மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் பிரச்னை இல்லை...? தீர்வுகள் இதோ Explained
ஐபிஎல் 2027 தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படியிருக்க, ஹர்திக் பாண்டியாவை கேப்டன்ஸியில் இருந்து நீக்குவதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா?, 6வது கோப்பையை வாங்க மும்பை என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கு அலசலாம்.
IPL 2027, Mumbai Indians: ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, 2020ஆம் ஆண்டில்தான் கடைசியாக கோப்பையை வென்றது. கடந்த ஆறு சீசன்களாக கடுமையாக சொதப்பி வருகிறது. எந்தச் சூழலிலும் வெற்றிபெறும் அணியாகப் பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ், தற்போது தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது.
2023, 2025 ஆகிய சீசன்களில் பிளே ஆப் வந்த மும்பை இந்தியன்ஸ் மற்ற 4 சீசன்களிலும் பெரும் தோல்விகளை சந்தித்தது. அதுவும் 2022இல் 10வது இடம், 2024இல் 10வது இடம், 2026இல் 9வது இடம் என அதளபாதாளத்தில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ். இந்தச் சூழலில், 2024 சீசனில் கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் கேப்டன்ஸி தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் பொல்லார்ட்... JSK அணிக்கு ஆப்பு...?
மீண்டும் MI கேப்டனாகும் ரோஹித் சர்மா?
அதாவது, 2027 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவே மாற்றம் கண்டிருக்கும் சூழலில், கேப்டன் பொறுப்பு மீண்டும் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும், அதை ரோஹித் சர்மா ஏற்றுக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும் The Indian Express நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படலாம் என்றும் ஒருவேளை டிரேட் செய்யப்படாவிட்டாலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸியில் விளையாடுவதில் அவருக்கு பிரச்னை இல்லை என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்திருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்க, மும்பை இந்தியன்ஸ் கடந்த 6 சீசன்களாக கோப்பையை வெல்லாமல் இருந்ததற்கு கேப்டன்ஸி மட்டும்தான் காரணமா...? ரோஹித் சர்மா கேப்டன்ஸி பொறுப்பை ஏற்பது ஆறுதல் என்றாலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் சொதப்பலுக்கான பின்னணியை அலசி ஆராய்வதும் முக்கியம்.
ஹர்திக் பாண்டியா தான் வில்லனா?
2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேட் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் அணிக்குள் வந்ததும் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி, பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் மும்பை அணிக்கு விடிவுக்காலம் பிறக்கவில்லை.
மாறாக ரோஹித் சர்மாவை நீக்கியதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி குரல் எழும்பியது. வான்கடே மைதானத்திலேயே பாண்டியாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுந்த சம்பவங்களும் நிகழ்ந்தன. அந்த நிலை மாறினாலும் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒற்றுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ஹர்திக் பாண்டியாவை தாண்டியும் சிக்கல்கள் இருக்கின்றன.
நட்சத்திர வீரர்களின் தடுமாற்றம்
ரோஹித் சர்மா 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவரால் ஓபனிங்கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது என்றாலும் அதை தொடர்ச்சியாக செய்வதில் அவருக்கு பிரச்னை உள்ளது. அவர் மட்டுமின்றி சூர்யகுமார் யாதவும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய விக்கெட் கீப்பிங் ஆப்ஷன் இல்லாததால், டாப் ஆர்டரில் வெளிநாட்டு விக்கெட் கீப்பரை விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது. மும்பை எதிர்பார்த்ததை டி காக்/ரிக்கில்டன் செய்ய தவறவிட்டனர். திலக் வர்மா, நமன் திர் மட்டுமே பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர்.
மேலும் படிக்க | OG வீரர்களை களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்... பொல்லார்ட் படை ரெடி - முழு லிஸ்ட் இதோ
வெளிநாட்டு வீரர்களின் காம்பினேஷன் சிக்கல்
ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், கார்பின் பாஷ், டிரென்ட் போல்ட், அல்லா கசன்பர் என நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும் மிடில் ஆர்டரில் இவர்களில் யாரை விளையாட வைப்பது என்ற சிக்கல் அதிகம் இருக்கிறது.
