CM விஜய் மீண்டும் சர்க்கார் படம் பார்க்க வேண்டும்... சிபிஐ வீரபாண்டியன் அதிரடி கருத்து
தவெக ஆட்சி 6 மாத காலத்தில் செயல்பாடு - பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கிறது ன சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார். அதேவேளையில், 13 கோடி பேர் வாக்கு பறிபோனதற்கு முதலமைச்சர் ஏன் மௌனமாக இருக்கிறார்? என சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் கடுமையாக விமர்சித்தார்.
இடதுசாரி கட்சிகளின் கூட்டு அறைக்கூவல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் சர்.பிட்டி. தியாகராய அரங்கில் நேற்று (நவ. 10)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ (எம்எல்) மாநில செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் வீரபாண்டியன், சண்முகம், ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். வீரபாண்டியன், "மேகதாது அணை கட்ட கூடாது என்று சொல்லி தமிழக முதலமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம். விலைவாசி உயர்வு கட்டுக்கடங்காமல் இருக்கிறது. விலையை கட்டுப்படுத்த முதலமைச்சர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | தீபாவளியில் ரத்தக் களமான தமிழகம்! ஒரே நாளில் 11 கொலைகளா?
முதலமைச்சர் விஜய் மௌனமாக இருப்பது ஏன்?
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, இந்தப் பொருட்களின் விலையும் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதற்காக இன்றைய பிரதமரையும் முதலமைச்சரையும் வலியுறுத்திகிறோம்.
தமிழ்நாடு மக்களின் அதிகார குறியீடு முதல்வர் (விஜய்). 13 கோடி மக்களின் வாக்கு பறிபோனதற்கு முதலமைச்சர் விஜய் பதில் சொல்ல வேண்டும். அவர் கருத்தை சொல்ல வேண்டும். இது ஜனநாயக படுகொலை. 13 கோடி பேர் வாக்கு பறிபோனதற்கு முதலமைச்சர் ஏன் மௌனமாக இருக்கிறார்?" என கேள்வி எழுப்பினார்.
6 மாதக்கால தவெக ஆட்சி எப்படி?
தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதக்காலம் ஆன நிலையில் தவெக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த பெ. சண்முகம் அளித்த பதில், "தவெக ஆட்சி 6 மாத காலத்தில் செயல்பாடு - பிளஸ், மைனஸ் இரண்டும் இருக்கிறது. இலவச பேருந்து பயணம், காலை உணவு , தங்க மோதிரம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்கிறோம்.
ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி, பால் உற்பத்தி விலை, சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தீபாவளியை ஒட்டி ஏறத்தாழ 11 பேர் கொல்லப்பட்டனர். இதுபோன்ற பிரச்சனைகளில் அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் மக்களுக்கு அச்சமற்ற வாழ்க்கையில் உத்தரவாதம் கொடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கடந்த ஆட்சியில் எதையெல்லாம் குறை சொன்னார்களோ அதை எல்லாம் இவர்கள் ஆட்சியில் சரி செய்ய வேண்டும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி என்பதில் தமிழக மக்கள் எதிர்பார்ப்போடு இருந்தார்கள். அந்த நிலை ஏற்படவில்லை" என்றார்.
பழங்குடியினரை கொன்றதை சாதனையாக பேசுகிறார் பிரதமர்
மேடையில் பேசிய சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், "இடதுசாரிகள் அரசியல் கட்சி என்று சொல்லும் போது, ஜனநாயக சக்திகளை கடந்து செல்ல முடியாது. உலகில் எங்கும் இல்லாத பன்முக இயக்கம் கொண்ட நாடு இந்தியா.
இடதுசாரிகளுக்கு நீண்ட பெரிய பாதை இருக்கிறது. அதற்காக முன்னெடுப்புதான் இது. பிரதமர் மோடி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேசும் போது, நக்சலைட்டுகள் இல்லாமல் செய்துவிட்டதாகவும், இன்னமும் அறிவுசார் நக்சலைட்டுகள் இருப்பதாக சொல்கிறார்.
அவர் யாரை சொல்கிறார். இருப்பினும் அறிவுசார் என்று சொன்னதற்கு பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த அறிவு தனிமனித அறிவல்ல. நாட்டுக்கான அறிவு. விடுதலை அறிவு இது. நாங்களும் அறிவுசார் நக்சல்தான்.
நாட்டின் பிரதமர் நக்சலைட்டுகளை கொன்றதை பெருமையாக சொல்கிறார். பழங்குடி மக்களின் துயரை பற்றி நாட்டின் பிரதமர் பேச முடியுமா? இந்திய உச்சநீதிமன்றம் தடை செய்திருந்தது. ஆனால் பிரதமர் அதை பேசுகிறார். பழங்குடியினரை கொன்றதை சாதனையாக பேசுகிறார் பிரதமர்.
நக்சலைட்டுகளுக்கு பரிந்து பேசவில்லை
டெல்லியில் இருந்து சென்னை வரை கணக்கெடுத்தாலும் கோடிக்கணக்கான அறிவுசார் நக்சல்கள் இருக்கின்றனர். இதன்மூலம் நான் நக்சலைட்டுகளுக்கு பரிந்து பேசவில்லை. ஆனால் அந்த பாதையை கருத்தியலை பேசுகிறேன், தனிநபர் படுகொலையை அது விரும்புவதில்லை.
கம்யூ ஆட்சி செய்யும் நாடுகளில் எந்த ஆலயங்களும் இடிக்கப்படவில்லை. கம்யூனிஸ்டுகள் எடுத்த அரசியல் நடவடிக்கையில் தவறுகள் இருக்கிறது அதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் கம்யூனிஸ்டுகள் என்ன தீமை நடந்திருக்கிறது? நாட்டிற்கு தீங்கிழைக்காத அரசியல் இயக்கங்களில் முதலில் வருவது கம்யூனிஸ்டுகள்தான். வாக்கு என்பது சாதாரணமானதல்ல. இதற்கு விலை இல்லை.
சர்க்கார் படத்தை விஜய் பார்க்க வேண்டும்
முதலமைச்சர் ஒரு வாக்குக்காக ஒரு படத்தில் போராடுவார். மீண்டும் முதலமைச்சர் அந்தப் படத்தை பார்க்க வேண்டும். 13 கோடி பேர் வாக்குகளை நீக்கி ஜனநாயக படுகொலை செய்ததை கண்டிக்கிறேன் என்று ஒரு வார்த்தை ஏன் தமிழக முதலமைச்சரால் சொல்ல முடியவில்லை?
1.70 லட்சம் மக்கள் வாக்களித்து இருப்பதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் திடீரென்று அரசியலுக்கு வந்திருக்கலாம் எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய முதல் குரல் இடதுசாரிகள் குரல். இது ஜனநாயகத்திற்காக எடுத்த முடிவு. பாஜக சூழ்ச்சியை தடுத்திருக்கிறோம்.
மதச்சார்பின்மையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழக நலனில் உழைக்கும் மக்கள் நலனில் உறுதியாக இருக்கிறோம். நேற்று நம் ஆதரவு தேவைப்பட்டது. இன்று தேவைப்படாமல் போகலாம். நாளை தேவைப்படாமல் போகலாம். தேவைப்பட்டாலும் தேவைபடாவிட்டாலும் நாங்கள் என்றும் உழைக்கும் மக்களின் பக்கம் இருப்போம். நமது நோக்கம் பாஜகவை வீழ்த்துவது தான்" என்றார்.
மேலும் படிக்க | எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கொள்ளாத தவெக அரசு!" - தூய்மை பணியாளர்கள் ஆவேசம்!