கடந்த 2025 மே மாதம் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பு சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, அதே ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஒருநாள் அணிக்கும் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியை கில் வழிநடத்தி உள்ளார். பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கில்லால், கேப்டனாக அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.
டெஸ்ட் கேப்டனாக கில் தலைமையில் இந்திய அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ள நிலையில், 3 போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் வெற்றிகளும் அடங்கும். ஒருநாள் கிரிக்கெட்டிலும் கில்லின் கேப்டன்சி எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. அவரது தலைமையில் விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 8 வெற்றிகளையும், 7 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இதனால், இரண்டு முக்கியமான பார்மெட்டுகளிலும் கில்லின் கேப்டன்சி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் மாற்றத்தை கொண்டு வர இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் கம்பீரின் தற்போதைய பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மோசமாக அமைந்தால், அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைப்பது கேள்விக்குறியாகலாம். எனவே, உலகக் கோப்பைக்கு முன்பாக அணியை சரியான முறையில் தயார்படுத்த வேண்டிய அழுத்தம் கம்பீருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஒருநாள் போட்டிகளில் கில்லின் கேப்டன்சி எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாதது குறித்து கம்பீர் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒருநாள் அணிக்கு மட்டும் புதிய கேப்டனை நியமிப்பது குறித்து பிசிசிஐ நிர்வாகத்திடம் அவர் ஆலோசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டி20 அணியை வழிநடத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்க கம்பீர் விரும்புவதாக கூறப்படுகிறது.
எனினும், உடனடியாக கில்லின் கேப்டன் பதவியை பறிக்க பிசிசிஐ முடிவு செய்யவில்லை. அவருடைய கேப்டன்சி திறமை மீண்டும் மதிப்பீடு செய்ய ஒரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் 3 போட்டிகளில் கில்லின் கேப்டன்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பிசிசிஐ கவனிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் டெஸ்ட் தொடர் தொடங்க இருப்பதால், தொடரின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கில் பங்கேற்க மாட்டார். அந்த நேரத்தில் துணை கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது. இதனால் ஒரே தொடரில் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரின் கேப்டன்சி திறமையையும் ஒப்பிட்டு பார்க்க பிசிசிஐக்கு வாய்ப்பு கிடைக்கும். இருவரில் யார் அணியை சிறப்பாக வழிநடத்தி, அணியின் செயல்பாட்டை மேம்படுத்துகிறார்களோ, அவருக்கு ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படலாம்.
கில்லின் ஒருநாள் கேப்டன்சி பதவி பறிக்கப்பட்டால் அவரது இடம் கேள்விகுறியாகும் என்றும் இல்லை. அவர் பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவர் இந்தியாவின் பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம்பெறுவார். மேலும், டெஸ்ட் அணியின் கேப்டனாக கில் தொடர்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் கில்லின் கேப்டன்சியை தீர்மானிக்கும் முக்கியமான தொடராக மாறியுள்ளது. கில் தனது கேப்டன் பதவியை தக்கவைத்து கொள்வாரா அல்லது ஷ்ரேயாஸ் ஐயரிடம் ஒருநாள் அணியின் தலைமை பொறுப்பு செல்லுமா என்பதற்கு இந்த தொடருக்கு பிறகு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.