'அக்வான்' புயல்.. மிகத் தீவிரப் புயலாக வலுப்பெறும்! 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! எங்கெல்லாம்?
Tamil Nadu Weather: அக்வான் புயல் நவம்பர் 19ஆம் தேதி மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்று, நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நெல்லூர் - துனி இடையே ஆந்திரக் கடற்கரையைக் கடக்கக்கூடும். இதன் காரணமாக நவம்பர் 18, 19 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள 'அக்வான்' புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், நவம்பர் 20ஆம் தேதி ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் தாக்கத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், நேற்று (16-11-2026) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று 17:30 மணி அளவில் "அக்வான்" (Akvan) புயலாக (Cyclonic Storm) வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (17-11-2026) 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 19ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக (Very Severe Cyclonic Storm) கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக இன்று (நவம்பர் 17) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவ., 18, 19ல் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை நவம்பர் 18ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நவம்பர் 19 அன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
20-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
21-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
22-11-2026: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23-11-2026: தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை
இன்று (17-11-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (18-11-2026) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.