BLM கூட்டுறவு நிதி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநருமான ஆர். பிரேம்குமார் என்பவரை கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் வைத்து இன்று (அக். 29)கைது செய்தனர்.
5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் இவருக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்ததாக கூறப்படும் BLM பிரேம்குமாருக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் என்ன தொடர்பு என தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனவே, கேரள போலீசாரின் இந்த கைது நடவடிக்கை தமிழ்நாடு அரசியல் களத்திலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அந்த வகையில், பிரேம்குமாரின், அவர் கைது செய்யப்பட்ட வழக்கின் பின்னணி, முதலமைச்சர் விஜய் உடனான அவரது சந்திப்பு விவரம், உதயநிதி ஸ்டாலின் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக இங்கு காணலாம்.
கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இங்கு சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் இவரது தந்தை பணியாற்றி உள்ளார். கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவதில் இவர் கடுமையான சிரமங்களை அனுபவித்துள்ளார்.
எனவே, அந்த அனுபவத்தை ஒட்டி, இவர் 2006ஆம் ஆண்டில் தனது நான்கு நண்பர்களின் உதவியுடன் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (BLM) ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் கூட்டுறவு நிதி நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். அதாவது இந்த கூட்டுறவு அமைப்பு சாதாரண மக்களுக்கு வீட்டு வசதி சார்ந்த கடன் உதவி போன்ற நிதி பலன்களை அளிக்கும்.
BLM கூட்டுறவு அமைப்பு சென்னையில் தொடங்கப்படுகிறது. BLM 2002ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. பிரேம்குமார் இந்த நிறுவனத்தின் நிறுவனரும், தற்போதைய தலைவரும் ஆவார். இவை அனைத்தும், கேரளாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் Unique Times எனும் பத்திரிகைக்கு 2023ஆம் ஆண்டில் பிரேம்குமார் அளித்த நேர்காணலில் அவரால் தெரிவிக்கப்பட்டதாகும்.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேசத்தில் BLM இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் வீட்டு வசதி துறை சார்ந்த இயங்கிய BLM, பின்னர் பல துறைகளில் கால் பதித்துள்ளது. BLM அமைப்பு தொடங்கி 20 ஆண்டுகளே ஆகும் நிலையில், வீடு சார்ந்த திட்டங்கள், சிமெண்ட் உற்பத்தி, ஹோட்டல்கள், ரெசார்ட்கள், தங்கநகை விற்பனை நிலையங்கள், பசுமைவாயு உற்பத்தி, பேருந்துகள் உள்ளிட்டவற்றில் BLM முதலீட்டில் ஈடுபட்டுள்ளது.
முதலீட்டிற்கு அதிக லாபத்தை தருவதாக வாக்குறுதியளித்து, ஓய்வுபெற்றவர்கள் உள்பட பல்வேறு தரப்பு முதலீட்டாளர்களிடம் இருந்து வைப்புத்தொகையாக பல கோடிகளை BLM அமைப்பு பெற்றதாகவும்; பணத்தை டெபாசிட் செய்தவர்கள் தங்களின் முதலீட்டுத் திட்டம் முதிர்வடைந்த பிறகும், தங்களின் பணத்தை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
முதலீட்டாளர்களின் வைப்புத்தொகையை கூட்டுறவு சங்க விதிகளுக்கு புறம்பாக, தனிப்பட்ட கணக்குகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி நடந்திருக்கலாம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், BLM தொடர்புடையே சந்தேகத்திற்குரிய பணமோசடி மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை விசாரிக்க, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த BLM பிரேம்குமார், வழக்கின் விசாரணையை முடக்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் இருந்து அவரை பின்தொடர்ந்து சென்னையில் வைத்து இன்று காலையில் அவரை கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது என கேரள முதலமைச்சர் வி.டி. சதீஷன் மற்றும் உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான உடனேயே தனக்கு நெஞ்சு வலிப்பதாக BLM பிரேம்குமார் தெரிவித்துள்ளார். அவரை போலீசார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு உடல்நிலை தேறியதும் கோழிக்கோடு அழைத்துச் செல்ல போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
முதலீட்டாளர்களின் டெபாசிட் பணத்தை தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றியது, அதைக் கொண்டு ஹோட்டல், ரெசார்ட்கள், திரையரங்குகளை வாங்கியது உள்ளிட்டவை குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலின் இயக்குநர்களில் ஒருவராகவும் BLM பிரேம்குமார் உள்ளார். இவர் கடந்த ஜூலை 3ஆம் தேதி அன்று முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். அப்போது அந்த தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் மற்றொரு இயக்குநரும் அந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், News தமிழ் 24x7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர். #CMJosephVijay https://t.co/lk9RSaOv57
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 3, 2026
இந்த சந்திப்பு குறித்து புகைப்படத்துடன் முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில (@CMOTamilnadu) பதிவிடப்பட்டுள்ளது. ஜூலை 3ஆம் தேதி மதியம் 2.58 மணிக்கு போடப்பட்ட பதிவு இன்றும் அவரது X பக்கத்தில் தென்படுகிறது.
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது என BLM பிரேம்குமார் கைது குறித்து பதிவிட்டுள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், BLM பிரேம்குமாருக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அந்த பதிவில், "பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் முதலமைச்சரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தவெகவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?" என சந்தேகம் கிளப்பி உள்ளார்.
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு? தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது. இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன? அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்? MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா? இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
— Udhay (@Udhaystalin) October 29, 2026
எந்த 'விவகாரமான' தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, சோஃபா அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று தவெகவின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
எனவே சிபிஐ, தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO), அமலாக்கத்துறை போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்றும்; கைதான பிரேம்குமாருக்கும், தவெக தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பிரேம்குமார் அவரது நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சரை சந்தித்த செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது என்றும் இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
2026 ஜூலை 3 ஆம் தேதி அன்று "நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சியின் தலைவர் திரு. பி. சகிலன், இயக்குநர்கள் திரு. ஆர். பிரேம் குமார், திரு. சித்தேஷ்வர் பிரதீப்குமார் நாயர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்" என்ற செய்தி பகிரங்கமாகத்தானே பகிரப்பட்டு உள்ளது. இதில் எங்கிருந்து தனிநபரை சந்தித்ததாகக் கதை விடுகிறார் தமிழக எடுபடாதக் கட்சியின் தலைவராக இருப்பவர்?. இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம்?. மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து மாட்டிக்கொண்டு கம்பி எண்ணும் கழகத்தினர் போல இல்லை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். தீயசக்தியின் ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் முன் ஜாமீன் முன்னேற்றக் கழகமாக இருந்து கம்பி எண்ணும் கழகமாக மாறியவர்கள். தங்கள் மங்குனித்தனமான திசைத்திருப்பல்களால் தீயசக்தியினர் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர். எனவே, அவல அரசியலின் அடுத்த வாரிசுகளும் அவதூறு அரசியலின் அடுத்த வாரிசுகளும் ஆபாச அரசியலின் அடுத்த வாரிசுகளும் இனியாவது அடக்கி வாசித்தல் நல்லது.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) October 29, 2026
இன்னும்கூட அந்தப் பதிவு இருப்பதை யார் மறைத்ததாம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஊழல்கள் வரிசை கட்டி அம்பலமாவதால் அச்சத்தில் உறைந்து அடிப்படையற்ற உளறல்களை ஆரம்பித்துள்ளனர் என்றும் திசைத்திருப்பல்களால் மக்கள் மத்தியில் மேலும் மேலும் மதிப்பிழக்கத் தொடங்கி உள்ளனர் என்றும் திமுகவை சாடி உள்ளனர்.
BLM பிரேம்குமார் கைதானது ஒருபுறம் என்றாலும் இவருக்கு முதலமைச்சர் விஜய்யுடன் தொடர்பிருக்கிறதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு இன்னும் முதலமைச்சர் தரப்பிலோ, அமைச்சர்கள் தரப்பிலோ, தவெக நிர்வாகிகள் தரப்பிலோ விளக்கம் அளிக்கப்படவில்லை.
இருப்பினும், தவெகவின் அதிகாரப்பூர்வ ஐ.டி.விங் X பக்கத்தில், செய்தி சேனலில் இயக்குநராகவே முதலமைச்சரை அவர் சந்தித்தாகவும், அது தனிநபர் சந்திப்பு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் - BLM பிரேம்குமார் சந்திப்பின் புகைப்படம் நீக்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டிய நிலையில், தற்போதும் முதல்வர் விஜய்யின் X பக்கத்தில் அந்த பதிவும், புகைப்படமும் இருக்கிறது.
எனவே, BLM பிரேம்குமார் உடன் முதலமைச்சர் விஜய்க்கோ அல்லது தவெக நிர்வாகிகளுக்கோ தொடர்பிருப்பதாக ஆதாரங்களுடன் நிறுவப்படவில்லை. இவை அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம் மட்டுமே.