TNPL 2026 Qualifier 2 Highlights: தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மதுரை பாந்தர்ஸ் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவாலிபயர் 2 போட்டி இன்று (ஆக. 26) நடைபெற்றது. குவாலிபயர் 2 போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - VIDA கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக்கான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கோவை அணி சிறப்பாக ஓபனிங்கை அமைத்தது. பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்களை கோவை அடித்தது.
10.2 ஓவரில் முதல் விக்கெட் சரிந்தது. ராதாகிருஷ்ணன் - சுரேஷ் லோகேஷ்வர் ஜோடி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ராதாகிருஷ்ணன் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 48 ரன்களையும், சுரேஷ் லோகேஷ்வர் 44 பந்துகளில் 8 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 66 ரன்களையும் அடித்தனர். சச்சின் மற்றும் ஆன்ட்ரே சித்தார்த் தலா 12 ரன்களை அடித்தனர்.
கேப்டன் ஷாருக்கான் 18 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் 34 ரன்களை அடித்தார். ஆனால் மறுமுனையில் அவருக்கு நல்ல துணை கிடைக்கவில்லை. 12.3 ஓவர்களில் 120 ரன்களை குவித்த கோவை அணி நிச்சயம் 200 ரன்களை தாண்டும் என கூறப்பட்டது.
ஆனால், திருச்சி வழக்கம்போல் டெத் ஓவர்களில் அசத்தியது. இதனால் கோவை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களையே அடித்தது. கோவை பந்துவீச்சில் ஆர் ராஜ்குமார் 3 விக்கெட்டையும், அதிசயராஜ் டேவிட்சன் மற்றும் ஈஸ்வரன் தலா 1 விக்கெட்டையே வீழ்த்தினர்.
184 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முதல் மூன்று பந்துகளிலேயே தீபன் லிங்கேஷ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். கே ராஜ்குமார், ஷ்யாம் சுந்தர், ஜெகதீஷன் கௌஷிக் ஆகியோர் முதல் பந்திலேயே டக்அவுட்டாகினர். இதன்மூலம், டிஎன்பிஎல் வரலாற்றில் முதல் 3 பந்துகளில் விக்கெட் வீழ்த்தி, கோல்டன் ஹாட்ரிக் சாதனையை படைத்தார் தீபன் லிங்கேஷ்.
அடுத்து மணிமாறன் சித்தார்த் வீசிய 4வது ஓவரில் சஞ்சய் யாதவ் 1, ஜாபர் ஜமால் 0 என ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் பவர்பிளே முடிவில் 26 ரன்களை மட்டும் அடித்த திருச்சி 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. கேப்டன் சுரேஷ் குமார் மட்டுமே பவுண்டரிகளை வரிசையாக அடித்து ஒருமுனையில் போராடி வந்தார். அவரும் அம்ரிஷ் வீசிய 9வது ஓவரில் வீழ்ந்தார்.
திருச்சி கேப்டன் சுரேஷ் குமார் 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 48 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளிலேயே, மணிமாறன் சித்தார்த் வீசிய 10வது ஓவரில் ஆர் ராஜ்குமார் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மணிமாறன் சித்தார்த் வீசதிய 12வது ஓவரில் ஆண்டனி தாஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி கட்ட பேட்டர்கள் சற்று போராடினார்கள்.
திவாகர் வீசிய 16 ஓவரில் செல்வ குமரன் 11 ரன்களிலும், அடுத்த வந்த அதிசயராஜ் டேவிட்சன் முதல் பந்திலும் டக்அவுட்டாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 15.4 ஓவர்களில் 99 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. இதன்மூலம், கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
👑 𝗧𝗵𝗲 𝗞𝗶𝗻𝗴𝘀 𝗺𝗮𝗿𝗰𝗵 𝗼𝗻! VIDA Kovai Kings are the second team to book their place in the Shriram Capital TNPL 2026 Final!
One more step to glory. 🏆
📺 Watch LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.
🎟️ Book your tickets now on the District by… pic.twitter.com/HlMUoxheue— TNPL (@TNPremierLeague) August 26, 2026
திருச்சி அணியில் சரவண குமார் மட்டும் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை கிங்ஸ் பந்துவீச்சில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டையும், தீபன் லிங்கேஷ் 3 விக்கெட்டையும், திவாகர் 2 விக்கெட்டையும், அம்பிரிஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தீபன் லிங்கேஷ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி (வெள்ளி) அன்று இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும். இப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் - VIDA கோவை கிங்ஸ் அணிகள் மோதும். இப்போட்டியை Tamil Nadu Premier League அதிகாரப்பூர்வமாக யூ-ட்யூப் சேனலில் நேரலையில் இலவசமாக பார்க்கலாம். Sony Sports Ten 4 Tamil தொலைக்காட்சி சேனலிலும் நேரலையில் பார்க்கலாம்.