இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. BCCI அறிவிப்பு!
அஜித் அகர்கரின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக பிரக்யான் ஓஜாவை பிசிசிஐ நியமித்துள்ளது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இதன்மூலம், அஜித் அகர்கருக்கு பிறகு அந்த பொறுப்பை ஓஜா ஏற்கிறார். இதற்கு முன்பு இடைக்கால தலைவராக செயல்பட்டு வந்த அவர், தற்போது முழுநேரப் பொறுப்பை பெற்றுள்ளார். இதேபோல், முன்னாள் இந்திய வீரர் ரமேஷ் பவாரும் தேர்வுக் குழுவில் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் தேர்வுக் குழுவுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியை அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பராஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு மேற்கொண்டது. டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய எண்ணிக்கையின் அடிப்படையில் மூத்த வீரராக கருதப்படும் பிரக்யான் ஓஜா, குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழுவில் ரமேஷ் பவார்
இந்திய அணிக்காக 2004 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் ரமேஷ் பவார். இந்த பதவிக்கான போட்டியில் வாசிம் ஜாபர், சலீல் அங்கோலா, ஜேக்கப் மார்ட்டின், கானர் வில்லியம்ஸ் உள்ளிட்ட முன்னாள் வீரர்களையும் அவர் முந்தியுள்ளார்.
இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இரண்டு முறை பணியாற்றிய பவார், அவரது பயிற்சி காலத்தில் ஆசிய கோப்பையை வெல்ல அணிக்கு வழிகாட்டினார். மேலும், 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றபோதும் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்தார்.
பின்னர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி, தற்போது பிசிசிஐ சிறப்பு மையம் என அழைக்கப்படும் அமைப்பில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். மும்பை அணிக்கு விஜய் ஹசாரே கோப்பையை வெல்லவும் அவர் பயிற்சியளித்துள்ளார். கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பவார், அண்மையில் அந்த பொறுப்பிலிருந்து விலகினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா U-19 அணிகளுக்கு இடையிலான சமீபத்திய ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் ஆலோசனை பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
அஜித் அகர்கருக்கு பிசிசிஐ பாராட்டு
அஜித் அகர்கர் தலைமை தேர்வாளர் பொறுப்பிலிருந்து விலகியதை தொடர்ந்து தேர்வுக் குழுவில் காலியிடம் ஏற்பட்டது. 2023 ஜூலை மாதம் இந்த பொறுப்பை ஏற்ற அகர்கரின் பணிக்காலத்தில், இந்திய அணி மூன்று ஐசிசி கோப்பைகள், இரண்டு ஆசிய கோப்பைகள் மற்றும் தொடர்ந்து இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அகர்கரின் அர்ப்பணிப்பு, உறுதியான செயல்பாடு மற்றும் பங்களிப்புக்கு நன்றி தெரிவிப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஆடவர் தேர்வுக் குழு உறுப்பினர்கள்
- பிரக்யான் ஓஜா – தலைவர்.
- ஷிவ் சுந்தர் தாஸ்.
- ஆர்.பி. சிங்.
- அஜய் ரத்ரா.
- ரமேஷ் பவார்.