SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

முகமது சிராஜுக்கு கல்தா? கௌதம் கம்பீரின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

முகமது சிராஜுக்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கொடுப்பதை குறைக்கலாம் என்ற முடிவுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written By R Balaji
Published: Oct 02, 2026, 02:26 PM IST | Updated: Oct 02, 2026, 02:30 PM IST
Join

கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் முகமது ஷமிக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போது முகமது சிராஜின் இடமும் கேள்விக்குறியாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை. மூன்றாவது போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ஜஸ்பரீத் பும்ரா முதன்மைத் தேர்வாக இருந்து வருகிறார். அவருக்கு அடுத்தபடியாக முகமது ஷமி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் பல்வேறு தொடர்களில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். குறிப்பாக, வெளிநாட்டு மைதானங்களில் சிராஜ் சிறப்பான பங்களிப்பை வழங்கியதால், இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

ஆனால், தற்போது அணித் தேர்வில் அவருக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அவர் இடம்பெறாதது இதற்கான உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதும் கவனத்தை பெற்றுள்ளது.

சிராஜின் பந்துவீச்சில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

சிராஜின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுவாக மணிக்கு 140 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட சிராஜ், இந்த தொடரில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பந்துவீசியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது பந்துவீச்சில் எதிரணிக்கு ஏற்பட்ட நெருக்கடி குறைந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த தொடரின் முதல் டெஸ்டில் 18 ஓவர்கள் வீசிய அவர், 2 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்டில் 26 ஓவர்கள் பந்துவீசி மேலும் 2 விக்கெட்களை எடுத்தார். விக்கெட்களின் எண்ணிக்கையை தாண்டி, அவரது பந்துவீச்சின் வேகம் மற்றும் தாக்கம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. குறிப்பாக இரண்டாவது டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில் புதிய பந்து எடுக்கப்பட்ட பிறகும், அதனை பயன்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்க தவறியதாக விமர்சிக்கப்படுகிறது. ஸ்டம்ப் லைனுக்கு வெளியே தொடர்ந்து பந்துவீசியதும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதும் எதிரணிக்கு சாதகமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், சிராஜின் பந்துவீச்சு குறித்த இந்த விமர்சனங்களே அணித் தேர்வில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ காரணம் என்று உறுதிப்படுத்தும் தகவல் இல்லை.

அடுத்தகட்ட திட்டத்தில் அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா?

சிராஜுக்கு வாய்ப்புகள் குறையும் பட்சத்தில், அவருக்கு பதிலாக மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பும்ராவுக்கு அடுத்தபடியாக அர்ஷ்தீப் சிங்கை பயன்படுத்துவது குறித்தும், டெஸ்ட் போட்டிகளில் பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படாத வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

சிராஜுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய அணியில் நிரந்தர இடத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ஒவ்வொரு தொடரிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அதே நேரத்தில், ஒரு தொடரின் செயல்பாட்டை மட்டும் அடிப்படையாக கொண்டு ஒரு வீரரின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது.

சிராஜை பொறுத்தவரை, அவரது பந்துவீச்சின் வேகம், துல்லியம் மற்றும் விக்கெட் வீழ்த்தும் திறன் ஆகியவை அடுத்தடுத்த வாய்ப்புகளில் முக்கியத்துவம் பெறலாம். அணித் தேவாளர்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கிறார்களா, அவர் தனது பழைய ஆட்டத்திறனை மீட்டெடுக்கிறாரா என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES