“ராகுல் காந்தியின் போன் கால்-ஐ ரிஜெக்ட் செய்தேனா?” மு.க.ஸ்டாலின் விளக்கம்!
சமீபத்தில், சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், இதற்காக அழைத்த போது அவர் அந்த போனை ரிஜெக்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, தன்னுடைய சுயசரிதை புத்தக்கத்தை சமீபத்தில் வெளியிட்டார்.. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, நாட்டின் பிற தலைவர்கள் பலரும் வந்து கலந்து கொண்டனர். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து கலந்து கொள்ளாதது பெரிதாய் விமர்சிக்கப்பட்டது.
சோனியா காந்தியின் சுயசரிதை!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தன் சுயசரிதையை "Belonging : A Journey Of Love" எனும் பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புத்தகமாக இருக்கிறது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, டெல்லியில் இருக்கும் ஐடிசி மௌரியா ஹோட்டலில் நடைப்பெற்றது. இதில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பல கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் விஜய்க்கு சோனியா காந்தி நேரடியாக அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
அழைப்பை ரிஜெக்ட் செய்தாரா மு.க.ஸ்டாலின்?
தவெக ஆட்சிக்கு வந்து, ஆறு மாதங்கள் ஆகி விட்டது. காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் இணைந்தும் 6 மாதங்கள் கடந்து விட்டது. இந்த நிலையில், ராகுல் காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தன் தாயாரின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பதற்காக போன் செய்ததாக கூறப்படுகிறது.
தி இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி பிளவு உள்ளிட்ட சில காரணங்களால் ராகுல் காந்தியிடம் பேச விருப்பம் இல்லாததால், அவர் இதை செய்ததாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி ஆபிஸில் இருந்து, மு.க.ஸ்டாலின் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளப்பட்டு, புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுப்பது குறித்து பேச வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு மு.க.ஸ்டாலினுக்கு வெவ்வேறு வேலைகள் இருப்பதாக பதில் தெரிவிக்கபப்ட்டுள்ளது என்று தி இந்து நாளிதழின் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அழைப்பை ஏற்கவில்லையே தவிர அவர் சோனியா காந்திக்கு அவருடைய புத்தக வெளியீடு குறித்து வாழ்த்து செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
திமுக தரப்பில் கூறப்படுவது என்ன..?
வெளிவந்த இந்த செய்திக்கு, ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். அதில், அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் எங்கள் உரிமை என்றும், யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சோனியாவுக்கு ஸ்டாலின் மீதும், எங்களுக்கு சோனியா மீதும் பெரும் மதிப்பு உண்டு எனவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, இது குறித்து மு.க.ஸ்டாலினிடமும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீடு தொடர்பாக அழைப்பிதழ் வரவில்லை என்றும், தொலைபேசியில் தொடர்புகொண்டு தன் உதவியாளரிடம் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், அதனடிப்படையில் சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன் எனவும், கடிதமும் எழுதியுள்ளேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ராகுல் காந்தி போன் செய்தும் எடுக்காத ஸ்டாலின்? ஏன் இப்படி செய்தார்? பின்னணி என்ன?