ரூதர்போர்ட் - வில் ஜாக்ஸ் இருவரையும் பிளேயிங் லெவனில் விளையாட வைக்க மும்பை அணிக்கு நல்ல இந்திய ஸ்பின்னர் தேவை. இல்லையெனில் இந்திய விக்கெட் கீப்பர் தேவை உள்ளது. மும்பை அணிக்கு சான்ட்னர் பெரியளவில் கைக்கொடுப்பார் என்பதால் ரூதர்போர்ட் - ஜாக்ஸ் - சான்ட்னரை கூட விளையாட வைக்கலாம். ஆனால் டாப் ஆர்ட் முழுவதும் இந்திய வீரர்கள் நிரம்பியிருக்க வேண்டும்.
பும்ராவை மட்டும் நம்பியிருக்கும் பந்துவீச்சு படை
பும்ராவை தவிர்த்து வேறு வேகப்பந்துவீச்சாளர்கள் பெரியளவுக்கு கைக்கொடுக்கவில்லை. தீபக் சஹாரையும், ஷர்துல் தாக்கூரையும் ஒரே பிளேயிங் லெவனில் விளையாடி மும்பை அணி கடும் சிரமத்திற்கு ஆளானது. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக போல்டும் கைக்கொடுக்கவில்லை. வான்கடேவில் ஸ்விங் பந்துவீச்சு அதிமுக்கியமானது என்றபோது, வேகப்பந்துவீச்சின் தொடர் சொதப்பலும் மும்பைக்கு பெரிய பிரச்னைதான்.
சுழற்பந்துவீச்சுக்கு விடை இல்லை
இப்போது நமன் திர் நல்ல ஆப்ஷனாக வந்துள்ளார். வில் ஜாக்ஸ் பவர்பிளேவில் பந்துவீசக் கூடியவர் சான்ட்னர் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். இருப்பினும் தரமான இந்திய ஸ்பின்னர் இல்லாததும் மும்பைக்கு பிரச்னைதான். இதனால் மிடில் ஓவர்களில் அதிகம் ரன்களை கசியவிடுகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் நடந்த மாற்றம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு மொத்தமாக மாறியிருக்கிறது. கைரன் பொல்லார்ட் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து பயிற்சியாளர்கள் குழுவிலும் புதியவர்களுக்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| தலைமை பயிற்சியாளர் | கைரன் பொல்லார்ட் |
| பேட்டிங் பயிற்சியாளர் | ராபின் உத்தப்பா |
| பந்துவீச்சு பயிற்சியாளர் | மிட்செல் மெக்லெனகன் |
| பீல்டிங் பயிற்சியாளர் | டி திலீப் |
| மேம்பாட்டு பந்துவீச்சு பயிற்சியாளர் | தவால் குல்கர்னி |
தீர்வுகள் என்ன?
இந்த மாற்றம் பயிற்சியாளர் குழுவில் மட்டுமின்றி, அணியிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2027 மினி ஏலத்தை முன்னிட்டு பல முக்கிய வீரர்கள் விடுவிக்கப்படலாம். கேப்டன்ஷிப் மாறலாம். ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படலாம்.
ஆனால், கண்ணாடியை திருப்பிவிட்டால், ஆட்டோ ஓடும் என்ற கதையை நம்பாமல், கேப்டன்ஸியை மாற்றி, ஹர்திக்கை டிரேட் செய்தாலும் கூட அணியில் நிலவும் பலவீனங்களை போக்க திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்.
- தரமான இந்திய ஸ்பின்னரைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பும்ராவுக்கு இணையாக மற்றொரு நம்பகமான வேகப்பந்துவீச்சாளரை உருவாக்குவது
- டாப் ஆர்டர் பேட்டிங்கில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவது.
- வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்வதில் சரியான கம்பினேஷனை தேர்வு செய்வது
- வீரர்களிடையே ஒருங்கிணைப்பையும் தெளிவான தலைமைத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
இவை அனைத்தையும் செய்தால் மட்டுமே அந்த 6வது கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி ருசி பார்க்க முடியும்.
மேலும் படிக்க | பொல்லார்ட் திடீர் விலகல்? ஹெட்மையரை தட்டித் தூக்கிய MI கேப்டவுன்.. முழு விவரம்!