SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கைதாகிறாரா அன்பில் மகேஷ்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தாக்கல் செயத முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Written By R Balaji
Published: Oct 26, 2026, 01:07 PM IST | Updated: Oct 26, 2026, 01:11 PM IST
Join

திமுக ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்திர அங்கீகாரம் மற்றும் டிடிசிபி உள்ளிட்ட அனுமதிகளை பெற்று தருவதாக கூறி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்றதாக பள்ளி நிர்வாகிகள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 12 ஆம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆளுநர் ஒப்புதல் தொடர்பாக நீதிபதி கேள்வி

அப்போது, ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் அரசு துறை செயலாளரின் அனுமதியுடன் அன்பில் மகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆளுநர் பதவி குறித்த திமுகவின் முந்தைய நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் அன்றைய விசாரணையின்போது உத்தரவு பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை அக்டோபர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையில், கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு அக்டோபர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி காவல்துறை முன்பு ஆஜரான அன்பில் மகேஷிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், 240 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அவரது தரப்பில் கூறப்பட்டது. மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்குகளை சமர்பிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஏழு ஆண்டுகளுக்கான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், முன்ஜாமீன் வழங்குவதற்கு காவல் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் ரூ.400 கோடிக்கும் அதிகமான முறைகேடு நடந்திருக்கலாம் என்றும், அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முத்துக்குமாரை அன்பில் மகேஷ் பாதுகாப்பதாகவும் காவல் துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், இன்று அந்த மனு மீதான தீர்ப்பை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

வழக்கின் விசாரணை இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே இருப்பதால், தற்போதைய சூழலில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்ற காவல் துறையின் வாதத்தை ஏற்று நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES