அதிகாலையில் தடம் புரண்ட ரயில் எஞ்சின்... தண்டவாளத்தில் நிலச்சரிவால் பாதிப்பு
குமரி - கேரள எல்லையான நெய்யாற்றின்கரை பாறசாலை இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மண்சரிவால் பிலாஸ்பூர் - திருநெல்வேலி ரயில் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நாகர்கோவில் - கன்னியாகுமரி பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கன்னியாகுமரி - கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறைசாலை மற்றும் நெய்யாற்றின்கரை பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை வெளுத்து வாங்கியது. அதிகாலை 2 மணி அளவில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது, பிளாஸ்பூரில் இருந்து நெல்லை நோக்கி கேரளா வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, பாறைசாலை - நெய்யாற்றின்கரை இடையே ரயில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து ரயில் எஞ்ஜினின் முன்பகுதியில் விழுந்ததை ஓட்டுநர் பார்த்துள்ளார். உடனே சாமர்த்தியமாக ரயிலை நிறுத்த முயன்றார். இருப்பினும், ரயிலின் எஞ்ஜின் மட்டும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. ஓட்டுநரின் சுதாரிப்பான நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் படிக்க | 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - எங்கெல்லாம் ஆரஞ்சு அலர்ட்?
பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு
ரயில் எஞ்ஜின் தண்டவாளத்தை விட்டு இறங்கியது குறித்தும், மண்சரிவு ஏற்பட்டது குறித்தும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவையை பகுதிநேரமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்தது.
ரயிலில் இருந்த பயணிகள் மாற்று ஏற்பாடுகள் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை ரயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து திருநெல்வேலியில் இருந்து மீட்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியிருந்த ரயில் எஞ்ஜினைத் தூக்கி மீண்டும் தண்டவாளத்தில் வைக்கும் பணியை மேற்கொண்டனர்.
எந்தெந்த ரயில் சேவைகளில் பாதிப்பு?
மதுரை - புனலூர் ரயில் பணகுடியிலும், தாம்பரம்- திருவனந்தபுரம் அம்ரித பாரத் நாங்குநேரியிலும் நிறுத்திவிடப்பட்டுள்ளது. குருவாயூர் - சென்னை மற்றும் புனலூர் - கன்னியாகுமரி ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து அனந்தபுரி வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அரை மணிநேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக ரயில் புறப்பட்டது. இதனால் பயணிகள் தங்களது ஊர்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தொடர் அவதியை சந்தித்தனர்.
மேலும் படிக்க | தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை?
6 ரயில்கள் முழுமையாக ரத்து
இதற்கிடையில், மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக 6 ரயில்களை முழுமையாக ரத்து செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் பயணிகள் ரயில், நாகர்கோவில் - கொல்லம் பயணிகள் ரயில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் பயணிகள் ரயில், திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்குச் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். குறிப்பாக திருவனந்தபுரத்திற்கு வேலைக்குச் செல்லும் தனியார் நிறுவன ஊழியர்களும், கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர். ரயில்கள் இயக்கப்படாததால் அவர்கள் பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இரட்டை ரயில் பாதை எப்போது?
நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான இடங்களில் தண்டவாளம் அமைக்கப்பட்டுவிட்டன. கேரள மாநிலத்தில் மட்டும் இன்னும் ஒரு சில இடங்களில் இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடையவில்லை.
ஒருவேளை, இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டிருந்தால் ஒரு தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், மற்றொரு தண்டவாளம் வழியாக ரயில்களை இயக்கி இருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, இரட்டை ரயில் பாதை பணிகளைத் துரிதமாக முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.