தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவராக இருந்தவர், திருப்பூர் சுப்பிரமணியம். இவர், தற்போது கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் பிரபல இயக்குநர் ஒருவர் பற்றி பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அவர் எந்த இயக்குநர் பற்றி கூறுகிறார் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
திருப்பூர் சுப்பிரமணியம், சமீபத்தில் ஒரு தனியார் யூடியூப் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்திருந்தார். அதில், அறிமுக இயக்குநர் ஒருவர், ரூ.10 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு முதல் படத்தை இயக்கியதாகவும், அடுத்த படத்திற்கும் ரூ.20 லட்சம் வாங்கிக்கொண்டு படம் இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் கூறி ஒப்பந்தமிட்டதாகவும் கூறினார். தொடர்ந்து, அந்த முதல் படம் வெற்றி பெற்று சூப்பர் ஹிட் ஆனதால், இரண்டாவது படத்தில் வேறு ஒரு பெரிய நடிகை வைத்துள்ளார் தயாரிப்பாளர்.
அப்போது அந்த நடிகர், “என்னிடம் வேறு ஒரு சிறிய நடிகர் என்றுதானே கூறினீர்கள், இப்போது ஏன் பெரிய நடிகரை வைத்து தயாரிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். மேலும் தயாரிப்பாளரிடம் தன் ஊதியத்தையும் உயர்த்தியிருக்கிறார். ரூ.20 லட்சம் சம்பளம் என்று பேசிய படத்திற்கு, அவர் ரூ.1 கோடி சம்பளம் வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
படம், ஏறத்தாழ 70 சதவீதம் முடிந்தும், திருப்தியில்லாமல் போனதால், அதை மொத்தமாக ஓரங்கட்டிவிட்டு கடந்த 4 வருடங்களாக அந்த இரண்டாவது படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படி தெரிவித்ததில் இருந்து, அந்த இயக்குநர் யார், அந்த தயாரிப்பாளர் யார் என்று மக்கள் தேடி வந்தனர். அவர்களுக்கு ஒரு விடை கிடைத்திருக்கிறது.
திருப்பூர் சுப்பிரமணியம் கூறிய அந்த இயக்குநர் யார் என்றும், அந்த தயாரிப்பாளர் யார் என்றும் கேள்வி எழ, இதற்கு சினிமா யூடியூப் சேனலான வலைப்பேச்சு பதிலளித்துள்ளது.
அந்த தயாரிப்பாளர், கோப்ரா, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் எனவும், அவர் குறிப்பிட்ட இயக்குநர், இன்னாசி பாண்டியன் என்றும் கூறியிருக்கின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு, அருள்நிதி நடிப்பில் ‘டைரி’ என்ற ஹாரர் த்ரில்லர் திரைப்படம் வெளியானது. இந்த படம் யாரும் எதிர்பாராத வண்ணம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தை தயாரித்தவர், ஃபைவ் ஸ்டார் கதிரேசன்தான். தற்போது ‘புல்லட்’ எனும் திரைப்படத்தை இன்னாசி பாண்டியன் ராகவா லாரன்ஸை வைத்து இயக்கி வருகிறார். இந்த படம்தான், பல வருடங்களாக கிடப்பில் இருக்கிறது. எனவே, திருப்பூர் சுப்பிரமணியம் குறிப்பிட்ட அந்த இருவர் இவர்கள்தான் என ரசிகர்கள் கணித்திருக்கின்றனர். இருப்பினும், தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ, இயக்குநர் தரப்பில் இருந்தோ அது தான்தான் என்று இருவரும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் சுப்பிரமணியம், நடிகர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளருக்கு செய்யும் அட்ராசிட்டிகள் தாங்க முடிவதில்லை என்று தெரிவித்தார். மேற்கூறிய சம்பவம் குறித்து பகிர்ந்த பின்னர், அந்த இயக்குநர் பற்றி பிரஸ் மீட் வைத்து இதை வெளியில் சொல்லுங்கள் என்று அந்த தயாரிப்பாளரிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு அந்த தயாரிப்பாளர் மறுத்து விட்டார் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இதைப்போல தயாரிப்பாளர்கள் கடன் வாங்கி படம் எடுக்கும் போது, அதற்கு மேலும் பாதகம் தரும் வகையில் நடிகர்களும் இயக்குநர்களும் இப்படி நடந்து கொள்வது குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை தட்டிக்கேட்க, எந்த தயாரிப்பாளருக்கும் முதுகெலும்பில்லை என்றும் கூறியிருந்தார்.