அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்
சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சமீபத்தில் நடந்த அரசு விழாவில் அவர் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து தற்போது சென்னையில் இந்திய ஜனநாயாக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
தவெக ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், அதற்குள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் சிக்கி வருகின்றனர். சமீபத்தில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அனைவரும் பேசி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சமயத்தில், சென்னையில் உள்ள அண்ணா சாலையில் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
ஆபாச குறுஞ்செய்தி விவகாரம்..
சில நாட்களுக்கு முன்பு, தவெக எம்.எல்.ஏவான அருள் விக்னேஷ் அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கனிமொழி எம்.பி, ட்வீட்ட போட்ட பின்பு, தவெகவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜோதிமணி உள்ளிட்ட பலர் அருள் விக்னேஷ் குறித்து கண்டனத்தையும், தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்றும் பதிவிட்டனர்.
DFYI போராட்டம்:
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில், ஏற்கனவே அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பிற கட்சிகளும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, அருள் விக்னேஷ் பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
மேலும் படிக்க | "ரீல்ஸ் வெளியிடுவதால் போதையை ஒழிக்க முடியாது" - தவெக அரசை விளாசிய டிடிவி தினகரன்
அருள் விக்னேஷ் பிரச்சனை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு, அருள் விக்னேஷ் வராதிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அரசு மருத்துவமனை திறப்புவிழா..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில், மாவட்ட தலைமை மருத்துவமனையில், ரூ.59.04 கோடி மதிப்பீட்டில் கூடுதல் படுக்கைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய கட்டத்திறப்பு விழா புதன்கிழமையான நேற்று நடைப்பெற்றது.
முதல்வர் விஜய் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இந்த புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பத்மஜா குத்திவிளக்கேற்றினார். இதில், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்.பழனிசாமி கலந்து கொண்டார்.
மேலும், திருக்கோவிலூர் சார்-ஆட்சியர் கே.எம்.கார்த்திக் ராஜா, திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர் டி.என்.முருகன், இணை இயக்குநர் மாலினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மால, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் எஸ்.ஹேமா, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முகமது ஆஷிப் இளநிலை பொறியாளர் சேகர் மற்றும அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அருள் விக்னேஷ் எங்கே..?
அரசு தலைமை மருத்துவமனை, கள்ளக்குறிச்சியில் திறக்கப்பட்டதை அடுத்து, இதில் அருள் விக்னேஷ் ஏன் கலந்து கொள்ளவில்லை? எனும் கேள்வி எழுந்துள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார், கடும் கண்டனங்களுக்கு உள்ளானதால், இந்த விழாவை அருள் விக்னேஷ் புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், அருள் விக்னேஷ் தேவையற்ற செய்திகள் வெளியாவதை தடுக்கும் பொருட்டு கூட வராமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில், தவெக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அருள் விக்னேஷை கடும் கோபத்துடன் பேசியதாகவும், அவருக்கு அரசு விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளை உண்மை அல்லது இல்லை என்று தவெக இதுவரை வெளிப்படையாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TN Power Cut: தமிழகத்தில் நாளை (நவ., 20) மின்தடை.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட்!