SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரோகித்தின் அதிரடி சதம்.. இப்போது வருத்தப்படும் அகர்கர்! போட்டு உடைத்த சடகோபன் ரமேஷ்!

ரோகித் சர்மாவின் அடுத்தடுத்த சதங்களால் அவரது இடம் குறித்த பழைய முடிவை நினைத்து அஜித் அகர்கர் தற்போது வருத்தப்படக்கூடும் என முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Oct 02, 2026, 08:40 PM IST | Updated: Oct 02, 2026, 08:44 PM IST
Join

இந்தியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், ரோகித் சர்மா தொடர்பாக அஜித் அகர்கர் முன்பு எடுத்ததாக கூறப்படும் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய போட்டிகளில் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், தனது முந்தைய நிலைப்பாட்டை அகர்கர் தற்போது வருத்தத்துடன் பார்க்கக்கூடும் என ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ரோகித் சர்மா தொடர்ந்து அணியில் இடம்பெறுவது குறித்து அகர்கர் அதிருப்தியில் இருந்ததாகவும், அந்த தொடர் ரோகித்த்தின் கடைசி தொடராக இருக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகின. எனினும், இந்த தகவல்களை பிசிசிஐ மறுத்தது. தேர்வுக்குழுவின் திட்டங்களில் ரோகித் தொடர்ந்து இடம்பெறும் வரை, அவர் அணிக்கான பரிசீலனையில் இருப்பார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்து சதம் விளாசும் ரோகித்

இந்த விவாதங்களுக்கு மத்தியில் ரோகித் சர்மா தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் அபாரமாக விளையாடிய அவர், 138 ரன்கள் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் ரோகித் சதம் அடித்தார். இதன் மூலம் தனது ஃபார்ம் குறித்த விமர்சனங்களுக்கு களத்தில் பதில் அளித்து வருகிறார்.

அகர்கர் வருத்தப்படலாம் - சடகோபன் ரமேஷ்

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய சடகோபன் ரமேஷ், ரோகித் சர்மாவின் சமீபத்திய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி, அஜித் அகர்கர் தற்போது தனது முந்தைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்திருக்கலாம் எனக் கூறினார். 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரோகித் இடம்பெறக் கூடாது என்பதில் அகர்கர் உறுதியாக இருந்ததாக செய்திகள் வெளியானதாகவும், அதன் காரணமாகவே அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

மேலும், வயது என்பது வெறும் எண்ணிக்கை என்பதை ரோகித் தொடர்ந்து நிரூபித்து வருவதாகவும் அவர் கூறினார். 50 ஓவர்கள் களத்தில் நின்று பீல்டிங் செய்த பிறகும் நீண்ட நேரம் பேட்டிங் செய்து சதம் அடித்திருப்பது, அவரது உடற்தகுதியை வெளிப்படுத்துவதாக ரமேஷ் தெரிவித்தார்.

ரோகித் - கோலி இடையே ஆரோக்கியமான போட்டி

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு சீனியர் வீரர்களின் செயல்பாடுகளையும் சடகோபன் ரமேஷ் குறிப்பிட்டார்.

இருவருக்கும் இடையே ஒரு வகையான ஆரோக்கியமான போட்டி இருப்பதாக அவர் கூறினார். ரோகித் சதம் அடித்தால் அடுத்த போட்டியில் விராட் கோலியும் சதம் அடிப்பது போன்ற நிலை தொடர்ந்து வருவதாக ரமேஷ் சுட்டிக்காட்டினார். மேலும், இருவரும் தங்களது எதிர்காலம் குறித்த பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருவதாகவும், ரோகித் சர்மா சமீபத்திய போட்டிகளில் மிகுந்த ஆக்ரோஷத்துடன் விளையாடி வருவது தெளிவாக தெரிகிறது என்றும் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES