வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில நாட்களில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 16ஆம் தேதி இந்த வானிலை அமைப்பு புயலாக உருவெடுக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புயலாக மாறினால், அதற்கு ஈரான் பரிந்துரைத்துள்ள ‘அக்வான்’ (Akvan) என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான இது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘அக்வான்’ என்ற பெயரை ஈரான் நாடு பரிந்துரைத்துள்ளது. இந்தப் புயல் உருவாகும் சூழலில் வங்கக்கடல் பகுதியில் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பவும், நவம்பர் 16ஆம் தேதி வரை ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநிலங்களின் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, இன்று மற்றும் நாளை (நவ., 13, 14) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட
கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 15ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
16-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
17-11-2026 மற்றும் 18-11-2026: தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
19-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இன்று மற்றும் நாளை (நவம்பர் 13, 14) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.