Parandur Aiport: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு திமுக, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பரந்தூர் விமான நிலையம் கைவிட்டது குறித்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கூறுகையில், "பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது.
அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல. பெருத்த ஏமாற்றம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்" என்றார்.
மேலும், முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், "இன்று தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள். சென்னைக்கு இரண்டு ஓடுபாதைகளுடன் கூடிய, உலகத்தரத்திலான புதிய விமான நிலையத்தை அமைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பும், விரிவான திட்டமிடலும் அரசியலுக்குப் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதன் பாதிப்பு ஒரு விமான நிலையத்தோடு முடிந்துவிடப் போவதில்லை. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், பூந்தமல்லி முதல் காஞ்சிபுரம் வரையிலான ஒட்டுமொத்த தொழில் வழித்தடம் இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 41% பங்களிக்கும் பகுதி மேலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியும்.
காலப்போக்கில் குறைந்தது 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்க முடியும். இத்தனை வாய்ப்புகளும் இப்போது வெறும் அரசியலுக்காக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளன. சென்னைக்கும் தமிழ்நாட்டிற்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு புதிய, உலகத்தரத்திலான சர்வதேச விமான நிலையம் கட்டாயம் வேண்டும்" என்றார்.
உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வர் விஜய். விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு.
பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா?
பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், அண்ணாமலை கூறுகையில், "புதிய இடம் எது என்பதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனெனில், இரண்டாவது விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்வு செய்யத் தாமதப்படுத்துவதால், தமிழ்நாட்டின் வளர்ச்சி குறைந்தது 10 ஆண்டுகள் தாமதிக்கும் அபாயம் உள்ளது.
பரந்தூர் திட்டத்திற்கு மாற்றாக வேறு இடத்தில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு நிர்வாக ரீதியாக முடிவெடுத்தாலும், புதிய இடத்தைத் தேர்வு செய்வது, மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட சட்டப்பூர்வமான அனுமதிகளைப் பெறுவது, ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, நிலம் கையகப்படுத்துவது, தேவையான உரிமங்கள் பெறுவது என, விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம்" என்றார்.