வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்
India vs West Indies T20I: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் 2-2 என சமனில் முடிந்தது, கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படாதது குறித்து இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்த கருத்தை இங்கு காணலாம்.
India vs West Indies T20I: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையிலான டி20ஐ தொடர் நேற்றுடன் (அக். 17) நிறைவடைந்தது. ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி, டி20ஐ தொடரை எளிமையாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
2-2 என்ற கணக்கில் தொடரை சமன்படுத்தி கடைசி மற்றும் 5வது போட்டியின் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. ஆனால், பெங்களூருவில் தொடர்ச்சியான மழை காரணமாக போட்டி முழுமையாக நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது.
மேலும் படிக்க | இந்திய அணியில் கம்பேக்.. புவனேஷ்வர் குமார் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு
தள்ளிப்போன புவியின் என்ட்ரி
அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். சுமார் 1,446 நாட்களுக்கு பிறகு புவனேஷ்வர் குமார் டி20ஐ போட்டியில் விளையாடுவதை பார்க்க ஆசையாக காத்திருந்த ரசிகர்களுக்கும், மைதானத்திற்கு வந்த பார்வையாளர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
9 ஓவர்களாக குறைப்பு
போட்டி நடைபெற இருந்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடர் மழை காரணமாகவும், மைதானத்தில் நீர் தேங்கியிருந்ததன் காரணமாகவும் டாஸ் வீச தாமதமானது. வழக்கமாக மாலை 6.30 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.
இந்திய அணி அதிரடி பேட்டிங்
ஆனால், நேற்று இரவு 9 மணிக்குதான் டாஸ் வீசப்பட்டது. 9.15 மணிக்கு போட்டி தொடங்கியது. ஆட்டம் தலா 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பவர்பிளே 2.4 ஓவர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இந்திய அணி 7.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களை குவித்தது.
இஷான் கிஷன் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 30 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 14 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 22 ரன்கள், நமன் திர் 6 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர் என 24 ரன்களை குவித்தனர். கீமோ பால், ஷாமர் ஸ்பிரிங்கர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
மேலும் படிக்க | IND vs NZ ODI: இந்த 5 வீரர்களை எடுக்காதது ஏன்? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி!
பகிர்ந்தளிக்கப்பட்ட கோப்பை
அப்போது மழை மீண்டும் குறுக்கிட்டதால், ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், 5வது ஆட்டத்திற்கு முடிவில்லை. எனவே, 2-2 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டு, கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
வைபவ் குறித்து ஷ்ரேயாஸ்
இந்நிலையில், இத்தொடரில் ஒரு போட்டியில் கூட வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடியதன் காரணமாக ஓபனரான அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
வைபவ் சூர்யவன்ஷி குறித்த கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "உனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் அவனிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். உன் செயல்பாடுகளில் நீ சீராக இருக்கும்பட்சத்தில், சில நேரங்களில் நீ காத்திருக்க வேண்டியிருக்கும். தற்போது இரண்டு அற்புதமான தொடக்க ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்; இதைத்தான் நாங்கள் வைபவ் உடன் பேசி வருகிறோம்" என்றார்.
அடுத்து இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 5 டி20ஐ, 5 ஓடிஐ, 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - நியூசிலாந்து மோதல். இதில் டி20ஐ தொடர் வரும் அக்.22ஆம் தேதி (வியாழன்) தொடங்குகிறது.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு அக்சர் படேல்.. MI - DC இடையே டிரேட் டீல்? முழு விவரம்