தோனி Farewell Match ஆடாதது ஏன்? ஓய்வு முடிவுக்கான காரணத்தை சொன்ன ரெய்னா!
Why MS Dhoni Did Not Play Farewell Match: சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்திற்கு விடை கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் திடீரென ஓய்வு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில், அவர் Farewell போட்டியில் விளையாடாதது ஏன் என்பது குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பின்னால் அவரது உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். குறிப்பாக, முழங்கால்களில் ஏற்பட்ட வீக்கம் காரணமாகவே தோனி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
2027 ஐபிஎல்லுக்காக தயாரான தோனி
இது குறித்து பேசிய சுரேஷ் ரெய்னா, 2027 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அவர் தீவிரமாக தயாராகி வந்தார். இதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தனது உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் பல ஆண்டுகளாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என தொடர்ந்து விளையாடியதால் அவரது இரண்டு முழங்காலும் பாட்திப்பு ஏற்பட்டது என ரெய்னா கூறினார்.
தோனி உடல் ஒத்துழைக்கவில்லை.. அதனாலேயே ஓய்வு முடிவு!
மேலும், ஒரு இம்பாக்ட் வீரராக மட்டுமே அணியில் இடம்பெற தோனி விரும்பவில்லை. முழுமையான வீரராகக் களமிறங்குவதற்குத் தேவையான உடல் திறன் ஒத்துழைக்காத நிலையில், தொடர்ந்து விளையாடுவது சவாலாக இருந்தது என தெரிவித்தார்.
சிஎஸ்கேவின் மெண்ட்டாராக தோனி
இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தோனியை வீரர்கள் பட்டியலிலிருந்து விடுவித்து, அணியின் ஆலோசகராக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களைத் தொகுத்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதனுடன் அவர் வெளியிட்ட உருக்கமான பதிவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
45 வயதை எட்டியுள்ள தோனி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்திற்கு விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், அவரது ஓய்வு குறித்த தகவல் ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் மன உறுதி.. அஸ்வின் கருத்து!
தோனியின் முடிவு குறித்துப் பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும், தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான உறவு மிகவும் தனித்துவமானது என்று தெரிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகள் இருந்தபோதிலும், மன உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டு அணிக்காகத் தொடர்ந்து பங்களிக்க தோனி முயற்சி செய்ததாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.