன்ஷ் ஜெயினுக்கு இந்த வாய்ப்பு திடீரென கிடைத்த ஒன்றல்ல. உள்ளூர் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி வரும் அவர், தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். குறிப்பாக, முதல் தர கிரிக்கெட்டில் அவரது செயல்பாடு இந்திய அணியின் தேர்வாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது. 33 வயதில் டெஸ்ட்டில் அவர் அறிமுகமாகியது அவரது நீண்ட கால கடின உழைப்பு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது. குல்தீப் இல்லாத சூழலில் கிடைத்த இந்த வாய்ப்பை அவர் இப்போட்டியில் அவர் எவ்வாறு பயன்படுத்தபோகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சரன்ஷ் ஜெயின், இந்தூர் நகரில் பிறந்தவர். இடது கை பேட்டரும் வலது கை ஆஃப் ஸ்பின்னருமான அவர், மத்தியப் பிரதேச அணிக்காக 2014-15 சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். தற்போது வரை 42 முதல் தர போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடக்கூடிய சரன்ஷ் ஒரு ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். சமீபத்திய உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக 2025-26 துலீப் டிராபியில் 4 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் அதிக விக்கெட் எடுத்தவராக இருந்தது, இந்திய அணியின் கவனத்தை ஈர்க்க முக்கிய காரணமாக அமைந்தது.
குல்தீப் யாதவ் 2வது டெஸ்டில் இடம்பெறாததற்கு அவரது உடல்நிலைதான் முக்கிய காரணமாக இருப்பதால், அவர் முழுமையாக குணமடைந்த பிறகே மீண்டும் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வைரல் காய்ச்சலில் இருந்து மீண்டாலும், டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் பந்துவீசுவதற்கு தேவையான முழு உடற்தகுதியை அவர் பெற வேண்டியுள்ளது. இதனால், அவசரப்பட்டு குல்தீப்பை களமிறக்காமல் அவருக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவரது உடல்நிலை மற்றும் உடற்தகுதி குறித்து மருத்துவக் குழு அளிக்கும் தகவலின் அடிப்படையிலேயே அடுத்த போட்டிகளில் அவரை தேர்வு செய்வது குறித்து முடிவு செய்யப்படும். எனவே, 2வது டெஸ்டில் குல்தீப் இல்லாததை நிரந்தரமாக அணியில் இருந்து நீக்கியதாக பார்க்க வேண்டியதில்லை.
இலங்கை தொடருக்கு பிறகு இந்திய அணிக்கு அடுத்தடுத்து முக்கியமான சர்வதேச தொடர்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, செப்டம்பர் இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதைத்தொடர்ந்து நவம்பர் மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளும், அதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது.
இதனால், குல்தீப் யாதவ் 2வது டெஸ்டில் இடம்பெறாதது அவரது இடத்தை இழந்துவிட்டார் என்பதற்கான அர்த்தம் அல்ல. உடல்நிலை காரணமாக அவர் ஓய்வில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை சரன்ஷ் ஜெயின் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இருப்பினும் குல்தீப் யாதவ் சமீப காலமாக மந்தமாக விளையாடுகிறார். விக்கெட்களை முன்பை போல வீழ்த்துவதில்லை என்ற விமர்சனம் உள்ளது. அதனால் அவர் ஒரு தரமான கம்பேக்கை கொடுத்து மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேநேரத்தில், அறிமுக போட்டியில் சரன்ஷ் ஜெயின் சிறப்பாக செயல்பட்டால், அணியின் சுழற்பந்து வீச்சு தேர்வில் புதிய போட்டியும் உருவாகலாம்.