Apsara Reddy Resigned From AIADMK : ஊடகவியலாளராகவும், சமூக ஆர்வலராகவும் அறியப்பட்டவர் அப்ஸரா ரெட்டி. இவர் திருநங்கை ஆவார். அப்ஸரா கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பயணித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாஜகவில் சேர்ந்த அப்ஸரா, அதே ஆண்டு மே மாதம் அதிமுகவில் இணைந்தார். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஆவார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு பிளவுகள், சர்ச்சைகளை தொடர்ந்து அப்ஸரா ரெட்டி, 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி, அப்ஸரா ரெட்டியை அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளராக நியமித்தார். காங்கிரஸில் தேசிய அளவிலான பதவியை பெற்ற முதல் திருநங்கை ஆனார், அப்ஸரா.
இதைத் தொடர்ந்து அப்ஸரா மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 2020ஆம் ஆண்டு நவம்பரில் அதிமுகவில் இணைந்த அவர், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்து மாநிலம் முழுவதும் பம்பரமாக பணியாற்றினார்.
அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்த அப்ஸரா ரெட்டி, தற்போது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளார். ராஜினாமா குறித்த கடிதத்தை அவரது X பக்கத்தில் இன்று அதிகாலை 1.17 மணிக்கு பதிவிட்டுள்ளார்.
— Apsara R (@talktoapsara) August 12, 2026
மிகுந்த கனத்த இதயத்துடன் அதிமுகவில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் அப்ஸரா குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், அஇஅதிமுக உடனான தனது தொடர்பு என்பது வெறுமனே அரசியல் சாரந்ததாக மட்டும் இருந்ததில்லை என்றும் அரசியல் வழிகாட்டியாகவும், தலைவராகவும் கருதும் ஜெயலலிதா மீதான ஆழ்ந்த அபிமானம், அன்பு, மாறாத நம்பிக்கையிலேயே அது வேரூன்றியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அதில், "மக்கள், கண்ணியம், அனைவரையும் உள்ளடக்குதல், சேவை ஆகியவற்றின் வேரூன்றிய ஜெயலலிதாவின் அரசியல் தொலைநோக்கு பார்வையை நான் எப்போதும் நம்புகிறேன்.
என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டுமே தவிர உடைப்பதாக இருக்கக் கூடாது. அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர ஒதுக்குவதாக இருக்கக் கூடாது. மக்களப் பிளவுப்படுத்துவதை விட ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும்.
கட்சி உடனான எனது பயணம் முழுவதும் நீங்கள் எனக்கு வழங்கிய கண்ணியம், அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதைக்கு, பொதுச்செயலாளருக்கு (எடப்பாடி பழனிசாமிக்கு) நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் மீதான எனது தனிப்பட்ட மரியாதையும், அபிமானமும் என்றும் மாறாதது" என அப்ஸரா தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், இந்த முடிவு கசப்பினாலோ அல்லது மரியாதைக் குறைவினாலோ எடுக்கப்பட்டதல்ல என்றும், இது எனது மனசாட்சிக்கும் பொது வாழ்க்கையை வழிநடத்திய கொள்கைக்கும் உண்மையாய் இருப்பதற்காக எடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான, ஆழமாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்க்கையின் முக்கிய அத்தியாயத்தை வடிவமைத்த வாய்ப்புகள், பொறுப்புகள், நடப்புகள், அனுபவங்களுக்காக நன்றியுடன் கட்சியில் இருந்து விலகுவதாகவும்; அதிமுக உடனான தொடர்பையும் இணைந்து பணியாற்றிய பாக்கியத்தைப் பெற்ற மக்களையும் எப்போதும் போற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்ஸரா அவரது அடுத்தக்கட்ட அரசியல் பயணம் குறித்து அந்த கடிதத்தில், "எனது அரசியல் பணம் இனி வேறு திசையில் செல்லக்கூடும். ஆனால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான எனது அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது. நான் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றுவேன். மக்களோடு நிற்பேன். கேட்கப்பட வேண்டிய குரல்களை உரக்கச் செய்வேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நமக்கு இடையேயான தனிப்பட்ட அன்பும், மரியாதையும் இந்த அரசியல் முடிவை கடந்தும் நீடிக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் என்றும் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டு அப்ஸரா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி பலரும் தவெகவில் இணைந்து வரும் சூழலில், அப்ஸராவும் அடுத்து தவெகவில் இணையலாம் என கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.