Virat Kohli New Tattoo: இந்திய கிரிக்கெட்டின் நவீன நாயகன் விராட் கோலியை இளம் தலைமுறையினர் தங்களின் ஆதர்ச நாயகனாக கொண்டாடுகின்றனர்.
கிரிக்கெட்டில் அவர் ரன்களை குவிப்பது ஒருபுறம் என்றால், அவரது ஒழுக்கமாக வாழ்க்கை முறை மற்றும் அவரின் உடற்தகுதி ஆகியவையும் இளைஞர்களிடத்தில் அதிகம் தாக்கம் செலுத்துகின்றன. இன்றைய கால இந்திய இளைஞர்களுக்கு பிட்னஸின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்களில் விராட் கோலியும் ஒருவர்.
அப்படியிருக்க விராட் கோலியின் ஸ்டைலும் பலருக்கு விருப்பமான ஒன்றாகும். அதிலும் அவரது டாட்டூக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. அவரது உடலில் வெளியில் தெரியும் வகையில் இருக்கும் டாட்டூக்களை பார்த்து தங்களுக்கும் அதேபோல் டிசைனில் டாட்டூ போட்டுக்கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அந்த வகையில், விராட் கோலி அவரது டாட்டூ கலெக்ஷனில் புதிய டாட்டூ ஒன்றையும் சேர்த்திருக்கிறார். அதுதான் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. விராட் கோலியின் புதிய டாட்டூ குறித்து இங்கு காணலாம்.
விராட் கோலியின் இடது கையில் புதிய டாட்டூ உள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இடது கை பைசெப்பை சுற்றி ஏற்கெனவே இருக்கும் டாட்டூகளுக்கு மத்தியில் இந்த புதிய டாட்டூ போடப்பட்டிருக்கிறது.
ஒரு நீர்நிலையின் மேல்பகுதியில் சலனம் ஏற்பட்டதை போன்றும், அதில் ஒரு துளி நீர் விழுவது போலவும் அந்த புதிய டாட்டூ வரையப்பட்டுள்ளது. Allan F Gois என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பகிரப்பட்ட இந்த டாட்டூ புகைப்படம்தான் சமூக வலைதளம் மூலம் வேகமாக பரவி, ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
விராட் கோலி தனது இளம் காலத்திலேயே இதுபோன்ற டாட்டூகளை எக்கச்சக்கமாக போட்டிருந்தார். ஆனால் அதில் சில டாட்டூக்கள் அவரின் தற்போதைய மனநிலைக்கு உடன்படாமல் இருக்கலாம். இது வழக்கமாக டாட்டூ போட்டுக்கொள்பவர்களுக்கு வரும் பிரச்னைதான்.
எனவே, தனது பழைய டாட்டூக்களை மறைப்பதற்கோ அல்லது அகற்றுவதற்கோ பதிலாக, தற்போதுள்ள டிசைன்களை மீட்டெடுத்து சற்று மெருகேற்றி அவற்றை அனைத்தும் ஒன்றிணைத்து தற்போதைய வாழ்க்கை பயணத்தை பிரதிபலிக்கும் ஒரு ஒருகிணைந்த டாட்டூவாக உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு முன் விராட் கோலி கூறியிருந்தார்.
சிவபெருமானால் ஈர்க்கப்பட்ட கைப்பட்டையை மறுவடிவமைப்பு செய்திருந்தார், இதில் இருந்தே அவர் திட்டமிட்ட மாற்றம் தொடங்கியது. அந்த டிசைனில் இன்னும் டீடெய்லிங் கொடுக்கப்பட்டது. இதுபோல பல டாட்டூகள் விராட் கோலியின் உடலில் பரவியிருக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது என்றாலும் அவற்றின் அர்த்தங்களும் முக்கியத்துவமும் வேண்டுமென்றே ரகசியமாகவே வைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள முழு விவரத்தை அறியாமலேயே ரசிகர்கள் இந்த டாட்டூக்களை ரசிக்க வழிவகுக்கிறது.
விராட் கோலி கடைசியாக ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் விளையாடினார். 5, 65, 74 என சிறப்பான ஆட்டத்தை மூன்று போட்டிகளிலும் வெளிப்படுத்தியிருந்தார். செப்டம்பர் மாத இறுதியில் உள்நாட்டில் நடைபெறும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் விராட் கோலி அடுத்து களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.